July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

இலக்கியமும் பண்பாடும்

1 min read

Ilakkiyamum panpaadum by Muthumani

20–8-2020
தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல் ஒரு முக்கியமான கூறு. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று.
சாவைத் தடுக்கும் மருந்தாகிய தேவாமிர்தமே உன் கையில் கிடைக்கப்பெற்று, அதை நீ உண்ணுவதாய் இருந்தாலும் விருந்தினர்களைப் பார்க்க வைத்துக்கொண்டு, அல்லது விருந்தினர்களுக்குத் தெரியாமல் மறைத்து உண்பது தவறு என்பது வள்ளுவன் வாக்கு.
மருந்தோடு ஆயினும் விருந்தோடு உண் என்பது மூத்தோர் வாக்கு.மருந்தாக இருந்தாலும் கூட அருந்தும் நேரம் வீட்டுக்கு யாராவது வந்துவிட்டால் ,அதைக்கூட உண்ணுங்கள் என்று கொடுக்க வேண்டும். இது சற்று மிகைப்படுத்தப்பட்ட தாயினும். விருந்தினர் உண்ணாமல் தான் உண்ணாமை நம் பண்பாட்டின் அடித்தளம்.
அக்காலத்தில் வீட்டில் உணவு தயாரானவுடன் வாசலுக்கு வெளியில் வந்து நின்று, குடும்பத்தலைவி “எங்கள் வீட்டில் உணவு தயாராக இருக்கிறது யாரேனும் சேர்ந்து உண்ண வருகிறீர்களா?.” என்று அழைத்து விட்டுத்தான் தாங்கள் உண்ண செல்வார்களாம்.

பின்னாளில் காக்கைகளுக்கு உணவை வைத்துவிட்டு உண்ணும் பழக்கமும் இருந்தது.
விருந்தினரை உபசரிப்பதில் இன்முகத்தோடு, வரவேற்று அவர்கள் வேண்டாம் வேண்டாம்,, என்று சொன்னாலும் இன்னும் ‘கொஞ்சம் உண்ணுங்கள்’ என்று பார்த்து பார்த்து உபசரிக்க வேண்டும். வீட்டிற்கு வருவோரை முறைத்துப் பார்க்க கூடாது. ‘ஏன் வந்தாய்?” என்று கேட்பது போல் இருக்கும்.
முகம் மலர்ந்து வரவேற்று, அன்போடு அமர்த்தி, உப்பில்லாத வெறும் கூழைக் கொடுத்தாலும் அது உண்பவர்க்கு அமுதத்தை விட இனிமையானதாக இருக்குமாம். மா, பலா, வாழை முக்கனிகளும் கலந்த இன்சுவை உணவாயினும், முகத்தைச் சுளித்துக் கொண்டு பரிமாறினால், பசியுடன் வந்தவர் அதை உண்டாலும் பசி மேலும் வளருமாம். பசி தனியாதாம்.
இப்படி நம் பண்டை இலக்கியமான விவேக சிந்தாமணி கூறுகிறது. விருந்தோம்பலின் மேன்மையை எடுத்துச் சொல்லும் அந்தப் பாடலை இங்கே காணலாம்.

ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும்
முப்பழமொடு பாலன்னமும் முகம் கடுத்திடுவாராயின்
கப்பிய பசியினோடு
கடும்பசி ஆகுந்தானே.

விவேக சிந்தாமணி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *