May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவிலில் வாகன சோதனையில் அத்துமீறல்-இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ, போலீசார் மீது வழக்குப்பதிவு

1 min read

10/7/2020

case against Inspector, 2 SI, police persons

சங்கரன்கோவிலில் வாகன சோதனையில் அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐகள் மற்றும் 3 போலீசார் மீது ஐகோர்ட் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மலையான்குளம் அருகே ஜெருசலேம் தர்மநகரைச் சேர்ந்தவர் அமராவதி மகன் தங்கதுரை(27). இவரது நண்பர் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 3ம் தெரு ராமகிருஷ்ணன். இருவரும் கடந்த ஜனவரி 22ம்தேதி புளியங்குடி ரோட்டில் பைக்கில் வந்தனர். அப்போது ரோந்து சென்ற எஸ்எஸ்ஐ சங்கரநாராயணன், காவலர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் அவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது தங்கதுரை தனது வாகன ஆர்சி புக் மழையில் நனைந்து விட்டதால் செல்போனில் சாப்ட் காப்பி எனப்படும் ஆன்லைன் காப்பியை எடுத்துத் தருவதாக கூறி செல்போனை எடுப்பதற்குள் போலீசார் அவர்களை தாக்கியதுடன், குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிய முயன்றுள்ளனர். தொடர்ந்து அவரை போலீசார் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, போலீசார் விசாரிக்கும் போது ஏன் செல்போனை பார்த்துக் கொண்டு பதில் சொல்லவில்லை என்று அவதூறாக பேசி அடித்து உதைத்துள்ளார். அங்கிருந்த காவலர்களும் தாக்கியுள்ளனர். பின்னர் போலீசாரை தாக்கியதாக தங்கதுரை மீது வழக்கு பதிந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் போலீசார் தாக்கியதால் படுகாயமடைந்ததாக கூறி தங்கதுரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்ற அவர், போலீசார் தன்னை தாக்கியதாக சங்கரன்கோவில் டவுன் காவல்நிலையத்திலும், நெல்லை எஸ்பியிடமும் புகார் தெரிவித்தார்.

இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வக்கீல் பாஸ்கர் மதுரம் மூலம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயலெட்சுமி, புகாரின் மீது தகுந்த முகாந்திரம் இருப்பின் டவுன் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, எஸ்ஐ அன்னலட்சுமி, 2 எஸ்ஐ மற்றும் 3 போலீசார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிய உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் போலீசார் வழக்குப் பதியாததால் தங்கதுரை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் கண்ணன், பாஸ்கர் மதுரம் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகாரின் மீது முகாந்திரம் இருப்பதால் சங்கரன்கோவில் காவல்நிலையம் தவிர்த்து வேறு காவல்நிலையத்தில் வழக்குப்பதிந்து டிஎஸ்பி விசாரணை நடத்தவும், தென்காசி எஸ்பி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்திய நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, நீதிமன்ற உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் தங்கத்துரை மீது பொய் வழக்குப்பதிந்தும், மனுதாரரை சட்டவிரோதமாக காவலில் வைத்து அவதூறாக பேசி தாக்கியதாகவும், வழிமறித்து கொலைமிரட்டல் விடுத்தல், லஞ்சம் கேட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்.இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், போலீசார் செந்தில்குமார், டேவிட்ராஜ், மகேஷ்குமார் ஆகிய 6 பேர் மீது நெல்லை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்தார். இந்த சம்பவம் தென்காசி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 பிரிவுகளில் வழக்கு

சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐகள், 3 போலீசார் மீது 120 பி, 147, 148, 177, 182, 203, 211, 217, 218, 294 பி, 341, 342, 324, 326, 307, 506 (2), ஊழல் தடுப்பு சட்டம் 13 ஆகிய 17 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த வழக்கில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சங்கரன்கோவிலில் போலீசார் மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.