தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா
1 min readCoronation of 1,149 people in a single day in Tamil Nadu
31-5-2020
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
பரவி வரும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமே அதிகரித்து வந்த கொரோனா தற்போது மற்ற மாவட்டங்களிலும் பரவி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றி தினமும் மாலையில் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிட்ட தகவலில் தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 95 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 12,807 மாதிரிகள் சோதனையிடப்பட்டது.
13 பேர் சாவு
கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 13 பேர் இறந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் இன்று10 பேர் இறந்தனர். மதுரை, காஞ்சிபுரம் மற்றும் நாமக்கலில் தலா ஒருவர் இறந்தார்கள். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,757 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,286 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 18,995 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,052 பேரும் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.