பொருத்தம், கடன் சிறுகதைகள்- முத்துமணி
1 min read
Cartoon Vector illustration of two men there has agreed a deal
Poruththam and Kadan – Stories By Muthumani
பொருத்தம்
” கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?”.அப்பா கேட்டபோது இந்தப் பதிலை வாய் சொன்னாலும் மனசுக்குள் இதுவரை ஏற்படாத ஒரு புது வகை மகிழ்ச்சி உண்டானது. உண்மைதான். அது ஒரு வகை உணர்வு, சரியாக விவரிக்க முடியாது.
நண்பர்களோடு ரூமில் தங்கி வேலைக்குப்போவது, ஓட்டலில் சாப்பிடுவது, சினிமாவுக்குப் போவது, அரட்டை அடிப்பது, தம் அடிப்பது,சீட்டு விளையாடுவது, அப்பப்ப சண்டை போட்டுக் கொள்வது இது ஒருவகை இன்பம் தான் . அஞ்சு வருஷம் ஆச்சு அதுக்காக, அதையே தொடர முடியுமா?
புரோக்கர் பொன்னம்பலம், பலபேர் வாழ்க்கையில் மண்ண அள்ளிப் போட்டவன். இவனை மாதிரி ஆட்கள் மட்டும் எப்படி கூச்சமில்லாமல் பொய்யை அள்ளி விடுறாங்க. அழகா பொய் சொல்றாங்க “அருப்புக்கோட்டையில் ,ஒரு பொண்ணு இருக்கு தம்பி, உங்க அப்பா விருப்பம் போலவே டீச்சர் ட்ரைனிங் படிச்சிருக்கா. உங்களுக்கு பொருத்தமா இருக்கும். சாத்தூர்ல ஒரு பொண்ணு இருக்கு. சங்கரன்கோயிலில் ஒரு பொண்ணு இருக்கு அப்படி இப்படின்னு” 99 இடத்துக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டான்.
ஒண்ணும் உருப்படி இல்லை . எனக்குப் பிடிக்கல. சொன்னது முழுக்கப் பொய். வாய் கூசாமல் புழுகி எவளையோ என் தலையில் கட்ட பார்க்கிறான் .
“யோவ் பொன்னுச்சாமி இங்க பாரு, உன் பின்னாடியே இனிமே என்னால அலயமுடியாது. நல்ல கலருண்ணு ஒருத்திய காட்டின, பனை மரத்துக்குக் கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருந்தா, கேட்டா நம்ம நாட்டு ஒரிஜினல் கலர் தம்பின்னு சொல்ற. உயரம் ஐந்தேகால் அடி இருக்கணும்னு சொன்னேன். அதே உயரம் தான்னு சொல்லிக்கூட்டிட்டுப் போன. உயரம் சரியாகத்தான் இருந்தது அகலம் தான் 6 அடி. முடி நீளமா இருக்கணும்னு சொன்னேன். தலையை அவுத்துவிட்டா இடுப்பைத் தொடும்ன்னு சொன்ன. அவ தலையை அவுத்து விட்டால், தரையிலே விழுகுது ஒட்டுமுடி.
இப்ப சொல்லிட்டேன். பாக்கப்போறது 100ஆவது பொண்ணு. இது பிடிச்சா கல்யாணம் இல்லாட்டி வேண்டவே வேண்டாம். நல்ல சிவப்பு கலர் .மூக்கும் முழியுமா இருக்கணும். என்ன விட அரை அடி உயரம் கம்மியா இருக்கனும். ஒல்லியாக இருக்கணும்.”
“தம்பி, நீ சொல்ற எல்லாம் அப்படியே இருக்கு. அவ கண்ணு, அவ மூக்கு, இப்ப நான் சொல்ல மாட்டேன். வந்து பாரு உனக்குன்னு பிறந்துருக்கா . பார்த்ததும் சும்மா அசந்து போய்டுவே. கோவில்பட்டி தான்.”
“நான் நம்ப மாட்டேன் உனக்கு கமிசந்தான் முக்கியம். அதுக்காக நல்லா அளந்து விடு”.
“சத்தியமா தம்பி நம்பு”.
பஸ்ஸில் போ ம்போது மீண்டும் ஒரு முறை கேட்டேன்.
“பொண்ணோட கண்ண மட்டும், வந்து பாரு. அப்படி கண்ண பார்த்திருக்க மாட்டே! அவ மூக்கு எடுப்பான மூக்கு . மஞ்சள் கிழங்கு மாதிரி இருப்பா.”
“யோவ் குண்டா?”
“இல்ல தம்பி பொண்ணு கீழ குனிஞ்சான்னா இடுப்பு ஒடிஞ்சிடும். அப்படி ஒல்லியான தேகம். தலைமுடி யை இழுத்து வேணாலும் பாத்துக்க. ஒரிஜினல் ஆறடிக் கூந்தல்.”
“யோவ் படிப்பு?”.
“டீச்சர் வேலை பார்க்கிரா.”
“யோ வயசு?”
“உன்னைவிட அஞ்சு வயசு குறைவு”.
எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. கற்பனையில் மிதந்தேன் என்னோட ஹீரோயின் கிடைச்சுட்டா. நம்பிக்கையோடு இறங்கியாச்சு.
அந்த வீட்டில நல்ல கவனிப்பு இனிப்பு காரம். திரும்பிப் பார்த்தேன். பொன்னுச்சாமி, நாலஞ்சு லட்ட காலி பண்ணிட்டான். மெதுவா அவனைத் தொட்டு பொண்ணா வரச் சொல்லு என்பது போல் ஜாடை காட்டினேன்.
“ஆமாமா. சரி பொண்ண வரச்சொல்லுங்க.”
உள்ளிருந்து கொலுசு சத்தம் கலகலக்க தலையைக்குனிந்தவாறு வந்தது அந்த தேவதை.
“ஆஹா இந்த முறை பொன்னுசாமி நம்மளை ஏமாத்தல நல்லவன்தான் அவன் சொன்னதெல்லாம் அப்படியே இருக்கு . என்ன கலர் எலுமிச்சம் பழம். நல்ல ஸ்லிம் பாடி குனிந்து காபி கொடுத்தாள். லக்ஸ் மணம். வாங்கிக்கொண்டு குடிக்காமல் அவள் முகத்தை பார்க்க நினைத்தேன் அவள் குனிந்து கொண்டு இருக்கிறா. பக்கத்துல திரும்பி புரோக்கர் கிட்ட
“முகத்த காட்டல சொல்லும்.”
*குழந்தை, பாப்பா கொஞ்சம் அப்படியே நிமிர்ந்து மாப்பிள்ளையை பாரும்மா” என்றான் பொன்னுச்சாமி.
கூச்சப்பட்டுக் கொண்டு மெதுவாய் நிமிர்ந்து என்னை பார்த்தாள். தூக்கி வாரி அடித்தது. முகத்தில்தான் மூக்கை பார்த்திருக்கிறேன் அப்போதுதான் மூக்கில் ஒரு முகத்தை பார்த்தேன். மூஞ்சில முக்காவாசி மூக்கு. கும்பகர்ணன் மூக்கு மாதிரி ரெண்டு யானை உள்ள போய்ட்டு வந்துடும் . நிமிர்ந்து கண்ணைப் பார்த்தேன் அழகான கண்கள் தான் ஆனால் இரண்டும் ஒரே திசையைப் பார்த்தால் நல்லது. ஒரு கண் மேற்கும் ஒரு கண் கிழக்கையும் பார்க்குது .அப்படி ஒரு மாறு கண்ணு. என் கோபம் பொன்னுச்சாமி மேலதான்.
அந்தப் பொண்ணு என்ன செய்யும் இவன் தானே எல்லாத்துக்கும் காரணம். கண்ணையும் மூக்கையும் பாராட்டிப் புகழ்ந்துகிட்டே வந்தவன் அவன்தானே. திரும்பி அவனிடம் பேசலாம் என்று பார்த்தேன் அவன் மிக்சர் தின்னுகிட்டு இருக்கான். எப்படித்தான் செமிக்கும் இவனுக்கு?.
“யோவ் ,பொன்னம்பலம்” சத்தத்தை குறைத்துக் கொண்டு அந்தப் பெண்ணுக்குக் கேட்டுவிடக் கூடாதுன்னு மெதுவா அவன் காதில் “இதுவா கண்ணு ? இதுவா மூக்குன்னு?” கேட்டேன்.அவள் மனம் வருத்தப்பட்டு விடக்கூடாது அல்லவா?.
இப்போது பொன்னம்பலம் சொல்லுறான், என் தொடையில் தட்டிக்கொண்டு, சும்மா சத்தமா பேசு தம்பி பொண்ணுக்கு ரெண்டு காதும் கேட்காதுல்ல.. . அடப்பாவி “வாய் பேச முடியாத பொண்ணு இருக்கா கைவசம்?”
அவன் அதுக்கும் அசரவில்லை “எங்கேயும் அலைய வேண்டாம். அடுத்த தெருவுல இருக்கு தம்பி” “வாயா முதலில் அந்தப் பொண்ணப் பார்த்திடலாம்”.
—-_____——______——
[ கடன்

பைக்கில் கிட்டத்தட்ட எண்பது கிலோ மீட்டர் பயணம். ரோடு மோசம். கஷ்டம்தான். அப்பாக்கு, என்ன ஒரு நேர்மை குணமோ?. அந்தகாலத்து ஆளு. நடக்க மாட்டாம படுதுக்கிடக்கார். அம்மா போய் அஞ்சி வருஷமாச்சி.அந்தக் காலத்து ஸ்கூல் வாத்தியார்.
எங்கேயோ முப்பது வருஷத்துக்கு முந்தி ஒண்ணா வேலை பார்த்தாராம் சுப்புகுட்டி. அவசரத்துக்கு அவருட்ட இவரு 100 ரூபா கைமாத்தா வாங்கினாராம். திருப்பிக் கொடுப்பதற்குள் அவர் டிரான்ஸ்பர்ல வேறு ஊருக்குப் போய்ட்டாராம். இவர் மனசாட்சி இப்போ குத்துது. பணத்தை வட்டியுடன் திரும்பக் கொடுதுடனுமாம். இல்லன்னா நல்ல சாவு வராதாம். அது மட்டுமில்லாம எங்கம்மா வீட்டில் பேசி எங்கப்பா கல்யாணத்தை அவருதான் முடிச்சி வச்சாராம்.
அவர், அதுக்கப்புறம் எந்த ஊருக்கு மாறுதலாகி போனாரோ?. அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் லெட்டர் போக்குவரத்து எதுவும் கிடையாது. அட்ரஸ் கூடத் தெரியல போன் நம்பரும் கிடையாது. உயிரோடு இருக்காரோ? இல்லீயோ?. அவருக்குச் சொந்த ஊர் இந்தக் கிராமம்தான்ன்னு எப்பவோ சொன்னாராம். ஆள் எப்படி இருப்பாருன்னு அடையாளம் சொல்லி என்னை அனுப்பிட்டார் அப்பா.
முப்பது வருஷமா அந்த அடையாளம் மாறாமலா இருக்கும்.? எனக்குத் தெரிந்து எங்க அப்பாவை எவ்வளவு மாறி இருக்காரு.
ஊருக்குள்ள இறங்கின இடத்துல டீக்கடை. நான்கைந்து பேர் டீ குடித்துக் கொண்டிருந்தாங்க. டீக்கடைக் காரருக்கு ஒருவேளை தெரிஞ்சிருக்கும். “அண்ணே எனக்கு வெளியூர். உங்க ஊர்ல சுப்புகுட்டி வாத்தியாரைப் பார்க்கணும்.”
டீ குடிச்சிக்கிட்டிருந்த ஒருவன் “சுப்பு வாத்தியாருன்னு இங்க யாரும் இல்லை சார்” எந்றான்.
“அவருக்கு வயசு எண்பது இருக்கும். அவரு அரசாங்கம் கொடுக்கிற நல்லாசிரியர் விருது வாங்கியவர்.”
“அது என்னமோ எனக்குத் தெரியல” என்றான் இன்னொருத்தன்.
“ரொம்ப வருஷத்துக்கு முன்னால ராமநாதபுரம் மாவட்டத்தில் வேப்பங்குளம் கிராமத்தில வேலை பார்த்தார்.”
“தெரியலையேப்பா”.
“இது பனையூர் தானே?.”
“இதுதான் பனையூர்”.
“இதே பெயரில் பக்கத்துல வேற ஊர் இருக்கா?”.
” இல்லியே இந்தச் சுத்து வட்டாரத்துல பனையூர் இதுதான்”.
“அவருக்குச் சொந்த ஊர் இந்த ஊருதான். ரிட்டையர் ஆகி சொந்த ஊருக்குத் தான் போகனும்னு சொன்னாராம். எங்க அப்பா கூட வேலை பார்த்தவர். ஒரு விஷயமா அவரைப் பார்க்க வந்தேன். எப்போதும் வெள்ளை வேஷ்டி வெள்ளைச் சட்டை தான் போடுவார்”.
“அப்படி யாரும் தெரியலையே”.
“அவருக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு உண்டு என்று அப்பா சொன்னார்.”.
” நீ சொல்ற ஆளு இந்த ஊர்ல இல்லப்பா தெரியல.”
“எங்க ஊர்ல சுத்தி சுத்தி வந்தாலும் இந்த நாலு தெரு தான் இருக்கு. அங்க இருக்க எல்லாரையும் எங்களுக்குத் தெரியும் நீ சொல்ற மாதிரி பேருள்ள யாரும் இல்லை தம்பி”.
“அவர் கையில் எப்போதும் ஒரு குடையை வைத்திருப்பார்.”
“குடையா”
“டேய் ராமரு தம்பிக்கு நல்ல ஸ்ட்ராங்கா ஒரு ஸ்பெஷல் டீயை போடு” ஒருவன் ஆர்டர் கொடுத்தான்.
அப்பதான் டீக்கடைக் கழிவுத் தண்ணி போய் சேருமிடத்தில், சாக்கடைக்கு அருகில் ஒரு கிறுக்கன் உட்கார்ந்துகிட்டு யாரோ தூக்கிப் போட்ட வடையைத் தின்று கொண்டிருந்தான்.
“குடிங்க தம்பி. தம்பி வட சாப்பிடுறீங்களா?” கிராமத்துப் பண்பாடு பண்பாடுதான்.
குடிச்சிக்கிட்டே கேட்டேன். “தலைக்கு கூட நேர் வகிடு எடுத்து இருப்பாரு”.
“அப்படியா ?” என்று கேட்டார்கள். ஆனால் யார் என்று தெரியவில்லை.
“ஆள் நல்லா கருகருன்னு கருப்பாக இருப்பார்.”
“நம்ம ஊர்ல எல்லா பயலும் கருவாபயதான்.”
“ஆளு நல்ல உயரம். காந்தியவாதி.”
“தெரியலையே நீங்கள் சொல்ற ஆளு யாருன்னு”.
ஆள் மாத்தி ஆளு தெரியாதுன்னு ஒரே பதில் தான் சொல்றாங்க. எங்க அப்பாவுக்கு வேற வேலை இல்லை. பெரிய கடன் இதை அடைக்கணுமா? .அந்தக் காலத்துப் பெருசுகள் இப்படி மனசாட்சி, கடமை, நேர்மைன்னு… காலம் மாறிப் போனது தெரியாம.
“அண்ணே அந்த வாத்தியாரு…. ” சொல்லமுடியாமல் இழுத்தேன்.
“என்ன தம்பி? சொல்லுங்க அந்த வாத்தியாருக்கு என்ன?.”
“ஒன்னுமில்ல அவர் ஒரு கால சாச்சி நடப்பாராம்.” சொல்லி முடித்ததும் கூட்டத்தில் ஒருவன் சொன்னான் .
“அட நொண்டி வாத்தியாரத் தேடி வந்திருக்காங்க.”
“ஆமா தம்பி அவர் பெயர் சுப்பு குட்டியா?”
“அதெல்லாம் தெரியாது. இந்த ஊர்ல அவர் பேரு நொண்டி வாத்தியார். மத்தபடி நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா அவர் போய் ஏழெட்டு வருஷம் ஆச்சு. அவருக்கு முன்னாலே, அவர் வீட்டம்மா போயிருச்சி. பொம்பளப் பிள்ளையக் கட்டிக் கொடுக்கிறதுக்கு மனுஷன் படாத பாடு பட்டார். அந்தப் பிள்ளை வெளியூரில் இருக்கு. ஆனா பிறந்த வீட்டை எட்டிப் பார்க்காது. பையன் ஒரு குடிகாரன். பொறுப்பில்லாத ரவுடிப்பய. இருந்த ஒரு வீட்டையும் அவன் பெயருக்கு மாற்றி எழுதி வாங்கி அதையும் வித்துக் குடிச்சி, இவருக்கு முந்தியே அவனும் போயச் சேர்ந்துட்டான். கடைசிக்காலத்துல பார்க்க நாதி இல்லாமல் கிடந்து, தூக்குப் போட்டுச் செத்துப் போனார்.”
கேட்டவுடன் மனம் கனத்தது. என்ன சொல்லத் தெரியலை.
“இதோ இந்த பையன் தான் நொண்டி வாத்தியார் பேரன். குடிகாரனுக்குப் பிறந்தவன். இவன விட்டுட்டு, பெத்தவ… எப்படி சொல்லுவேன்?. எவ… கூடய..ஓ….ட்டா. திரும்பி அவனைப் பார்த்தேன். வெற்றுப் பார்வை பார்த்தான். பக்கத்தில் சென்று பாக்கெட்டிலிருந்து இரண்டு 500 ரூபாய் எடுத்து அவனிடம் கொடுத்தேன். வாங்கிப் பார்த்துவிட்டு வீசி எறிந்தான்.
“அந்தப் பைத்தியம் காசு கொடுத்தால் வாங்காதே”. அந்தப் பணத்தை எடுத்து அக்கடைக்காரரிடம் கொடுத்து இந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். அவன் கேட்கும் போதெல்லாம் சாப்பிட ஏதாவது கொடுங்கள். ஒரு வடையை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.
“அண்ணே இந்தாங்க இன்னொரு 500 ரூபாய் அவ்வளவு தான் இருக்கு. இந்தப் பையனுக்கு ஒரு நல்ல டிரஸ் வாங்கி கொடுங்க. இதுதான் என் போன் நம்பர். எதாவத்ணனா எனக்கு போன் பண்ணுங்க.”
இருமிக்கொண்டே அவனோடு அப்பா கேட்டார்
‘”பாத்தியாடா சுப்புகுட்டியைப் பாத்தியாடா? எப்படிடா இருக்கான்? எனக்கு ரொம்ப உதவியா இருந்தவன்.என்ன பத்தி ஏதாவது கேட்டானா? ஞாபகத்தில் வச்சிருக்கானா? கேள்வி மேல் கேள்வியா கேட்டார்.
உண்மையைச் சொன்னா தாங்குவாரா… “ஆமாப்பா பார்த்தேன். உங்களை மாதிரியே அவரும் உங்களை ஞாபகம் வச்சுருக்காரு. வயசு ஆயிடுச்சு. ஆனாலும் நல்லா சுகமா இருக்கிறார்.அவர் பையன் மேல் நாட்டுல இருக்கானாம். புள்ள இன்ஜினியரா சென்னையில இருக்காளாம். உங்கள ரொம்ப கேட்டாரு. பேரன் ஒருத்தன் ஐஏஎஸ் ஆபீஸரா இருக்கானாம். நேரம் கிடைக்கும்போது உங்கள பார்க்க வருவதாகச் சொல்லி இருக்காரு”. அப்பா முகத்தில் மலர்ச்சி
” உங்களுக்கு ரொம்ப புடிக்குமுன்னு இந்த இனிப்பை எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டார்”
-சொன்னதும்” பாத்தியாடா செத்தாலும் என்ன மறக்க மாட்டான்”.
நண்பன் ஆசையா வாங்கி கொடுத்த இனிப்பைத் தின்பதற்காக வழக்கத்தைவிட உற்சாகத்தோடு, நான் தூக்கி விடாமலேயே கட்டிலில் இருந்து கையை ஊன்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்துட்டார் அப்பா. என் கண்களில் இரண்டு சொட்டு நீர்.. மெதுவா சாப்பிடுங்கப்பா, தண்ணி கொண்டு வாரேன்…