மனிதத் துளி / சிறுகதை / முத்துமணி
1 min read
Manitha duzhi / Short story by Muthumani
8-8-2020
” எக்கா, சோமா இருக்கியளா?. உள்ள வரட்டா?.நாந்தேன் சரசோதி. யாராச்சும் வூட்டுக்குள்ள உடுதாவாளா?, வுடமாட்டாவ. வெளில போவதுக்குமில்லா, பயப்புட்டுகிட்டு எல்லா சனமும் வூட்டுக்குள்ள அடஞ்சிக் கிடக்கு ஆறு மாசமா”.
இப்படிக் கேட்டுக் கொண்டே அடுத்த தெரு, அய்யனார் மனைவி,சரஸ்வதி, வில்லிசைத் திலகம், கலைமாமணி விருது, இன்னும் பல விருதுகள் பெற்ற ,ராஜலட்சுமி அம்மா வீட்டு வாசலுக்கு வந்தாள்.
"இம்மாங்காலமும், இப்பிடி ஒரு மோசமான சீக்க, ஊரு பாத்துருக்குமா? இல்ல,உலவம்தான் பாத்துருக்குமா".
“வாயால வவுத்தால போவும். என்னத்தையாவது கரச்சிக் குடிச்சாச் சரியாப் போவும் .கேக்கலன்னா, நம்ம ஊரு ஒண்ட்ற கண்ணு டாக்டரு, ரெண்டு ஊசியப் போட்டா, அடச்சிக்கிடும். வெயில் காலத்துல கொஞ்சம் அம்ம வெளையாடும். ஆத்தாவ வேண்டிகிட்டு செத்த, சுத்த பத்தமா கிடந்தா, தானா இரங்கிடும்.இது புதுசாவில்லருக்கு!”
“அங்கேயே நின்னுட்டுப் பேசு சரஸ்வதி.எதுக்கு வம்பு?.எல்லாரும் கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும்..இந்த நோய் யாருக்கு இருக்கு யாருக்கு ,இல்லன்னு தெரியாது”.என்றாள் வில்லிசைத்திலகம், கலைமாமணி ராஜலட்சுமி.
“ஆறு மாசம் ஆவுதுக்கா. சனங்க வேல சோலிக்குப் போவல.சோறு தண்ணில்ல .அம்புட்டுப் பேரும் ஒழக்கு மாதி, குச்சி வூட்டுக்குள்ள… ஒண்ணா மண்ணா, வூட்டுக்குள்ளதான். அந்தாக்கில, இப்பிடி முடக்கிருச்சே, எழவுக்குப் பொறந்த இந்த கொனோனா, என்னமோ?.என் வாய்க்குள்ள முளையல. மாசுக்கு எழவ வேற மூஞ்சிலக் கட்டி அழுதுகிட்டு? ,மூச்சி போமாட்டக்குதுக்கா.”
“வூட்டுக்கு வந்தவங்கள வாய் நிறஞ்சி வான்னு , கூப்புட்டு உள்ளார உட்காத்தி, ஒருவா காப்பித் தண்ணி கொடுப்பாகளே,நம்ம சாதி சனம். நம்ம ஊரு மருவாதியக் கூடக் கண்ணுல காணாம ஆக்கிப்புடுச்ச இந்த பேதில போற கிரானா?.”
“யாருமே வாதுறந்து பேசமாட்டுக்காவ.”
“யாருனாச்சும் தும்முன்னா இருமுனானா, அங்கின நிக்கப்பிடாதாம். கொலனாவா அப்புடியே வந்து சப்புன்னு நம்ம மேல ஒட்டிக்கிடுமாம் .சனமெல்லாம் பயந்து சாவுது”.
“வவுத்துப் பாட்டுக்கே வழியக் காணும். இந்த கருமத்தில, ஒண்ணு கிடக்க ஒண்ணு வந்து தொலைச்சா ஆஸ்பத்திரிக்கு அழ யாருகிட்ட இருக்கு, துட்டு?.”
அந்த நேரம்”பணியாரம், வட பணியாரம், வடை” என்று சத்தம் போட்டு வித்துக் கிட்டே வந்தான் முனியாண்டி.
“எனக்கு இரண்டு கொடு. சரஸ்வதிக்கு நாலு பார்சல் கட்டிக்கொடு”.
” சரஸ்வதி பிள்ளைகளுக்குக் கொண்டு கொடு” ராஜலட்சுமி சொன்னாள்.
“சாதாரணமா வந்துட்டுப் போற காய்ச்சல் இல்லடி இது. வந்தா ஆளை சோலிய முடிஞ்சிடும். மோசமான வைரஸ். பேரு கொரோனா.பெரிய பெரிய ஆள்களை எல்லாம் இந்த நோய் பெரிய பாதிப்புக்கு ஆளாக்கிருக்கு.”
“நம்ம நாட்டை விடு. அமெரிக்கா மாதிரி, பெரிய பெரிய நாட்டுலகூட, இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியல்ல. நாளுக்கு நாள் கூடிகிட்டே போகுது. குறஞ்சபாடில்ல. இன்னும் மருந்தும் கண்டுபிடிக்கல.”
“அப்பிடியாக்கா, எம் மண்டையில எங்க ஏறுது. உங்கள மாதி நாலு கிளாஸ் படிச்சிருக்கணும், இல்லன்னா நாலு எடத்துக்கு போவ, வர இருக்கணும். நீங்க கச்சேரிக்கு போவாத ஊரா? நாடா?. நான் கெட்ட கேட்டுக்கு டி.வீ பாக்ககூட வக்கில்ல.வயர உருவிட்டுப் போய்ட்டான்.
எங்க ஊருல , சொந்தக்கார மனுஷன், படுபாவி, 42 வயசுல, ரெண்டு பொஞ்சாதிய விட்டுட்டுச் செத்துட்டான். துட்டிக்குப் போ முடியல. செத்தவரு,எம் முற மாமன். முவத்தக்கூட கட்டக் கடீசியா பாக்க லன்னு, ஒரு மாரியா இருக்குக்கா. இருவது ஆளத்தான் வுடுவாவலாம்.”
“ஆமாமா, அதுக்குக்கூட ஈ பாஸ் இன்னு ஒண்ணு வாங்கணும். அதெல்லாம் கஷ்டம்.லேசுக்குள்ள கிடைக்காது.”
” சரஸ்வதி, இங்கருந்து வெளிநாட்டுக்குப் போனவங்க சிலபேரு, அங்கேயே செத்துட்டாங்க. உடம்ப இங்க கொண்டு வர முடியாம அங்கேயே அடக்கம் பண்ணிட்டாங்க.தெரிஞ்சுக்கோ.இதெல்லாம் பெரிய கொடுமை.”
“எல்லாம் மகமாயி ஆத்தாவோட வயிதெரிச்சலு. நம்ம ஊரு நடுக்காட்டுத் தாயிக்குப் பொங்க வச்சது, நான் வாக்கப்பட்டு வந்த வருஷம். பெரவு வைக்கல. அவ கண்டும் சாவத்த கொடுத்துப்புட்டாளோ என்னமோ? மனுசன் பண்ணுற தப்பு தண்டாவால உலவமே அழியப் போவுதோ? .
ரேஷன் கடையில ஆயிரம் ஆயிரமாக ரெண்டு வாட்டி தந்தாவ. குடிச்சித் தீத்துப்புட்டான் இந்தக் கடங்கார மனுசன். அரிசி, பருப்புன்னு ஓசியா, ரேஷன் கடையில கொடுத்தாவ. அந்தாக்குல கவருமெண்டும் என்னத்த இதுக்குமேல செய்ய எங்க்கிட்டுப் போவும்?. கோடி சனங்களுக்கு?.
எம் புருஷன் கூப்பிட்ட கூலி வேலைக்கிப் போவும். இப்போ வேலையுமில்ல கழுதையும் இல்ல இருமிக்கிட்டிடு வூட்ட்டல கிடந்து.. உசிர வாங்குது..எப்பதான் இந்தச் சீக்குக்கு ஒரு அழிவு காலம் பிறக்குமோ?ஆத்தாதான் காப்பாத்தனும் இந்த பூமிய.”
.
“இந்த வைரஸ் நோய் இப்ப குறையாதாம்.இனிமேல்தான் இன்னும் அதிகமாகும் பார்வதி.பழைய வாழக்கைக்குத் திரும்பப் போக இன்னும் ரொம்ப நாளாகும்”என்றாள் ராஜலட்சுமி.
“என்னக்கா சொல்லுதிய? நம்ம ஊருக்குள்ள நிறைய சனம் சுகமில்லாம கிடக்காங்களாம்.
அம்மன் கோயிலு தெரு, பெட்டிக்கடை பரமசிவம், அவர் பொஞ்சாதி, ரெண்டு பிள்ளிய,குடும்பத்தோ டவுனு ஆஸ்பத்திரில கிடக்காங்க. அந்த பஞ்சாயத்து போடு ஆபீசு, தெருவ கம்ப கிம்ப வச்சி அடைச்சு வச்சி போலீஸ் காவலுக்கு நிக்கி.சமாச்சாரம் என்னன்னு தெரியமாட்டக்கு .”
“சேத்து வச்ச துட்டு செலவாயிப் போச்சு.போட்ட சீட்டத் தள்ளி எடுத்தாச்சு. இப்ப வயித்து பாட்டுக்குல்ல. நாலு வீட்டிலயும் , கொஞ்சனாளைக்கி வீட்டு வேலைக்கி வரண்டான்னு சொல்லிப்புட்டாங்க. ஒரு அக்கா, டீச்சரு இரக்கப்பட்டு, ரெண்டாயிரம் தந்துச்சி. மேல் கொண்டு கேட்டா தர மாட்டாங்க..பசி வந்துடுச்சனன்னா வெக்கம், மானம் ஏதுக்கா? பத்தும் பறந்து போடுச்சி.”
“ரொம்ப கஷ்டம் சரசு. யாருக்கும் வேலை கிடையாது. வருமானம் கிடையாது. வெளியே போனால் நோய் தொற்றிடும் என்று பயம். ஆஸ்பத்திரில இடமில்லை.”
வைத்தியம் பாக்குற டாக்டருக்கு இந்த நோய் இருக்குன்னு சொல்றாங்க. அதனால நிறைய ஆஸ்பத்திரியை மூடிட்டாங்க.”
"இந்தப் பாவி மனுஷன், இன்னும் குடிய நிப்பாட்டல.. கடை இருக்கு காசுதான் இல்லை. இப்ப பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் இல்ல. திங்கிறதுக்கு எண்ணத்தயாவது கேக்குதுக.. ஆனா அடுப்பு அணஞ்சி ரொம்ப நாளாச்சு. வெக்கமில்லாம ஒரவு க்காரங்கட்ட கை ஏந்தியாச்சி". சரஸ்வதிக்கு சொல்லும்போது அழுகை வந்தது.
“அரளி விதையை அரச்சிசு குடிச்சிட்டு பிள்ளைகளுக்கும் கொடுத்துட்டு போயிரலான்னும் ரோசன வருது. பெரவும் மனசு கேக்க மாட்டக்கு”
“பசி, நமக்குப் பழகிப் போனதா இருந்தாலும், அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆறு மாசமா சாப்பிடாம இருக்க முடியுமா?. சரசு
எங்களுக் கெல்லாம், வருஷத்துல நாலு மாசம் தான் சீசன். வருமானம். தை, மாசி, பங்குனி, சித்திரை இந்த நாலு மாசத்துல நடக்கிற கோயில் திருவிழாக்கள்தான். கச்சேரியில் சம்பாத்தியம் பண்ணுறதுதான் மீதி வருஷம் முழுசும் காப்பாற்றும்.
இந்த வருஷம் அதுல்லாம் கேன்சல் ஆயிடுச்சு. கோவிலில் சாமிக்குக் கூட கொடை நடத்த முடியாம போயிருச்சு.வில்லுப்பாட்டுக்கு வாங்கின, அட்வான்ஸ் எல்லாம் திரும்பக் கொடுக்க வேண்டிய நிலமை வந்துருச்சு.
ஏற்கனவே வில்லுப்பாட்டுக்க்கு முந்தி இருந்த மவுசு, இப்ப இல்ல.ஆறு ஏழு பேர் போனாலும் ஆளுக்கு 500 ரூபாய்க்கூட கிடைக்கிறதில்ல. நாங்களும் பழைய பாட்டை எல்லாம் மாத்திப் புதுப்புது சினிமா ப்பாட்டுகளையும் சேர்த்துப் பார்த்தோம் ஆனாலும் பெருசா ஒண்ணும் பிரயோஜனம் இல்ல.ஆடலும் பாடலும், சினிமாப் பாட்டுக் கச்சேரி, காணக் குறைக்குப் பட்டிமன்றம் எல்லாம் வந்து எங்க பொழப்புல மண்ணள்ளிப் போட்டுடுச்சி.
இருந்தாலும் பாரம்பரிய கலைகள் அழியக் கூடாது, அதை நம்பியே பிழைக்கும் எங்களைப் போன்ற கலைஞர்கள் சோறு திங்கணும்ன்னு அக்கறை உள்ள சில நல்லவங்க ஆசீர்வாதத்தால், கிராமங்களில் மட்டும் திருவிழாவுக்குக் கூப்பிடறாங்க.
இந்த லாக் டவுன் காலத்துல, நம்ம ஊரச் சுத்தி மட்டும் நானூறு ஐநூறு பேர், கிராமியக் கலைஞர்கள் குடும்பத்தோடு பட்டினியாக் கிடக்கராங்க.
திண்டுக்கல், மதுரை அப்படி இப்படின்னு ஆயிரக்கணக்கில நாடக நடிகர்கள், தெம்மாங்குப்பாட்டு படிக்கிறவங்க, யார் யாரெல்லாம் கோயில் திருவிழாவை நம்பிப் பிழைப்பு நடத்துனாங்களோ, அவங்க வயித்துல எல்லாம் மண்ணு விழுந்துட்டுது.”
“உங்கபாடு தேவலக்கா. ஒரு வருசத்துக்கு மின்ன டிவில கூட உங்களப் படம்பிடிக்க வந்தாவாளே.துட்டு தரலியா?. பேங்க்ல கீங்கிலப் போட்டு வைச்சிருப்பிய! எம்போல அன்னாடம் காச்சியபொழப்புதான்,சிரியா சிரிக்கி. நாண்டுகிட்டு நிக்கனும்”
” இங்க பாரு .உண்மையச் சொன்னா, நீ சொன்னது மாதிரி,உனக்குப் பத்தும் பறந்து போச்சி. எனக்கு அதில ஒண்ணு ரெண்டு பாக்கி இருக்கு அவ்வளவுதான்.டி. வி மட்டுமா?.. அழிந்துவரும் கலைன்னு, டிவியில எங்களக் காமிச்சி அவன் சம்பாத்தியம் பண்ணிட்டான். ஒரு சினிமாவுல கூட நடிச்சிருக்கேன். வில்லுப்பாட்டுக் காரியா நடித்த ஒரு நடிகைக்கு டூப்பு நான். ஆனா என்ன பிரயோஜனம். காசு பணம் தரல.
அரசாங்கம் கொடுத்த கலை மாமணி பட்டம் இருக்கு. எதுக்கு?. நா…கு.. வழிக்கவா. எந்த ஊர்லயாவது பட்டம் பசியப்ப் போக்குமா? என்னோட, இந்தக் கலையும் அழிஞ்சிப் போகும். அதுக்குப் பிறகு யாரும் இதைக் கையில் எடுக்க மாட்டாங்க.”
“நான்கூட பெருசாத்தான் நினச்சிபுட்டேன். என்னமோ சொன்னான் கதையாவில்ல்ல இருக்கு உங்க கத. கிழவி சொன்ன சொலவடதான் ஞாபத்துக்கு வருது.”
“சரி சரி அதை விடு. இப்ப என்ன விஷயமாக வந்தே? சும்மாதான் வந்தியா?. இல்லை ஏதேனும் காரியமாக வந்தியா?..” லேசா கம்மிய குரலில் கலைமாமணி ராஜலட்சுமி கேட்டா.
“இருந்த அண்டா குண்டா வித்தாச்சி.அடவு வைக்க ஒண்ணுமில்ல.நீங்க… என்ன நினைச்சாலும் சரி. நீங்கதான் கச்சேரிக்குப் போம்போது கழுத்து நிறைய சங்கிலி, நெக்லஸ் போட்டுட்டுப் போறீங்க. மாரியாத்தா நகை போட்ட மாதிரி, தளதளன்னு.
அதுல ஒரு சங்கிலியைத் தந்தியன்னா அடவு வச்சு, பெறவு மாடுகணக்கா பாடுபட்டு,சங்கிலியத் திருப்பியாந்து தந்துருவேங்க்கா…. நாம் பெத்து வச்சிருக்க ரெண்டு புள்ளைக மேலசத்தியமா.”
ராஜலட்சுமி ஒண்ணுமே பேசாம வீட்டுக்குள்ளே போனாள். பத்து நிமிஷத்தில் திரும்ப வந்து, நகைப்பெட்டி ஒன்றைக் கொடுத்தா திறந்து பார்த்த சரஸ்வதிக்கு ஆச்சரியம் ஒரு சின்ன செயின் தான் கேட்டாள் ஆனால் எப்படி ரெண்டு பவுன் இருக்கும். அப்படி ஒரு கல் வச்ச நெக்லஸ் கொடுப்பான்னு நினைக்கல.
கதவத் திறந்தன்னா கால்ல.. ஆமா, மாரியாத்தா காலுல விழுற மாறி விழனும். பக்கத்து ஊர்ல, கம்மல் மூக்குத்தியை அடவு வச்ச கடக்கி கருக்கலுக்குள்ள, போய் இதையும் வச்சிட்டு, அரிசி வாங்கிக் கஞ்சி காச்சனும்.. என் தோல செருப்பா தச்சி போட்டாலும்” ..
அழுதுகிட்டே போனா. அவள் போனதும் கலங்கிய கண்களோடு உள்ளே சென்ற ராஜலட்சுமி, சாமி படத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். லேசாத் தூரத்தொடங்கி பெரிய மழை வந்துவிட்டது.
இருட்டிவிட்டது. மழை வேறு பிடித்துக்கொண்டது. அதனால் நாளை காலையில் கடைக்கு செல்லலாம் என்று முடிவுசெய்தா சரஸ்வதி. புருஷனுக்குத் தெரியாம எப்படியோ பொத்திப் பொத்தி வைத்தாலும் நகை இருப்பதைக் கண்டுபிடித்து, அவளிடமிருந்து அதைப்பிடுங்க முயன்று இரண்டு பேரும், அடிதடி சண்டை போட்டு கடைசியில், ஓங்கி ஒரு அடி கன்னத்தில் அடித்து அவளைச் சாய்த்துவிட்டு நகையோடு வெளியே ஓடிட்டான் மருது.
மறுநாள் .. .சாயங்காலம் “எக்க்கா.”. சத்தம் கேட்டு..”உள்ள வா” என்றாள் ராஜலட்சுமி.கட்டிலில் படுத்திருந்தார் ராஜலட்சுமியின் கணவர் கனக சுப்பு. அவர்தான் வில்லிசை குழுவில் குடம் அடித்து, ஜோக் அடித்து எல்லோரையும் சிரிக்கவைப்பார்.
“இந்தாக்கா.வீட்டுல சுட்ட அதிரசம். சும்மா சாப்பிடுக்கா ஒண்ணும் செய்யாது”.. ராஜலட்சுமிக்கு பதட்டமாக இருந்தது.
“இதப்பாருக்கா”.. பார்த்தாள். பணம். எண்ணிப்பார்த்தால், 5000 ரூபா சுளையா.
“என்னடி சரசு இது?.”உம் அட்டியல அடவு வச்சாச்சிக்கா.ரெண்டு பவுனாம்.நான் ரொம்ப துட்டு வாங்கிட்டா பிறவு நாந்தான அடைக்கணும். பத்தாயிரத்துக்கு தான் வச்சேன். அம்புட்டு ருவாய வச்சு நான் என்ன கோட்டையா கட்ட போறேன்? அக்கா, கஷ்டத்துலதான இருக்கீக .பாதி ரூவாய நீங்க வச்சிக்கிடுக. அண்ணாச்சி கூட அரவாயித்துக் கஞ்சி குடிச்சமானிக்குத் தெரிது. யாம் இப்பி டி படுத்திருக்காவ?வீட்டுலக் காச்சின கஞ்ஞ்சியக் கும்பாவுல கொண்டாந்து கேன்.குடிக்கச் சொல்லுக.துட்டு பூராம் நான் திருப்பி மொத்தமாஅடச்சிட்டு, உம் அட்டியல கொண்டாந்து குடுத்துருவேன்.
” சரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு வில்லிசைத்த் திலகம் கலைமாமணி ராஜலட்சுமி மெதுவாக விசும்பினாள். “செட்டியார் முறுக்கா? சரக்கு முறுக்கா?ன்னு சொல்லுவாங்க. நானும் 15 வயசுல வில்லுக்கச்சேரி பாட ஆரம்பிச்சேன். இப்ப எனக்கு வயசு 65. இத விட்டா வேற தொழில் தெரியாது. என் வீட்டுக்காரர், எங்க செட்டுல வாசிக்கிற இன்னும் அஞ்சு பேரு குடும்பம் எல்லாத்துக்குமே இந்தத் தொழில் மட்டும்தான். என்னமோ எங்களுக்கு பிள்ளை பாக்கியம் இல்லை.
சின்ன வயசா இருக்கும்போது சிவப்பா அழகா இருந்தேன் .அப்போ வில்லுப்பாட்டுக்கு, நல்ல மவுசும் இருந்தது கூட்டம் கூட்டமா வருவார்கள். வயசாக வயசாக ,நல்ல மேக்கப் போட்டுக்கிட்டு எடுப்பா போனா மட்டும் தான் கொஞ்சமாவது ரசிப்பாங்க. ஒரு வருஷம் போன இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள, யார் யாரிடமோ வணக்கம் போட்டு, கும்பிட்டு, ஒன்னுக்குமத்தவன்” ஐயா” என்று சொல்லி கூழைக் கும்பிடு போட்டாதான், காக்கா புடிச்சாதான் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். நமது திறமையை யாரும் இன்னிக்கு மதிப்பதில்லை.
அதோட அந்தக் காலத்துல சொன்னது மாதிரி, விரல்கள் ஐந்தினில் மோதிரம் வேண்டும் .விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும் என்பதுபோல ,நல்ல பட்டுச்சேலை கட்டி, கழுத்து நிறைய கைநிறைய நகையைப் போட்டு ருந்தால்தான், பெரிய பார்ட்டின்னு மதிக்கிறார்கள். அதற்காகத் தாண்டி இந்த நகை எல்லாம்.
என்ன நடந்தது?. என்று உண்மையைச் சொல்லு. என் நெக்லஸை கொடுத்தேன். அது போக இன்னும் இருக்கக்கிற எல்லா நகைகளையும் கொடுத்தாலும் யாரும் உனக்குப் பணம் கொடுக்க மாட்டாங்க. ஏன்னா, அது எதுவுமே ஒரிஜினல் தங்கம் இல்ல. எல்லாமே ரோல்டு கோல்டு. மேடைக்குப் போட்டுகிட்டு.. மினுக்கும்.. அது கருத்த உடன் அதே மாதிரி வேற வாங்குவேன்.. ஏமாற்று வேலை. சொல்லிட்டு, கலைமாமணி அழுதாங்க.
“அக்கா அழாதிய. கண்ணத் தொடங்க. களவாணிப் பய என் புருஷன்அட்டியலத் தூக்கிட்டு ஓடிட்டான் போயி ராவோட ராவா அதை எங்கேயோ விக்க இடத்தில தெரிஞ்சிடுச்சி. கொண்டாந்து கெட்டவாய் பேசி , அட்டியல எம் மூஞ்சிலத் தூக்கி வீசிட்டு போய்ட்டான். அப்பதான்க்கா, உம் நிலம பூறாம் எம்ம் மண்டைல ஏறிச்சி. கஷ்டத்தச் சொல்லி நான் பிச்சை எடுக்கன். நீ ஊர்முளுக்க தெரிஞ்ச,என்னமோ ஒரு மணி… என்ன மணி ?.அதான் கஸ்டத்த உன்னால சொல்ல முடியல.தம்மானம் தடுக்க்கி நிக்கி. எல்லா நகையும் டூப்ளிகேட்டு, கவரிங்குன்னு மனசுல ஆச்சு.
போன மாசம் சிவகாசியிலருந்து வந்து, அது என்ன குடிநீர்! ஆமா, கமாசுர குடிநீர் கொடுத்துச்சே ஒரு தம்பி, அந்தத் தம்பி,அவங்கப்பா பேர்ல..என்ன? . என்னமோ டெஸ்ட் ஆம் ,சொல்லிச்சு. அந்த டெஸ்ட் புதுசா ஆரம்பிச்சிருக்காம். சோத்துக்கு இல்லாத பஞ்சைகளுக்கு 5000 ரூபாய் கொடுக்க இன்னைக்குக் காலைல நாலஞ்சி வேரோடுவந்தாங்க. நம்ம ஊருல நாலு வேருக்கு மட்டும் கொடுத்தாங்க. அதுல நா ஒருத்தி.
அந்தப் பையங்கிட்ட உங்களப் பத்திச் சொல்லி, அவிய வீட்ட விட்டு வெளிய வரமாட்டாவ. நல்லா இருந்து கெட்டுப்போனது. அது பேரையும் சேத்துக்க தம்பின்னு, நல்லாத்த சொல்லி, அக்கா, யாருட்டயும் கேக்க மாட்டாவன்னு சொல்லி, கால்ல கைல வுழுந்து இந்த ரூவாய வாங்கிபுட்டேமுக்கா.”
முகமூடி போடல. கையுறை அணியல. ஆனால் கலைமாமணி வில்லிசைத் திலகம் ராஜலட்சுமி ஒரு படிக்காத, பாமர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த, ஒரு கூலிக்காரன் பொண்டாட்டியைப் பாசத்தோடு இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.