விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு சல்யூட் ; நடிகர் சூர்யா பதிவு
1 min read
Actor Surya Salute to those involved in the plane crash rescue mission
12-8-2020
கோழிக்கோடு விமான விமான விபத்தில் இறந்தவர்களுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு சல்யூட் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
விமானவிபத்து
நாட்டில் கொரோனாவால் ஊரடங்கு அமலான பின்னர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் இந்தியர்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
அதேபோல் கடந்த வெள்ளி கிழமை துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 185 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர்.
அந்த விமானத்தில் பயணிகளைத் தவிர விமானிகள் 2 பேர், பணிப்பெண்கள் 4 பேரும் இருந்தனர்.
இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை அந்த விமானம் நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி அருகில் இருந்த 35 அடி பள்ளத்தில் விமானம் விழுந்து இரண்டாக பிளந்தது.
19 பேர் சாவு
இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் இறந்து போனார்கள். 100க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகிலுள்ள நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீவிர சிகிச்சை காரணமாக இதுவரை 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.
விமான விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கேரள அரசும் மத்திய அரசும் அறிவித்துள்ளன.
விபத்து நிகழ்ந்தவுடனே உள்ளூா் பொதுமக்களும் அதிகாரிகளும் இணைந்து மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டனர். கொரோனா பீதி, மோசமான வானிலை ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அவா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால்தான் மிகப்பெரிய அளவில் விபத்து நடந்தபோதிலும், உயிரிழப்பு குறைவாக இருந்தது.
சூர்யா சல்யூட்
இந்த விபத்து நிகழ்ந்தவுடன் அந்த பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.
அதேபோல் நடிகர் சூர்யாவும் மலப்புரம் மக்களுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். அவர் இதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் “துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். மீட்பு பணியில் மலப்புரம் மக்களுக்கு சல்யூட். விமானிகளுக்கு என்னுடைய மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.