July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

நன் மக்கள் பேறு/ சிறுகதை/ முத்துமணி

1 min read

Nan makkal peeru / Story by Muthumani

ராமசாமி படுக்கையிலக் கிடக்காரு. சொல்லப்போனா, இது மரணப்படுக்கதான். வாய் மட்டும் அரைகுறையாப் பேச வருது. வலக்கை மட்டும் லேசாத் தூக்க வருது.
அதுவும் எப்பவாது நினைவு வரும்போது மட்டும். மத்தபடி தண்ணியும் இறங்கல. அவர் பெத்த நாலு பையன்களும் கட்டிலைச் சுத்தி நிக்கிறாங்க.
“இந்தத் தடவை தேறாதுன்னு நினைக்கிறேன்”.
மூத்த மகன் முத்துராஜ் சொன்னான்.

“ஆமாண்ணே நேத்து ரெண்டு மூணு தடவை, வாயத் திறந்து பேசினாரு. இன்னிக்கிப் பேசல” அடுத்தவன் அருணாச்சலம் சொன்னான்.

“இல்ல, காலையில ஏழு மணி இருக்கும், வாயைத் திறந்தாரு. அதுக்கப்புறம் இப்ப வரை, கண்ண முழிக்ககல.பேசவுமில்ல.”சொன்னது மூணாவது மகன் முருகன்.

"இப்படியே கிடந்தா நமக்குப் பெரிய கஷ்டம். அம்மா இருக்கிற வரைக்கும் பார்த்துக்கிட்டா. அம்மா போகும்போது இவரையும் கூட்டிட்டுப் போய்ருக்கணும்."  கடைக்குட்டி கண்ணன் சொன்னான். 

இவனுக்குத்தான் நாலு வயசு வரைக்கும் பேச்சு வரலைன்னு திருச்செந்தூருக்குக் காவடி எடுத்தான் ராமசாமி.

“காலாகாலத்துல முடிஞ்சிருச்சுன்னா நாமளும் போய் அவங்கவங்க வேலையைப் பார்க்கலாம்”.

” பெருசு எப்படியோ, எமனுக்கு டிமிக்கி கொடுத்துடுதே.”.
“இவன் ஜாதகத்தில ஏதோ தோஷம் இருக்குன்னு ஐயப்பன் கோயிலுக்கு 18 வருஷம் நடந்து போயிட்டு வந்தான், ராமசாமி.

“இந்தத் தடவை ஏமாத்த மாட்டாரு. கடவுள நம்புறேன்”. “நம்ம அவசரம் அவருக்குப் புரியுமா.?” ஜோக் அடிச்ச
இந்தப் பயலுக்குப் படிப்பு வரலன்னு ஒவ்வொரு வாத்தியார் வீட்டுக்கும் டியூஷனுக்குக் கூட்டிகிட்டு அலைஞ்சான் ராமசாமி.

“ஆமாடா. நீதான் கம்பவுண்டர் ஆச்சே! நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். நாடி பார்த்துச் சொல்லு”. ரெண்டாவது பையன் அருணாசலம். கவர்மென்ட் ஆஸ்பத்திரி கம்பவுண்ட்டர். அந்தக்காலத்தில ஆபரேசன்ல பிறந்தவன். நாப்பது நாள் முந்திப் பிறந்து வாழ்வா? சாவா? போராட்டம். ஏகப்பட்ட செலவு ராமசாமிக்கி.

"ஆமாடா. போறதுன்னா போய்த் தொலையணும்! அப்பச் சும்மாப்பயங்காட்டிகிட்டு".

” நாமும் நம்பி ஊர்லருந்து கிளம்பி ஓடியாந்து…மம்.”
“ஆமா,சொத்து பத்து, பங்கு வைக்கிறது பத்தி ஏதாச்சும் எழுதி கிழுதிவச்சிருக்காரா என்ன?”. பெரியவன் கேட்டான்.

” அப்படி எதும் தெரியலண்ணே.
ஆனா அம்மா இருக்கும்போது என்கிட்ட சொல்லுவா. இந்த வீடு உனக்குத்தாண்டா. அதுதான் அப்பா ஆசை.”.-
இப்படி சொன்னவன் மூன்றாவது பையன் முருகன்.
“உனக்கு மட்டும் அப்படி ஸ்பெஷலா சொல்லிட்டாராக்கும்?. எங்கிட்டல்லாம் அம்மா அப்படி ஒரு விஷயத்தை சொல்லவே இல்ல”.
“நாங்க யாருக்குடா பிறந்தோம்?.”

“சரி சரி விடு. அவன்தான் பக்கத்து ஊர்ல இருக்கான். சொந்தமா வீடு கட்டல.மூணு பொட்டப் புள்ளையப் பெத்துவச்சிருக்கான்.”

“ஆமாமா, அது சரிதான். நீதான் பக்கத்து ஊர்ல இருக்க. உனக்குப் படிப்பு வரல .எங்கள மாதிரி வேலைக்குப் போற பொண்ணயும் கட்டி வைக்கல”.
“வீட்ட வச்சு நாங்க என்ன செய்ய முடியும்?. ஆனால் அந்த மேலக்காட்டுத் தோட்டத்தை எனக்குக் கொடுத்துடுங்க”.என்றான் மூத்தவன்.

“அதை வச்சு நீ என்ன செய்வ?.மெட்ராஸ்ல இருந்துகிட்டு?”.
“நான் என்ன விவசாயமாப் பார்க்க போறேன்?. அதை வித்துப்புடுவேன். எனக்கும் மூணாவது பொண்ணுக்குக் கல்யாண காரியம் ஒண்ணு பாக்கி இருக்குல்ல. நகைநட்டு வாங்கிப் போட்டாப் போச்சு.”
“அதை விட்டா, தெக்க ஒரு வீடு இருக்கு. கிழக்க உள்ள வயக்காடு. வேற என்ன இருக்கு?”.
“வேற ஒன்னும் இல்ல”

” கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுவோமா?. வருஷம் பூரா விவசாயம் பண்ணி என்னத்தக் கண்டார்?”. இது கொடி சுத்திப் பிறந்த பய சொன்னது.

"நான் வீடு கட்டும் போது கொஞ்சம் பணம் கடனாகக் கேட்டேன். தர மறு த்துட்டாரு .உனக்குக் கொடுத்ததா எல்லாப் பயலும் அவனவன் வீடு கட்டும்போது கேட்டா, கொடுக்க என்னிடம் இல்லன்னு".நியாயம் வேற!.

“என் மூத்த மக கல்யாணத்துக்குக் கொஞ்சம் பண உதவி செய்யுங்கப்பான்னு”.கேட்டேன். அம்மா கூட சரின்னான்க. ஆனாலும் இவர் பதிலே சொல்லல”
ஏற்கனவே பக்கத்து வீட்டுக்காரங்க ஒண்ணு ரெண்டு, வந்து எட்டிப் பார்த்துட்டுப் போனார்கள்.
அந்த வடக்குத்தெரு, வட்டிக்குக் கொடுத்து வாங்கும் பெருசு, பெரியசாமி,மூணு நாலு தடவ வந்துட்டுப் போச்சி. தூரத்துச் சொந்தம். கிழவனுக்கு ரொம்ப ஃப்ரெண்ட்.

” தம்பி அப்பா எப்படி இருக்கார்?. கண்ணு முழிச்சாரா? பெரியசாமிதான் கேட்டுகிட்டு உள்ள வந்தார்.

“அப்படியேதான் கெடக்காரு”.

“அம்மாவுக்கு மருத்துவம் பார்க்க எல்லாம் செலவாகிப்போச்சு. அப்படி இப்படின்னு, பொய் சொல்லுவாரு”.

“காடு விளையல. விவசாயக் கடன் வாங்கிருக்கேன். வட்டியோடு அடைக்கணும்”. இப்படியே பஞ்சப்பாட்டு பாடுவார்”.

"என் மகளை மெடிக்கல் காலேஜ் சேர்க்கும்போது, பணம் கைமாத்தா கேட்டேன். அப்பமும் மண்டையை ஆட்டி மறுத்துட்டார்".

“ஆமா,அம்மா கழுத்துல போட்டிருந்த நகை என்னாச்சி?.அதுபற்றி எதும் தெரியல”
“செத்துட்டாருன்னா செலவுக்கு என்ன செய்ய?”
“நீதானே வீடு கேட்ட. நீயே செலவழிசொல்லிட்டுச் சிரிச்சான் கண்ணன்.

ஆளாளுக்குச் சண்டையும் கிண்டையும் போட்டு, கடைசியில்,யார் யாருக்கு எந்த எந்தச் சொத்துன்னு பேசி, ஒரு மாதிரியா முடிவு பண்ணியாச்சு.

 இப்போ திடீர்னு கண்களைத் திறந்தார் ராமசாமி. நாலு பேரும் பக்கத்துல போய் உத்துப் பார்த்தார் கள். வலது கையைத் தூக்கிப் "பக்கத்தில் வா" என்பதுபோல் மெதுவா ஆட்டினார்.
  தலையணையைக் காட்டினார் முருகன் தலையணைக்கு அடியில் கையை விட்டுப் பீரோ சாவியை எடுத்தான்.

மெல்லிய குரலில் இருமிக் கொண்டு,” உள்ள ஒரு நோட்டு இருக்கு. எடுத்திட்டு வா”. என்று சொல்லிக் கை ஜாடை காட்டினார்.
பீரோவை உருட்டித் தேடி எடுத்தாச்சி. மூத்தவன் கையில் கொடுத்தான் முருகன். அது ஒரு பழைய டைரி.காட்டியதும்
“படி படி”ன்னு சொன்னார் ராமசாமி.
முதல் பக்கத்தில் ‘ஓம் ‘என்று மஞ்சளால் எழுதப்பட்டிருந்தது.

"இந்தாடா நீ படி. நான் கண்ணாடி போடல."அடுத்தப்பக்கம்,தொடங்கி பத்துப் பக்கம் வரை ராமசாமி தான் கைப்பட கீழ்க் கண்டவாறு எழுதி இருந்தார்.

என் சொத்து முழுசும் என் சுய சம்பாத்தியம். நான்கு பிள்ளைகளைப் பெற்று ,வளர்த்து ஆளாக்கிட்டேன். நாலு பேரையும் படிக்கவைக்க, வேலை வாங்க ,அப்படி இப்படின்னு எல்லாச் செலவையும் நான் வயக்காட்டுல கிடைச்சதை வச்சுத்தான், சமாளிச்சேன்.
என் வீட்டுக்காரி அடிக்கடி உடம்பு சரி இல்லாம கஷ்டப்பட்டா. அப்பப்ப ஆஸ்பத்திரிக்குச் செய்த செலவு,. அவள் மரணமடைந்தபோது ஏற்பட்ட செலவுக்குக் கூட பிள்ளைகளை நான் எதிர்பார்க்கல்ல.
மழை தண்ணி இல்லாம வெள்ளாமை பொய்த்துப் போச்சி, பிறகும், எனக்கு வயதான பிறகு, விவசாயத்தைக் கவனிக்க முடியாத போதும், பிள்ளைகளின் கையை நான் எதிர்பார்க்கல. அவங்களும் செய்ய மாட்டாங்கன்னு தெரியும்.
இந்த ஊருல சிலபேரிடம் நான் கை நீட்டி கடன் வாங்க வேண்டிய அவசியம் வந்தது. யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கிருக்கேன்னு, இதுல விவரமா எழுதிருக்கேன். எல்லாருக்கும் ஸ்டாம்ப் ஒட்டி புரோ நோட்டில் கையெழுத்து போட்டுக் கொடுத்துருக்கேன்.
கடன் வாங்கினேனே தவிர. இப்ப வரைக்கும் வட்டியும் கொடுக்கல. அசலையும் கொடுக்க முடியல. என் பிள்ளைகளில், எவன் இந்தக் கடனை அடைக்கிறானோ, அவனே நான் இருக்கிற இந்த வீடு, அப்புறம் தெக்க இருக்க அந்த ஓட்டு வீடு, மேக்க இருக்கிற தோட்டம், வயக்காடு எல்லாத்தையும் வச்சிக்கிடலாம்.
ஆனா என்னைக் கடனாளியாச் சாக விடக்கூடாது. அப்படிக் கடனை அடைக்க யாரும் தயாராயில்லாத பட்சத்தில் , என் வீடு, தோட்டம், வயக்காடு எல்லாத்தையும் வித்து என் கடனை அடைக்கிற பொறுப்ப வடக்குத்தெரு பெரியசாமிட்ட கொடுத்திருக்கேன். ஏன்னா அவனிடம்தான், நிறைய பணம் கடன் வாங்கிருக்கேன்.

“தம்பி கிழவன் கழுத்தை நெரிடா. போட்டும்”
திரும்பிப் பார்த்தான் ராமசாமி மீண்டும் மயக்கத்திற்கு போய்விட்டார். சரி மேலபடி.
நான் இந்த நோட்டில் எழுதி இருக்கிற மாதிரி எல்லாத்தையும் வக்கீல் மூலமாக உயில் எழுதி ரிஜிஸ்டர் பண்ணியும் வச்சிருக்கேன். என் மனைவியின் நகைகளை என் சொந்த காரியங்களுக்காக விற்றுவிட்டேன்.
படித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான். பெருமூச்சு விட்டுக்கொண்டு கண்களில் தீப் பறக்க
” யார் யாரிடம் கடன் வாங்கிறுக்கான்?.அதையும் பாருடா. பக்கத்தைப் புரட்டினான்.
பெரியசாமி உள்ளிட்ட 8 பேரிடம் கடன் வாங்கிருக்கார்.வாங்கிய தேதி, தொகை, அது பக்கத்திலேயே அவங்க போன் நம்பர் எல்லாத்தையும் எழுதி வச்சிருக்காரு.
மொத்தத்தமா அசலை மட்டும் கூட்டினால், சொத்து முழுக்க வித்தாலும் அடைக்க முடியாது என்ற அளவுக்கு இருந்தது.

“நான் ஊருக்குப் போறேண்டா. செத்தா, சவத்தத் தூக்கி ரோட்டுல போடுங்க”.கோபத்தில் கத்தினான் பொறுப்பான முதல் பிள்ளை.
மாசம் லட்ச ரூபாய் சம்பளம். பொண்டாட்டிக்கு ஒரு லட்சம் இருக்கும்.
இப்போ ஆறாவது முறையா பெரியசாமி உள்ளே வந்தார்.
“இதுக்கே இந்த பாடு படுத்துறீங்களேடா. இன்னும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு.”
“எப்படா போவாருன்னு நாங்க காத்துக் கிடக்கோம். நீங்க அதுக்குமுன்ன கடன வசூல் பண்ண அலையுறீங்க. நீங்களே சொத்துப் பூராம் வச்சுக்குக்க.செத்தா, கிழவனைத் தூக்கிப்போட்டுக் கடைசிக் காரியத்தையும் முடிச்சிடுங்க.”
“தகப்பனோட பலகீனத்தை எந்தத் தாயும் பிள்ளைகளிடம் சொல்ல மாட்டா. பெரியவர்களாகி அவங்களா தெரிஞ்சுகிட்டாத் தான். அந்த வாய்ப்பே நமக்கு இல்லாம போச்சு. நம்ம அம்மா கடைசி வரை சொல்லல”. என்றான் முருகன்.

“மூத்தவன் நீ பிறக்கிறது முன்னாடியே, நம்ம அப்பாவுக்கும் தெற்குத் தெருவில் வேற ஜாதி பொண்ணுக்கும் உறவு இருந்திருக்கு.
அவளுக்கு ஒரு பொண்ணு. இதையெல்லாம், அரசல் புரசலாக் கேள்விப் பட்டேன்.

“பணத்தை எல்லாம் அங்கதான் தொலைச்சிருப்பார்.தெற்குத்தெரு வீட்டையும் அளுக்கே எழுதிக் கொடுத்திட்டாருன்னும் பேசிக்கிராங்க. அம்மா செத்ததும் அந்த நகைகளை எல்லாம் அந்தப் பொண்ணுக்குத்தான் கொடுத்துட்டாரோ என்னமோ?”
ஷாக் அடித்த மாதிரிமீதி மூணு பேரும் முழித்தார்கள்.
“இது வேறயா? ஒழுக்கங்கெட்ட. அதனாலதான்,‘
அம்மா செத்துப்போச்சா?. பணத்தை எல்லாம் அங்கதான் தொலைச்சானா?.”

“டேய். இதுல வில்லங்கம் நிறைய இருக்கு. மண்டையைப் போட்டுட்டா இன்னும், அவா வந்து என்னவெல்லாம் சொல்லுவாளோ? வந்து உரிமை கொண்டாடுவா. அவளுக்கு சப்போர்ட்டுக்கு நாலு பேரு வருவாங்க சாதிக்காரங்க .சண்டைபோட்டு பெரிய இம்சை ஆயிடும்.
இப்பவே இடத்தக் காலி பண்ணு. போய்க்கிட்டுடே இருப்போம்.”

“அண்ணே, கிழவன இப்படியே விட்டு ட்டுப்போகக் கூடாது. கழுத்தை நெரிச்சிடணும் “. என்று சொல்லிக் கிட்டே பக்கத்தில் போனான்.
ஆனால் அதற்கு முந்தி ராமசாமியின் வாயை ஈக்கள் மொய்த்து விட்டன.

"பேசாம, இலவச ஆம்புலன்ஸ் சர்வீஸ்க்குப் போன் பண்ணுடா. அனாதப் பொணம்ன்னு சொல்லித் தூக்கிப் போட்டு அனுப்பிடுவோம்."

“தம்பி இப்படிப் பொறுப்பில்லாமல் பேசினா எப்படி? சொந்தக்கா ரங்களுக்குச் சொல்லி விடுங்க.எல்லாம் முறையா செஞ்சாத்தான் போறவன் ஆத்மா சொர்க்கத்துக்கு போகும்”.

“இந்தாளு எங்க போனா எங்களுக்கென்ன?.” அப்படி ஊர் உலகத்துல யாரும் பண்ணாதத உங்கப்பா என்ன பண்ணிட்டாரு?. ஒரு ஆளு சம்பாதியத்துல, நாலு பேரையும் ஆளாக்கினது, நாலு பேரும் உதவ மாட்டீங்கன்னு புரிஞ்சிகிட்டாரு.”

“யாருக்கும் தெரியாமல் ஒரு செட்டப் வச்சிருக்காரே. அது?” சொல்லிட்டுச் சிரிச்சான்.
அப்போது அந்த அம்மா தலை விரிகோலமா வந்து, வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து தெரிந்தது.

"தம்பி, நீ சொல்லாத. உனக்குக் கல்யாணம் முடியும் போது உன் பொண்டாட்டி மூணு மாசம். முதலில் தாயாக்கித் தானே வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த. 
   உன் தம்பி, கம்பவுண்டர்  எங்கேயோ, காம்பவுண்ட் சுவர் ஏறிக்குதிச்சி..என்னமோ செய்ய... சீ..  அங்கேயே பிடிச்சித் தாலியைக் கட்டி வச்சுட்டாங்க. மூணாவது முருகனுக்கு இரண்டு. 
   இப்படி ஆளாளுக்கு நீங்களே எல்லாம் செஞ்சிட்டு, உங்களப் பெத்தவங்க கையத் கைய தூக்கணும்னு ஆசைப் பட்டீங்க. அதையும் செஞ்சாங்க, உங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு.

இப்போ கூட நீங்க யாரும் உங்க பொண்டாட்டி,பிள்ளைகளைக் கூட்டிட்டு வரலையே. அப்பாவை ஆஸ்பத்திரில சேர்க்கணும்னு நினைப்பாவது வந்ததா?. அவர் சாவை எதிர்பார்த்துத் தான் நீங்க வந்தது. காப்பாத்த வரல.என்ன ஜென்மம் நீங்கல்லாம்?” பணம் தின்னிப்…சே..மனுசங்கதானா?”

"லிமிட் யுவர் டங்ஸ். நீங்க யாரு? எங்க குடும்ப விஷயத்தில் தலையிட?. வயசுல பெரியவரன்னு பார்க்கிறேன். ஓவரா பேசுறீங்க. உங்களுக்குத் தேவை, நீங்கக் கடனா கொடுத்த பணம் தானே?". 
  "ஆமாடா.கேட்டாத் தூக்கிக் கொடுத்துருவியாத் திருப்பி?. சொல்லு." பெரியசாமி கேட்டதும், தலையைக் குனிந்து கொண்டார்கள். 

“உண்மையைச் சொன்னால் சுடுது? எல்லோரும் வசதியா இருக்கீங்களே. யாராவது ஒருத்தர் அவரைக் கூட்டிட்டுப் போய் கூட வச்சுப் பார்த்தா என்ன?
சரி. அதை விடு. இனிமேல் சொல்லித் திருத்தவா முடியும்?. உங்க அப்பா, யார் யாரிடம் கடன் வாங்கியிருக்கேன்னு, விவரமாக எழுதி, அதுல அவங்க போன் நம்பரையும் எழுதி வைச்சிருக்கானே. அதில் யாருக்காவது ஒருத்தனுக்குப் போன் போடு”.

“அந்த லிஸ்ட்ல உங்க பேருதாங்க முதல்ல இருக்கு”. “என்னை விடு. வேற யாருக்காவது போன் பண்ணு”.
“அடுத்தது நடுத்தெரு நல்லகண்ணு. அவர்கிட்ட 2 லட்சம் கடன் வாங்கிருக்காரு.”
“வாங்கி வப்பாட்டிக்குச் செலவழிச்சி ருப்பாரு.”

“சரி அவனுக்குப் ஃபோன் போடுப்பா”.
“எதுக்கு?.நாங்க வம்புல மாட்டுறதுக்கா?. தானா போய் வலையில் விழச் சொல்றீங்களா? முடியாது”. ஓங்கி உறுதியா சொன்னான் அருணாசலம்.

"சரி விடு. நானே போன் போடுறேன்". போனைப் போட்டு, ஸ்பீக்கரை ஆன் பண்ணினார். 

“பேசுறதை நல்லாக் கேளுங்க.”

"யாரு? நல்ல கண்ணுதானே?" நான்தான் பெரியசாமி பேசறேன். "அண்ணே வணக்கம் என்ன விசேஷம்?". 

“ஆமா, நம்ம ராமசாமி, உன்னிடம் எவ்வளவு கடன் வாங்கிருக்கான்?”.

” என்னண்ணே சொல்றீங்க?.ராமசாமி என்னிடம் கடனா?. ஐயோ.நான்தான், என் மகள் கல்யாணத்துக்கு அவனிடம் ரெண்டுலட்சம் கடன் வாங்கிருக்கேன்”.
லிஸ்டில் இருந்த எல்லோருக்கும் போன் பண்ணியாச்சு. எல்லோரும், இதே மாதிரி பதில்தான் சொன்னார்கள், நாலு பேரும் ஆச்சரியத்தோடு வாயைப் பிளந்தார்கள்.

பெரியசாமி தொடர்ந்து பேசினார்.
“அப்பா டைரியை எடுத்து, முதல்ல பத்துப்பக்கத்தை மட்டும் படிச்சிங்க. அதுக்குப்பிறகு, என்ன எழுதியிருக்கா ருன்னு படிக்கல. ஏன்னா கடனை அடைக்க வேண்டியது வந்துருச்சுன்னு பயம். பதட்டம். தப்பித்துக்கொள்ளும் ஆவல்.
இப்ப அதே டைரியை எடுத்து, நிதானமா அதுக்குப் பெறகு நாலு பக்கம் தள்ளிட்டுப் படி”சத்தமா படி”. என்றார் பெரியசாமி.

  அவசரமாப் புரட்டி.. படிச்சிட்டு, என்ன செய்வதென்று அறியாமல், இவர் யாரிடமும் கடன் வாங்கல. நிறைய பேருக்குக் கடன் கொடுத்துருக்காரு, முதல் பத்து பக்கம் எழுதி வச்சது எல்லாம் சும்மா பொய் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டாங்க.


"என்ன அசந்து போய் நிக்கிறீங்க?உங்கப்பன் யார்ட்டயும் கடன் வாங்கல. என்கிட்ட வாங்கினதா, சொன்னதும் பொய். அதுக்கு மாறா,  நிறைய பேர்க்கு உங்கப்பா பணத்தைக் கடனாக் கொடுத்துருக்கான். 
 அதைவிட முக்கியம் அவனுக்கு, ஒரு சின்ன வீடு இருக்குன்னு சொன்னதும் பொய். அது உங்க தாத்தா செஞ்ச தப்பு. அவள், அவனுக்குத் தங்கச்சி. தப்பா பிறந்திருந்தாலும்,தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளையையும் கவனிச்சுக்கிட்டு, தங்கச்சி மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துக் கடமையை முடிச்சிட்டான்."

“உங்க அம்மா செத்த அன்னிக்கு, நீங்க நடந்துகிட்ட முறை ,எங்க செலவு வந்துடுமோன்னு,பயந்து, நாலு பேரும் கூடிக்கூடி பேசினது, உங்க பொண்டாட்டிமார்கள் ஒதுங்கி, யாரோ மூன்றாவது மனுஷி சாவுக்கு வந்தது மாதிரி இருந்தது,
பெத்த தாய் செத்துக்கிடக்கும் போது, ஒரு சொட்டுக்கண்ணீர் கூட வடிக்காமல், நீங்க உட்கார்ந்து ஜாலியாப் பேசிக் கொண்டிருந்தது,மூணு வேளையும் கொட்டிக்கிட்டது, எல்லாத்தையும் கவனிச்சான் உங்கப்பன். என்னிடம் வருத்தப்பட்டுச்சொன்னான்.
நாலு பேருல எவனாவது ஒருத்தன் தல முடி எடுத்தீங்களா?. உயிர க்கொடுத்த தாய்க்கு ம… ரக் கூடக்கொடுக்கல. அழகு கொறஞ்சிப் போய்டும்?.
உங்க நாலு பேர் இல்லை எவனாவது ஒரு பத்து பைசா உங்கப்பாவுக்குஎதுக்காவது, கொடுத்துருப்பீங்களா?. யோசிச்சுப் பாருங்க.
ஊருக்கு வரும்போது ஒரு வேட்டி, ஒரு சட்டை இப்படி எதையாவது அவருக்கு வாங்கிக் கொடுத்ததுண்டா?. அட ,அது போகட்டும். வாய்க்கு ருசியா சாப்பிட எதையாவது வாங்கிட்டு வந்ததுண்டா? பெரிய கார்ல வர்றீங்களே. ஒரு நாளைக்காவது, உங்க அப்பாவையும் அம்மாவையும் அந்தக் கார்ல ஏத்திகிட்டதுண்டா? இதையெல்லாம் நான் கேட்கல உங்க அப்ப என்கிட்ட சொல்லி அழுதது.”

" சொத்த,கோயிலுக்கு எழுதி வைச்சுடலாமான்னுகூட யோசிச்சான். நான்தான் சொல்லி நிறுத்தி வச்சிருந்தேன். பெத்த மனசுடா. பிள்ளைப் பாசம் போகல. என்னத்த படிச்சிக் கிழிச்சீங்க?. 
 உங்க அப்பன் சம்பாதிச்ச சொத்து சுகம், இன்னும் அப்படியேதான் இருக்கு. உங்க அம்மா நகையைக் கூட பேங்க் லாக்கரில்தான் வைச்சிருக்கு.உங்க அப்பன், தன்னோட எதையும் எடுத்துட்டுப் போகல. இதுதான் வாழ்க்கை. 
 பாசமே இல்லாத பிள்ளைகளைப் பெத்ததத் தவிர வேறு ஒரு தப்பும் உங்கப்பன் செய்யலை. உங்க அப்பாவோட பேங்க் பாஸ்புக், லாக்கர் சாவி, உட்பட எல்லா தஸ்தாவேஜும் என்கிட்ட தான் இருக்கு.நீங்க கொள்ளி போட்டா அவன் நெஞ்சு வேகாது."

வாசலில் யாரோ விம்மி விம்மி அழுத சத்தம் கேட்டது. “உங்க அம்மா போன பிறகு இத்தனை வருஷம் உயிர் வாழ்ந்திருக்கிறார்ன்னா அதுக்கு, வேற தாய்க்குப் பிறந்த இந்தத் தங்கச்சி தான் காரணம். பெத்தவங்க கிட்ட எல்லாத்தையும் எதிர்பார்க்கிரவன் மட்டும் பிள்ளை இல்லடா. ராமனா இருக்க வேண்டாம்,சிரவணனா இருக்க வேண்டாம். மனுஷனா இருந்தா போதும்.அதையெல்லாம் விளக்கிச் சொல்ல முடியாது.
நீ தைரியமா உள்ள வாம்மா.. வந்து அண்ணனுக்குச் செய்ய வேண்டியதைச் செய். ராமசாமிக்கு அழுவதற்கு, நீ ஒருத்தியாவது இருக்கியே!. நல்லா அழு. ஊர் முழுசும் கேட்கட்டும்.சும்மா சத்தம் போட்டு அழு தாயி.”துஷ்டி வீடு அமைதியா இருக்கக் கூடாது.சற்று உரிமையோடு சொன்னார் பெரியசாமி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.