கிருபானந்தவாரியாரின் நகைச்சுவை தோரணம்-1
1 min read
Krishnananda Warrior’s Joke-1
21-5-2020
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், பழுத்த முருபக்தர். இவருக்கு முன்னும் பின்னும் புராண இதிகாச விரிவுரை ஆற்றுவதில் சிறந்தவர் எவரும் இலர் என்று கூறலாம். ஆன்மிக அருள் கருத்துகளை வாரியார் தருவார். அவருக்குப்பின் வாரி யார் தருவார்?
ஆன்மிகச் செய்திகளை அள்ளி வழங்கும் போது இடையிடையே இயல்பாக ஏராளமான நகைச்சுவை த்துணுக்குகளை வாரி வழங்கி வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பதிலும் வல்லவர் அவர்.
கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே, இடையிடையே சிறுவர்களுக்காகச் சில கேள்விகளைக் கேட்டு பதில் சொல்லும் சிறுவர்களுக்குப் புத்தகங்களை பரிசாகக் கொடுக்கும் வழக்கம் உடையவர்.
ஒரு முறை கூட்டத்தில் அமர்ந்திருந்த சிறுவர்களை நோக்கி “முருகனின் தந்தை யார்?” என்ற கேள்வியைக் கேட்டார்.
கூட்டத்திலிருந்து சிறுவன் ஒருவன் சற்றும் தயங்காமல் உடனடியாக சிவாஜி என்று கூறினான். கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் பலமாகச் சிரித்து விட்டார்கள்.
அந்தச் சிறுவன் அதற்கு முன் தினம்தான் திருவிளையாடல் என்ற திரைப்படத்தைப் பார்த்திருந்தான். அப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முருகனின் தந்தையாக நடித்து இருந்தார் அல்லவா? அதை நினைவில் கொண்டு வந்து சொல்லி விட்டான். கேட்டவர்கள் அனைவரும் பலமாக சிரித்து விட்டார்கள்.“ஏன் சிரிக்கிறீர்கள் அவன் சொல்வது சரிதானே,,, முருகனின் தந்தை சிவாஜி தானே. மிகப் பெரியவர்களை குறிப்பிடும்போது அவர் பெயருக்கு பின் ஜி என்பதை சேர்த்து தானே கூறுவோம். காந்தியை காந்திஜி என்றும் நேருவை நேருஜி என்றும் அழைக்கிறோம் அல்லவா?. முருகனின் தந்தை சிவா அவர்களை விட எவ்வளவு பெரியவர். அவர் பெயருடன் ஜி என்பதை சேர்த்து சிவாஜி என்று கூறியுள்ளான்” என்று சொல்லி கைதட்டல் வாங்கினார்.