ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்தி்ல் வேளாண் பொருட்களை விவசாயிகளே விற்பனை செய்யலாம்; மோடி பேச்சு
1 min read
Farmers can sell agricultural products in a single country, in a single market scheme; Modi’s speech
9-8-2020
ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்தில் வேளாண் பொருட்களை விவசாயிகளே விற்பனை செய்யலாம் என்று பிரதமர் மோடி கூறினார்.
வேளாண் உள்கட்டமைப்பு திட்டம்
வேளாண் உள் கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவித் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு, குளிர்சாதன சேமிப்பு மையங்கள், சேகரிப்பு மையங்கள் போன்ற விவசாய சொத்துக்களை உருவாக்குவதற்கு, இந்த நிதி ஊக்கமளிக்கும்.விவசாயிகள் தங்கள் பொருட்களை அதிகளவில் சேமித்து வைப்பதன் மூலம், பொருட்கள் வீணாவதைக் குறைக்க முடியும்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி திட்டத்திற்காக, 12 பொதுத்துறை வங்கிகளில், 11 வங்கிகள், விவசாயிகள் நலத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.பிரதம மந்திரியின் விவசாய நல நிதி திட்டத்தின் கீழ், 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் நேரடியாக வழங்கப்பட்டு உள்ளது.
8.5 கோடி விவசாயிகள்
ஆறாவது தவணையாக, 8.5 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் 17 ஆயிரம் கோடி ரூபாயை இன்று பிரதமர் மோடி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி, நாடு முழுதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முன்னிலையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் உள்பட பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் விவசாயிகள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
நம் பூமியை காக்க குறைந்தளவிலான யூரியாவை பயன்படுத்த வேண்டும். 17 ஆயிரம் கோடி நிதி நேரடியாக 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வேளாண் உற்பத்தியை அதிகரிக்க பாடுபடும் மத்திய பிரதேச விவசாயிகளுக்கு எனது பாராட்டுக்கள். சுயசார்பு திட்டத்தின் கீழ் விவாயிகளை விவசாயம் சார்ந்தவர்களை கொண்டு வர முயற்சி நடக்கிறது.விவசாய பொருட்களை பாதுகாக்க சேமிப்பு கிடங்கு அமைக்க கடன் வழங்கப்படும்.
ஒரே தேசம், ஒரே சந்தை
ஒரே தேசம், ஒரே சந்தை என்பது சாத்தியப்பட்டுள்ளது.வேளாண் பொருட்களை உற்பத்தி செய்தவர்களே இனி நேரடியாக விற்பனையும் செய்ய முடியும். விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் கட்டமைப்பு நிதி மூலம் விவசாயிகள் தாங்கள் கிராமங்களில் நவீன சேமிப்பு கிடங்குகளை அமைக்க முடியும்.
மராட்டிய மாநிலத்தில் இருந்து பீகார் வரை விவசாய ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.