May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை-30 வீடுகள் உடைப்பு

1 min read
College student murder – 30 houses broken into

கல்லூரி மாணவர் தலைதுண்டித்து கொலை

30 வீடுகள் உடைப்பு; 600 போலீசார் குவிப்பு

30.5.2020

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமம், சேதுராஜா தெருவைச் சேர்ந்த பரமசிவம்-சரஸ்வதி தம்பதியின் 4வது மகன் சத்தியமூர்த்தி (20). தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் பி.காம். 3ம் ஆண்டு படித்தார். நேற்றிரவு 7 மணி அளவில் நடைபயிற்சிக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சத்தியமூர்த்தி வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவர் வழக்கமாக நடைபயிற்சிக்கு செல்லும் பாதையில் தேடிச் சென்றனர். அப்போது தலைவன்வடலி பாலத்தின் கீழே ஒளிக்கோயில் அருகே காட்டுப்பகுதியில் சத்தியமூர்த்தியின் உடல், தலை இல்லாமல் கிடந்தது.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சத்தியமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுக்க வந்தனர். ஆனால் அங்கு திரண்ட தலைவன்வடலி கிராம மக்கள் உடலை எடுக்கவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.

சத்தியமூர்த்தியின் தலையை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்றும் கோரி கோஷங்கள் எழுப்பினர்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தூத்துக்குடி எஸ்.பி. அருண்பாலகோபாலன் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சத்தியமூர்த்தியின் தலையை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது என்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் எஸ்.பி. உறுதியளிக்கவே, சத்தியமூர்த்தியின் உடலை எடுக்க சம்மதித்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே இந்த கொலை வழக்கை ஆத்தூர் போலீசிடமிருந்து ஆறுமுகநேரி போலீசுக்கு மாற்ற எஸ்.பி. அருண்பாலகோபாலன் உத்தரவிட்டார். ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பத்ரகாளி என்ற பவுன் மற்றும் போலீசார், சத்தியமூர்த்தியின் உடல் கிடந்த இடத்திலிருந்து 400 மீட்டர் தூரத்தில் தலை கிடப்பதை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சத்தியமூர்த்தி கொலையால் ஆத்திரம் அடைந்த தலைவன்வடலி கிராம மக்கள் கீழ கீரனூர் கிராமத்திற்கு அதிரடியாக சென்று அங்கு 30 வீடுகளை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து எஸ்.பி. அருண்பாலகோபாலன் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தலைவன்வடலி கிராம மக்களுக்கும், கீழ கீரனூர் பகுதி மக்களுக்கும் கடந்த 4 மாதங்களாக சிறு, சிறு தகராறுகள் ஏற்பட்டு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சத்தியமூர்த்தி மீதும் ஆத்தூர் போலீசில் வழக்கு உள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு தலைவன்வடலியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், கீழ கீரனூர் கிராமத்தில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் காய்களை திருடியுள்ளனர். இது தொடர்பாக இரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பு நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சத்தியமூர்த்தி கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தக் கொலையால் இரு பிரிவினரிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஸ்பிக் நகரில் இருந்து ஆத்தூர் வரை ஏடிஎஸ்பி குமார் தலைமையில் 9 டிஎஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 28 எஸ்ஐக்கள் உள்ளிட்ட 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் முக்காணியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ஆத்தூர் போலீஸ் சரகத்தில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினரிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.