விநாயகர் பற்றிய சிறப்பு தகவல்கள்
1 min read
Special information about Ganesha
அர்ச்சனை மலர்களும் கிடைக்கும் பலன்களும்
விநாயகர் சதுர்த்தி அன்று 21 மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது அனைத்து நன்மைகளும் கிடைக்கும். எருக்கம் மலர் அர்ச்சனையால் கருவில் உள்ள குழந்தைக்கு நல்லது. மருதம் இலையால் அர்ச்சனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜாதி மல்லி இலையால் வீடு, மனை வாங்கலாம். இலந்தையால் கல்வி பெருகும். வில்லவத்தால் இன்பம் பெருகும். அரச இலையால் உயர் பதவி கிடைக்கும். நாயுருவி இலையால் அழகு கூடும். கடங்கத்தரி இலையால் வீரம் பெறலாம். அரளியால் வெற்றி கிடைக்கும். மாதுளை இலையால் புகழ் பெறலாம். அகத்தி கீரையால் கடன் தொல்லை நீங்கும். கரிசலகங்கண்ணி இலையால் அர்ச்சனை செய்தால் வீட்டுக்கு தேவையான பொருள் கிடைக்கும்.
====
வெள்ளெருக்கு பிள்ளையார்
விநாயகரை மரம், உலோகம், மண், சந்தனம் போன்றவற்றால் செய்து வழிபடுகின்றனர். ஆனால் வெள்ளெருக்கு பிள்ளையாருக்கு தனி மகத்துவம் உண்டு. எருக்கம் மாலை விநாயருக்கு மிகவும் உகந்தது என்பதை நாம் அறிவோம். எருக்கஞ்செடி பூக்கள் பெரும்பாலும் நீலம் கலந்து வைலெட் கலரில் இருக்கும். ஆனால் சில எருக்கில் மட்டும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். அதைத்தான் நாம் வெள்ளெருக்கு அழைக்கிறோம். அந்த எருக்கில் வடக்கு நோக்கி செல்லும் வேரை எடுத்து அதில் காப்பு கட்டி மந்திரம் கூறி விநாயகரை வடிவமைத்தால் அந்த பிள்ளையாருக்கு தனி சக்தி ஏற்படும். இந்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்குவது சிறப்பு. இதவை வீட்டல் வைத்து வணங்கினால் செல்வம் பெருகும். அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டாம். அத்தர், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனை திரவியங்களை பூசலாம்.
விநாயகருக்கு துளிசி பிடிக்காதது ஏன்?
விநாயருக்கு பல்வேறு பூக்கள், இலைகளால் அர்ச்சனை செய்யலாம். ஆனால் துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. துளசி மாலையும் அணிவிக்க கூடாது. துளசி என்ற பெண் விநாயகரை மணக்க பல ஆண்டுகள் தவம் இருந்தாள். ஆனால் விநாயகர் அவளை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அதோடு திருமாலின் மனைவியாக இரு என்று சொன்னார். அதையும் துளசி கேட்காததால் துளசியை செடியாக கடவாய் என்று சாபமிட்டார். மேலும் உன் இலை என் பூஜைக்கு ஏற்றதல்ல என்றும் கூறினார். அதனால்தான் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்வது கிடையாது.
====
மனித முகத்தில் பிள்ளையார்
பிள்ளையாரின் அடையாளமே தும்பிக்கைதான். ஆனால் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள விநாயகருக்கு தும்பிக்கை கிடையாது. மனித முகத்துடன் காணப்படும் இந்த விநாயகர் மருதம் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரை வணங்கினால் தோல் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.
விநாயகர் சதுர்த்தியில் மஞ்சள் பிள்ளையார்
விநாயகர் சதுர்த்தி அன்று கழிமண்ணினால் செய்யப்பட்ட பிள்ளையாரை வாங்கி வந்து வழிபடுவது வழக்கம். அந்த மண் பிள்ளையாருக்கு முன்பு சிறிய அளவில் சிறிய அளவில் மஞ்சள் பிள்ளையாரை வைத்து வணங்குவது சிறப்பு. அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
அதற்கு ஹரிதாளிகா கவுரி விரதம் மேற்கொள்ள வேண்டும். ஹரிதம் என்றால் மஞ்சள் என்று பொருள். கவுரி தன் உடல் எல்லாம் மஞ்சளை பூசி மறுநாள் அந்த மஞ்சளை எடுத்து தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி விநாயகரை படைத்ததாக புராணம் கூறுகிறது. அதன் அடிப்படையில் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளில் அதாவது திருதியை திதி உள்ள நாளில் விரதம் இருந்து கவுரிக்கு மஞ்சள் பூசி பூஜை செய்ய வேண்டும். மறுநாள் களி மண்ணினால் விநாயகர் சிலை வாங்கி பூஜை செய்வோம் அல்லவா? அப்போது கவுரி அம்மன் மீது பூசப்பட்ட மஞ்சளை எடுத்து சிறிய பிள்ளையாராக செய்து களிமண் பிள்ளையார் முன்பு வைத்து பூஜை நடத்த வேண்டும். இப்படி செய்தால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படும். மேலும் புத்திர பாக்கியமும் கிட்டும்.
=====
அவ்வையாருடன் விநாயகர் சிலை
சென்னை பாண்டி பஜார் தலைமை தபால் நிலையம் அருகே ராஜா தெருவில் அகத்தியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள நவக்கிரங்களில் மையத்தில் இருக்கும் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்தபடி உள்ளார். மேலும் இந்த கோவிலில் சித்தி, புத்தியுடன் நித்யானந்த கணபதி உள்ளார். விநாயகர் சன்னதி அருகே அவ்வையார் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.