குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
1 min read
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
Increase in water inflow in Courtalam Falls6.7.2020
குற்றாலத்தில் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது சாரல் பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மழை இல்லை. இதனால் அருவிகளில் சிறிதளவு தண்ணீருடன் ஜூன் மாதம் கடந்துவிட்ட நிலையில், ஜூலை மாதம் துவங்கிய பிறகு கடந்த இரண்டு தினங்களாக மாலை, இரவு நேரங்களில் குற்றாலம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மெயினருவியில் ஆண்கள், பெண்கள் பகுதியிலும், ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்த போதும் ஊரடங்கு காரணமாக யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கமாக ஜூலை மாதத்தில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். சீசனும் களைகட்டி காணப்படும். தற்போது கொரோனா, ஊரடங்கு, அருவிகளில் குளிக்க தடை காரணமாக குற்றாலம் களை இழந்து காணப்படுகிறது. நேற்று பகலில் சாரல் இல்லை. சற்று வெயில் காணப்பட்டது. மாலையில் இதமான காற்று வீசியது.