May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

ஒரு வரம்/ சிறுகதை / முத்துமணி

1 min read

Oru varam / story by Muthumani

1-8-2020

சாயங்காலம் வழக்கமா ஆறு மணிக்கு வாசலில், போர்டிகோவில் நாற்காலியில் அமர்ந்து, எதையாவது வாசித்துக் கொண்டு,தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு கொஞ்சம் பொழுது போக்குவது உண்டு. ஆனால் கொசுக்கள் அதை விரும்புறதில்லை. சேர்ந்து வந்து கடித்துத் போடா வீட்டுக்குள்ளேன்னு துரத்தி விடுவது உண்டு. கொசுக்களை ஒழிக்க வழியே இல்லையா?.

சில நேரங்களில் அடுப்பு வேலை இல்லை என்றால் அவளும் வந்து அமர்ந்து கொள்வாள். எதையாவது தின்றுகொண்டே பேசிக்கொண்டிருப்போம். ஆர்வமாய் ஆரம்பித்த பேச்சு சமயத்தில் சண்டையில் போய் முடியும் என்பது வேறு விஷயம்.
“என்னது இது டீயா?”
“இல்லங்க காப்பி”.” டம்ளர் மேலே காப்பின்னு எழுதி வை. அப்பதான் வித்தியாசம் தெரியும்”.
இப்படிக் கொஞ்சம் காமெடியாப் பேசுறது என் வழக்கம். அதை மாத்த முடியல.

அன்றும் அப்படி ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருந்தபோது, யாரோ கைத்தடியைத் தரையில் ஊன்றிக் கொண்டு வரும் சத்தம் கேட்டது. தெருவை உற்று நோக்கினோம். எங்கள் வீட்டைக் கடந்து வயதானஒரு தம்பதியர் போய்க் கொண்டிருந்தனர்.
அவருக்கு வயது எப்படியும் எண்பதுக்கு மேல் இருக்கும். அந்த அம்மாவுக்கு அவரைவிட நான்கு ஐந்து வயது குறைவாக இருக்கலாம். கேட் தாண்டி அவர்கள் நடந்து செல்வதை எட்டிப்பார்த்தேன்.
டிப் டாப் டிரஸ். அவர் வலது கையில் கைத்தடி. இடதுகையை, வயதான அவர் மனைவியின் வலது கையோடு இறுக்காமாகக் கோர்த்துக் கொண்டு இருவரும் நடந்து செல்வதைப் பார்த்தவுடன் எனக்குள் இயல்பாக இருக்கும் நகைச்சுவை உணர்வு என்னை அறியாமல் வெளிப்பட்டு விட்டது.

“கைகளைக் கோர்த்துக் கிட்டு இளம் ஜோடிகள் ஹனிமூனுக்குப் போகுது பாரு”.

விசிலடித்துக் கொண்டே நான் சொன்னதும்,” சும்மா இருக்க மாட்டீங்களா? வாய வச்சுகிட்டு?” என்றாள் சற்று கடுகடுப்பாக.
“ரெண்டு பேரும் கைய நல்லாச் சேர்த்து இறுக்கிப் பிடிச்சிருக்காங்கடி. யாராலும் பிரிக்க முடியாது. காதல் ஜோடி. காதலர் பிரியாமல் கவுக்கை நெகிழாமல்.. சிலப்பதிகாரம் படிச்சவங்க போல?” சொல்லிட்டு, லேசாச் சிரிச்சேன்.

“இந்த மாதிரி பேசுறதை எல்லாம் முதலில் விடுங்க.எதுக்கெடுத்தாலும் யாரையாவது கேலி பண்ணிட்டு”.
“கேலி பண்ணலடி அவங்க ஒத்துமையாப் போறதப் பாராட்டினேன்.அவ்வளவுதான்.”
“இப்படில்லாம் பேசாதீங்க. அவங்க ரொம்ப வயசானவங்க. அந்த வயசுல சேர்ந்து வாழக் கொடுத்து வச்சிருக்கணும். அந்த வயசுல நாமெல்லாம் உயிரோடு இருப்போமா? இல்லையோ?”.என்றாள்.

” ஐயோ, சரிம்மா தெரியாம பேசிட்டேன். ஆமா, அவங்க யாரு? இன்னைக்குத்தான் நம்ம தெருவுல பார்க்கிறேன்”.
“நானும் இப்பதான் பார்க்கிறேன்.யாருன்னு தெரியல”.
மறுநாளும் மாறாமல் அதே நேரம் அதே ஜோடி, யாரையும் திரும்பிப் பார்க்காமல் நடந்து போனார்கள். பேண்ட் டக்கின் செய்து, காலில் ஷூ போட்டுக்கிட்டு, ஸ்டைலா அந்தப் பெருசு, பெருசு கூடவே இங்கிலீஷ் கிழவி மாதிரி குட்டைக் கை வைத்த நீளமான கவுன் போட்டுக்கிட்டு அந்தக் கிழவி. வயசான சவுகார்ஜானகி மாதிரியே வெள்ளை தலைமுடி. கிராப்.

“ஹாஹா! யார் இந்த ரோமியோ ஜூலியட்?.அப்படி எங்க தான் போறாங்க? எங்கிருந்து வாராங்க? வயசான காலத்துல பேசாமல் வீட்டில் கிடக்கலாமே!”.
“நேத்தே சொல்லிட்டேன். உங்களுக்குச் சொன்னா கேக்க மாட்டீங்களா?. வாக்கிங் போங்க போங்கன்னு சொன்னாலும் நீங்க போவீங்களா? யார் போனா உங்களுக்கென்ன?”.
“அவங்களச் சொன்னா உனக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது?”.
“உங்களல்லாம் திருத்த முடியாது. கொசு கடிச்சா உள்ள வாங்க. ரொம்ப நேரம் வெளியே உட்கார வேண்டாம். கொரோனா வேற வேகமாப் பரவுது.”

மறுநாள் காலையில் கோலம் போட்டுட்டு உள்ள வந்தவ, “எதுத்த வீட்டு அக்காவிடம் கேட்டேன்”.
“யாரு ஒரு நைட்டியைப் போட்டுக்கிட்டே திரியுமே”. “யாரைப் பார்த்தாலும் கேலி உங்களுக்கு”.
“இல்லம்மா, அந்தம்மா சைசுக்கு நைட்டி கிடைக்காது. எங்கேயாவது சொல்லி வச்சு ரெடி பண்ணனும். நைட்டி கட்டாயம் போடணும்னு சட்டமா என்ன?. யாருக்குச் சேருமோ அவங்க போடணும். இவங்க உயரத்துக்கும் உடம்புக்கும் தச்சிட்டுப் போட்டாளா? இல்ல, போட்டுகிட்டு தச்சாளா?. திருவாரூர் தேரு. நைட்டி உயரமும் சரி இல்ல. முட்டு வரைக்கும்தான் இருக்கு”.
“அந்தப் பெரியவங்க அதுதான் சாயங்காலம் வாக்கிங் போறாங்கல்ல, அவங்க சென்னையிலிருந்து வந்திருக்காங்களாம். அந்தப் பெரியவர் ஏதோ டிபார்ட்மெண்ட்ல அதிகாரியாக இருந்து ரிடையர்டு ஆனவராம். ஒரே மகன் பெரிய டாக்டரா லண்டன்ல இருக்காராம்.
அடுத்த காலனியில் ஏழாவது தெருவில், ஒரு வீடு ரொம்ப வருஷமா பூட்டியே கிடக்கும்ல்ல. அந்த வீடு இவங்க வீடுதானாம்.”

“ஓஹோ அப்படியா?. இப்ப அந்த வீட்லதான் ரெண்டு பேரும் இருக்காங்களா?”.
“மெட்ராஸ்ல வீடு கட்டிருந்தாங்களாம். பெரியவர் கிட்னி நோய் வந்து ரொம்ப கஷ்டப்பட்டுருக்காரு. அவங்க ஒரே மகன்தான் இவருக்குக் கிட்னி கொடுத்தானாம்.மெட்ராஸ் வீட்டை வித்துட்டாங்களாம்.பார்க்கிறதுக்கு ஆளில்ல. கடைசிக் காலத்துல இங்க வந்துருக்காங்க.”.
“இதுக்கு மேல விவரம் வேணும்ன்னா அடுத்த வீட்டு ஆல் இந்தியா ரேடியோ கிட்ட கேளு. சொல்லுவா.”

அந்த அக்கா வீட்டுக்காரருக்கு இது கேட்டா வாயிலேயே வெட்டுவார்.
வாக்கிங் ஸ்டிக் சத்தம் கேட்டது. வழக்கம்போல, அதைவிட நீட்டா டிரஸ் பண்ணிட்டு ரெண்டு பேரும் வந்தாங்க. கேட்டைத் திறந்துகொண்டு இவள் போய் வணக்கம் சொல்லி கும்பிட்டா.
இருவரும் நின்று, “நீ யாருன்னு எனக்குத் தெரியலையே?” என்றாள் அந்தப் பாட்டி. நாங்க பத்து வருஷமா இங்கக் குடியிருக்கிறோம். என்று தொடங்கித் தான் கேள்விப்பட்ட எல்லா விவரமும் சொன்னாள்.

“கிட்னி ட்ரபுள் இவருக்கு இல்லம்மா எங்க மகனுக்குத்தான். அவனோட முப்பது வயதில். இவர்தான் அவனுக்குத் தன் கிட்னியக் கொடுத்துருக்கார். அதோட ஹார்ட் பிராப்ளம் இருக்கு இவருக்கு.”
அந்த அம்மா பேசினாங்க. அந்தப் பெரியவர் ஒன்றும் பேசல. “அந்தக் காலத்துல இவரு இந்த ஊர்ல வேலை பார்க்கும் போது கட்டின வீடு இது. அப்புறம் மாறுதலாகி, எங்கெல்லாமோ வேலை பார்த்துவிட்டுக் கடைசியில் மெட்ராஸ்ல செட்டிலாகிட்டோம்.
ரொம்ப நாளா எங்களுக்குக் குழந்தை இல்லை. அதனால எங்கேயும் எதுக்கும் போறது இல்ல.அவர் அதை ஒரு பெரிய குறையா நினச்சி ஒரு தாழ்வு மனப்பான்மை.எனக்கு 45 வயசு இருக்கும் போது ஒரு பையனைத் தத் தெடுத்தோம். அவனை எங்கள் உயிரா நெனச்சு வளர்த்து டாக்டர் ஆக்கினோம். கல்யாணம் பண்ணி வச்சோம். இவனோடு வாழ முடியாமல் டைவோர்ஸ் வாங்கிட்டுப் போயிட்டா.
நாங்க அவனுக்கு நிஜமாவே அப்பா அம்மாவாத்தான் இருந்துருக்கோம். ஆனா அவன் ஒரு நாளும் எங்களுக்கு மகனா இருந்ததில்லை. விவரமா எங்களை ஏமாத்திருக்கான். எங்க சொத்து,பணம் மேலத்தான் அவனுக்குப் பாசம். எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டான். வளர்த்த பாசம் கொஞ்சம் கூட அவன்கிட்ட இல்ல. ஆனா எங்ககிட்ட அதிகமா இருக்கு. அவனுக்குக் கெட்ட பழக்கம் அதிகம். படிக்கும்போதே இருந்திருக்கு. கண்டிக்க முடியல. கிட்னி கெட்டுப் போச்சு. அப்போது வந்து அழுதான். இவர் கிட்னி சேருதுன்னு டாக்டர்கள் சொன்னாங்க. தயங்காமல் கொடுத்துட்டார். பிறகு ஒருமுறை இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. ஆஞ்சியோ பண்ணி ரெண்டு ஸ்டண்ட் வச்சிருக்கு.”

“உங்க மகன் லண்டன்ல இருக்கிறாரோ?”.
“அதெல்லாம் இல்லம்மா. மெட்ராஸ்லதான் இருக்கான். குடிச்சுட்டு எங்காவது கிடப்பான். இந்த ஊர்ல ஒரு வீடு இருக்குங்கிற விஷயம் அவனுக்குத் தெரியாது. தெரிஞ்சா இதையும் வித்துப் பணத்தைக் கொடுன்னு கேட்பான்.. அவனுக்குத் தெரியாமல் மார்ச் மாசம் இங்கு வந்தோம். குரோனா வந்து லாக்டவுன்ன் போட்ட பிறகு இங்கிருந்து போக முடியாமல் இங்கேயே இருக்கோம். துணைக்கு யாரும் இல்லை.மெட்ராஸ்லருந்து ஒரு வேலைக்காரியைக் கூட்டிக்கிட்டு வந்தோம். வீட்ல இருந்த கொஞ்சம் பணத்தையும் நகைகளையும் எடுத்துட்டு எங்கேயோ ஓடிட்டா. இப்போ போனில் சாப்பாடு ஆர்டர் பண்ணி ரெண்டு பேரும் சாப்பிடுவோம் ராத்திரிக்குப் பழம் மட்டும். ஹார்ட் ஆபரேஷன் பண்ணிருக்கதனால இவர் தினமும் வாக்கிங் போணும்.தனியாப் போனா கீழே விழுந்துட்டாருன்னா?. அதனாலதான் நான் கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போவேன். இன்னிக்கு இவருக்கு பிறந்தநாள். அவர் ஒரு விவரமும் தெரியாத பச்சப்புள்ள. அவரை, நான் பாப்பான்னுதான் கூப்பிடுவேன். இவர் மட்டுமா? எல்லா ஆம்பளைகளும் கிட்டத்தட்ட இப்படித்தான். என்ன வீராப்பு பேசினாலும் மனசுக்குள்ள சின்னப் புள்ளைங்கதான் .எங்க காலனியில் கடை ஏதும் இல்ல.இப்படியே வந்து அந்த ரோட்டுக் கடையில ரெண்டு வாழைப் பழம் வாங்கிட்டுத் திரும்ப அந்த வழியா வீட்டுக்குப் போயிடுவோம். அதையும் ஒருநாள் போலீஸ்காரங்க சத்தம் போட்டாங்க. யாருமே எங்களை என்னன்னு கேட்கல்ல. நீ தாம்மா பேசிருக்கே. நீ நல்லா இருக்கணும். மெட்ராசில் இருந்து வந்ததால் எங்களுக்குக் கொரோனா இருக்குமோன்னு எல்லாரும் பயப்படுறாங்க.” பெரியவர் லேசாக இருமினார்.
” போலாமா பாப்பா. அவர் அவ்வளவா பேசமாட்டார். வரட்டுமாம்மா. அவரால ரொம்ப நேரம் நிக்க முடியாது. ம்….ம்..உன்ன மாதிரி ஒரு பொண்ணு, என் வயித்துல வந்து பிறக்காமல் போச்சு.”

டக் டக் என்று ஊன்றுகோல் சத்தம் . புறப்பட்டு விட்டார்கள்.
அவங்க சொன்னதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. ஆனாலும் நான் ஒன்றும் பேசவில்லை.
“கல்யாணமான புதுசுல, நாம ரெண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் கோர்த்துகிட்டு அலஞ்சோமே, அங்கிட்டும் இங்கிட்டும்,பஸ்ஸில் போனாலும், ஊருக்குப் போனாலும், ஊட்டிக்குப் போனாலும் அது வெறும் உடலும் உடலும் உரசலுக்கு. கிளுகிளுப்பு,சுகத்துக்கு. இப்போ இவங்க கைகோர்த்துக்கிட்டுப் போறாங்களே அது, ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு உள்ள அக்கறை, பாதுகாக்கும் உணர்வு. ஒருத்தருக்கு ஒருத்தர் காட்டும் ஆதரவு. அவங்களுக்குள்ள பாக்கியிருக்கிறது உயிரோடு ஒட்டிக்கிட்டு இருக்கிறது, அன்பு ஒண்ணுதாங்க”.
ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தாள். எனக்கு ஒன்றும் பேசத் தோணல. ஆனால் வழக்கமா வரும் காமெடி கமெண்ட் மட்டும் வரவில்லை..
விடிய விடிய தூக்கமில்லை. என்னவெல்லாமோ கனவுகள், நினைவுகள் வந்து போயின. இரண்டு மணி இருக்கும் லேசான காய்ச்சல் அடிப்பது போல ஒரு ஃபீலிங். எந்திரிச்சி ஹாலுக்கு வந்து தர்மா மீட்டரைத் தேடி உருட்டிய சத்தம் கேட்டு எந்திரிச்சி வந்துட்டா.
“என்னாச்சு என்ன தேடுறீங்க? தூங்கலையா.”
“தர்மா மீட்டரை எங்கடி வச்சுத் தொலைச்ச. காய்ச்சல் அடிக்குது. தொட்டுப் பார்த்தா. அதெல்லாம் ஒன்னும் இல்லை. உடனே டேபிள் டிராயரை திறந்து தர்மா மீட்டர் எடுத்து வச்சுப் பார்த்துட்டு” நார்மல்” என்றாள்.

"என்ன பயம் உங்களுக்கு? வீட்டை விட்டு வெளியே போறதே இல்ல தைரியமா இருங்க".

“எனக்குத்தான் எதுனாலும் லேசா வந்துடும்டி. உனக்குத்தான் ஒன்னும் வராது. காய்ச்சல் தலைவலின்னு கூட படுக்க மாட்ட”.
“காய்ச்சல் தலைவலின்னு படுக்க மாட்டேன். அது சரிதான் ஆனா வராது வரலைன்னு யார் சொன்னா.” அப்படியே டெட்டாலில் கழுவி, தன் வாயில் வைத்து வெளியில் எடுத்து காட்டினாள். உற்றுப் பார்த்தேன் 102 காட்டியது.
“காய்ச்சல் அடிக்குது’ தலை வலிக்குதுன்னு சொன்னா அதுக்கு ரெண்டு கேலியும் கிண்டலும் பண்ணுவீங்க. அல்லது தையா தக்கான்னு குதிப்பீங்க .அதனால சொல்லுறது இல்ல. போய் படுங்க”.

கிச்சனுக்குப் போய் கொஞ்சம் பால் ஊற்றிக் கொண்டு வந்து "இந்தங்க குடிங்க." பக்கத்தில் அமர்ந்து கொண்டு கை கால்களை அமுக்கிவிட்டுத் தூங்குங்க. என்றாள். கண்களை மூடிக்கொண்டு, தூக்கம் வரவில்லை. கல்யாணமான இந்த 25 வருஷத்துல நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தன. வேலைக்குப் போவதைத் தவிர வேற எதை பொறுப்பா நாம செஞ்சோம்?.வெளியூர்ல கட்டிக் கொடுத்திருக்கிற ஒரே பிள்ளையப் பார்க்கக்கூட, இவ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டால்தான் போறது. போனில் கூடச் சரியாப் பேசுறதில்லை.பாத்ரூமில் போய் நின்னுக்கிட்டு வேட்டியைக் கொண்டா, சோப்பக் கொண்டா, சட்டையைக் கொண்டான்னு நூறு தடவை கூப்பிட்டாலும் அசராம மறு பேச்சு இல்லாம வந்துட்டு வந்துட்டு போய் தன் வேலையைப் பார்ப்பா. என்னுடைய சட்டை வேட்டி எங்க இருக்குன்னு கூட எனக்குத் தெரியாது.என்னைக்குக் கல்யாண வீடு? யாருக்கு இன்னைக்குப் பிறந்தநாள்?

எந்த ஊருக்கு எப்போ போனும். எல்லாமே, அவ சொல்லித்தான் எனக்குத் தெரியும்.சம்பளத்தை வாங்கிக் கையில் கொடுப்பேன். என்ன செய்வாளோ தெரியாது சீட்டுப் போடுவாளா? சேர்த்து வைப்பாளா? இன்னைக்கு வரைக்கும் எனக்கு நக வேண்டும் நட்டு வேணும்ன்னு கேட்டதுமில்ல. கடன் வாங்குவதும் அவளுக்குப் பிடிக்காது. வாங்க வேண்டிய அவசியத்தையும் உண்டாக்க மாட்டா. அவளுக்கும் அப்பப்ப உடம்புக்கு முடியாமல் போயிருக்கு. அதை என்னிடம் சொல்லல. அது மட்டும்தான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு.

காலையில் கொஞ்சம் கண் அசந்துட்டேன். என் ரூம் கதவைச் சாத்தி வைத்துட்டு கிச்சனில் சத்தமில்லாமல் வேலை செய்துகிட்டுருக்கா. எழுந்து போய், வாழ்க்கையில் முதல் முறையாக,”இப்ப உடம்பு எப்படிம்மா இருக்கு?” ன்னு கேட்டேன்.
” அதெல்லாம் சகஜமா வரும் போகும். இப்ப சரியாப் போச்சு. இந்தாங்க காப்பி. ஹீட்டர் ஆன் பண்ணிருக்கேன்.குளிச்சிட்டு வாங்க. அந்த ஸ்டூல் மேல நியூஸ் பேப்பர் எடுத்து வச்சிருக்கேன். தேடாதீங்க”.
கிட்டத்தட்ட ஐந்தாறு வருஷங்களுக்குப் பிறகு அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமி ட்டேன். பிறகு எல்லாம் மறந்து போச்சு. சாயங்காலம் வழக்கம்போல வெளியே உட்கார்ந்து, பாரதிதாசனின் முதியோர் காதல் படித்துக்கொண்டிருந்தேன். அருகருகே இருவர் மெத்த அன்பு உண்டு. செயலே இல்லை. ஆஹா பாவேந்தர் அசத்தி இருக்கிறார். வழக்கமாக வாக்கிங் செல்லும் அந்தப் பெரியவர்கள் கண்ணில் பட்டால் இன்று அவர்களோடு பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஏனோ இன்று அவர்கள் வரவில்லை.
ஓடிப்போய் அவளிடம் சொன்னேன்.
“தெரியல்லை. நாளைக்குப் பார்க்கலாம்.” என்றாள். மறுநாள் காலையில் கோலம் போடும்போது விசாரித்துட்டு… “நேத்து காலையில் அந்தம்மா திடீர்னு இறந்துட்டாங்களாம்.”
எனக்கு இதயத்தை நெருக்கியது ஏதோ ஒரு உணர்வு.”அந்தப் பெரியவர் தானே உடல் நலமில்லாமல் இருந்தார்? அந்த அம்மா நல்லாத்தானே இருந்தாங்க ஏன் இப்படி.?”. “அதெல்லாம் நம்ம கையில இருக்கா என்ன?. எல்லாம் அவன் எழுதியது”.
இப்படியே ஒரு வாரம் போயிற்று.
வழக்கம்போல நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். அவள் சமையலறையில் எதையோ செய்து கொண்டிருந்தாள். அதே ஊன்றுகோல் சத்தம் டக் டக்… ஆர்வத்தோடு எட்டிப்பார்த்தேன். அதே பெரியவர்… வழக்கமாக அணியும் மிடுக்கான உடை இல்லை.. ஒரு வேஷ்டியும் சட்டையும் மட்டும் அணிந்திருந்தார். எப்போதும் சேவ் பண்ணிசுத்தமா இருக்கும்அவர் முகம் முழுக்க வெள்ளை முடிகள். இன்றுதான் அவரது வலது கை முழுதுமாகத் தெரிந்தது. ஆனால் அந்தக் கையைக் கோர்த்துக் கொண்டு இருந்த கைகளை மட்டும் காணவில்லை. அந்தக் கைத்தடி மட்டும் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார். முகத்தில் சலனம் இல்லை. என் கையிலிருந்த பாரதிதாசன் முதியோர் காதலில், ஒரு காட்சியில் பெரியவர் இருமுகிறார். அந்த சத்தம் கேட்டு ஓடி வருகிறாள் வயதான அவர் மனைவி. அப்போது அந்த பெரியவர் சொல்கிறார் .”நீ இருக்கின்றாய் என்ற ஒன்றே போதும்.”
வீட்டிற்குள் சென்றேன். அடுப்பில் போட்ட வடையை எடுத்துக்கொண்டிருந்தாள். தொண்டைக்குள்ளிருந்து குரலை எடுக்கமுடியாமல், கொஞ்சம் விசும் பலோடு .. அவளிடம், ஜானகி… ஒரு நாள்… ஒரு நாள் ஆனாலும்… “என்ன சொல்றீங்க. என்ன ஒரு நாள்?”. “இல்லம்மா என்னைக்கு… சாவு… வந்தாலும், ஒரு நாளா இருந்தால்கூட முதலில்… முதலில் போவது நானாகத்தான் இருக்கணும்மா. முந்தி கிந்தி போய்த் தொலைச்சுடாதே.அடக்கமுடியாமல் அழுதேன்.
தன் கையை நீட்டி என் கை மீது வைத்து,நீங்களும் குட்டிப் பாப்பா தான் என்று சொன்னவள், தன் மார்பில் என்னைச் சாய்த்துக் கொண்டாள். சிறுவயதில் என் தாய் என்னை அணைத்தபோது, உணர்ந்த அதே இதமான கதகதப்பு உடலெங்கும் ஓடுவதை ஒருகணம் உணர்ந்தேன். வடைகளைத் தட்டில் எடுத்து போட்டிருந்தாள். அதில் இரண்டு வடைகள் மட்டும் ஏனோ பிரிக்க முடியாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்தன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.