சொத்து தகராறில் கணவன்-மனைவி கொலை; 3 வயது குழந்தை கதறி அழுத பரிதாபம்
1 min read
Husband-wife murder in property dispute; The cry of a 3-year-old child is awful
13-5-2020
கரூர் அருகே சொத்து தகராறில் கணவன்-மனைவி கொலை செய்யப்பட்டனர். அவர்களின் 3 வயத குழந்தை கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
சொத்து தகராறு
கரூர் அருகே உள்ள ராயனூர் தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 37), ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி தீபிகா (28). இவர்களுக்கு அக் ஷதா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெங்கநாதன் தனது குடும்பத்துடன் வெள்ளியணை அருகே உள்ள மணவாடி அய்யம்பாளையத்தில் வாடகை வீட்டில் குடியேறினார்.
ரெங்கநாதனின் பாட்டி பாப்பம்மாளுக்கு கரூர் ராயனூர் தில்லை நகர் பகுதியில் 4 சென்ட் நிலம் உள்ளது. இதனை அவர் தனது மகள்கள் கண்ணம்மாள், ராணி ஆகியோருக்கு பிரித்து கொடுத்துள்ளார்.
கண்ணம்மாள் மகன் ரெங்கநாதனுக்கும், ராணியின் மகன்கள் பார்த்திபன், கவுதமன், பிரவீன் ஆகியோருக்கும் அந்த நிலம் தொடர்பாக 10 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு(திங்கட்கிழமை) ரெங்கநாதன் வீட்டுக்கு வந்த அண்ணன்-தம்பிகள் 3 பேரும் வந்தனர். அவர்கள் ரெங்கநாதனையும், அவரது மனைவி தீபிகாவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்தக் கொலை நேரில் கண்ட 3 வயது குழந்தை கதறி அழுதது.
குழந்தை அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அப்போதுதான் கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தலைமறைவான 3 பேரை தேடி வருகிறார்கள்.
பெற்றோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்க, அவர்களின் குழந்தை கதறி அழுததது பரிதாபமாக இருந்தது.