May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

சாத்தான்குளம் விவகாரத்தில் மேலும் 3 போலீசார் மதுரை சிறையில் அடைப்பு

1 min read

மதுரை ஜெயில்

9.7.2020

3 more policemen detained at Madurai jailed

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 போலீசார் இன்று அதிகாலை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைதான எஸ்ஐ உள்பட 2 பேருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி அவர்களை சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர்கள், கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் இறப்புக்கு போலீசாரும், பிரண்ட்ஸ் ஆப் போலீசாரும் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களை விடிய, விடிய லத்தியால் தாக்கியதே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அவர், கோவில்பட்டி சிறை, சாத்தான்குளம் காவல்நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினார். இறந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசார், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று ஐகோர்ட்டில் புகார் தெரிவித்தார். அதன்பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது.

சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் போலீசார் முத்துராஜ், முருகன் ஆகியோரை கைது செய்தனர். அதன்பிறகு 5 பேரும் கடந்த 4ம்தேதி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவைச் சேர்ந்தவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கையான 35ல் 26 போலீசார் சம்பவத்தன்று பணியில் இருந்துள்ளனர்.

இவர்களில் பெண் காவலர் ரேவதியை தவிர மீதியுள்ள 25 பேரில் 10 போலீசாரையும், 4 பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடமும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை சிபிசிஐடி போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் செல்லத்துரை, சாமத்துரை, போலீசார் வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை குற்றம், சாட்சியத்தை மறைத்தது, கொடும் செயல் புரிய உதவி செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 5 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு உடற் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எஸ்ஐ பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் இருவருக்கும் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பிறகு ஏட்டுகள் செல்லத்துரை, சாமத்துரை, போலீசார் வெயிலுமுத்து ஆகியோர் தூத்துக்குடி நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர் அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் பேரூரணி மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ்ஐ பால்துரை, காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்ததும் அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.