April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

ஐந்தருவி ஓடையில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் விஏஓ சஸ்பெண்ட்

1 min read

30.6.2020

VAO suspended in the matter of cutting down trees in the Courtallam Five Rivers

தென்காசி அருகே ஐந்தருவி ஓடையில் ஈட்டி மரத்தை வெட்டி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ஐந்தருவி ஓடை அரசு புறம்போக்கு நிலத்தில், புலம் எண் 1199 என்ற இடத்தில் இரண்டு ஈட்டி மரங்கள் இருந்தன. இவற்றில் ஒரு ஈட்டி மரம் கடந்த மாதம் சில மர்ம நபர்களால் வெட்டப்பட்ட நிலையில், கடந்த வாரம் மேலும் ஒரு ஈட்டி மரம் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

குற்றாலம் வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன், பயிற்சி வனச்சரக அலுவலர் பிரபாகரன், வனவர்கள் பாண்டியராஜ், அழகர் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மரங்களை வெட்டி கடத்தியதாக சிவராமபேட்டையை சேர்ந்த சாமி (47), அச்சன்புதூரை சேர்ந்த வேலுச்சாமி மகன் முத்துராஜ் (33), முருகையா (52) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான ரோஸ்வுட் எனப்படும் தோதகத்தி மரப்பலகைகள் கைப்பற்றப்பட்டு அரசு மரக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணைக்கு பிறகு மூவரையும் கடந்த 18ம் தேதி செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சங்கரன்கோவில் கிளை சிறையில் அடைத்தனர். மரம் கடத்தல் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற தகவலின் பேரில் வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். இதில் இலஞ்சி வருவாய் கிராம நிர்வாக அலுவலருக்கும், குத்துக்கல்வலசையில் இயங்கும் தனியார் மர அறுவை மில் அதிபருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மர அறுவை மில்லில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையில் கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் (41), மர அறுவை மில் உரிமையாளர் பாலகிருஷ்ணன் (68) ஆகியோரின் பெயரையும் சேர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இலஞ்சி வருவாய் கிராம நிர்வாக அலுவலர் நடராஜனை தென்காசி கோட்டாட்சியர் பழனிகுமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார். மரம் கடத்தல் சம்பவத்தில் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.