மகாபாரத கதைகள்/ 4 அக்னிக்கு விதிக்கப்பட்ட விபரீத சாபம்/ அமுதன் என்ற தனசேகரன்
1 min readMahabharata Stories/ 4 Perverse Curse of Agni/ Dhanasekaran alias Amuthan
5.4.2023
தினத்தந்தியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றிய திரு.தனசேகரன் அவர்கள் அமுதன் என்ற பெயரில் பல ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். மகாபாரத கதைகள் என்ற தொடரை செய்தி சாரலுக்காக படைத்துள்ளார்.
கங்கை நதியின் தாராள குணத்தால் அந்தப் பகுதி வனப்பு மிக்கதாக இருந்தது. அங்கே மிகப் பெரிய குளம். அந்தக் குளத்தில் இருந்து சற்றுத் தொலைவில் ஒரு ரிஷியின் அழகான ஆசிரமம் அமைந்து இருந்தது. அந்த ஆசிரமத்தின் தலைவர் தவுமியர் என்ற புகழ் பெற்ற ரிஷி. அவரிடம் உபமன்யு, ஆருணி, பைதன் என்ற மூன்று பேர் சீடர்களாக இருந்தார்கள். இதில் ஆருணி என்ற சீடர் குளத்தின் உடைந்த கரையை அடைத்த கதை, ரிஷின் கட்டளையால் கண் பார்வை இழந்த சீடரின் கதை, குருவின் மனைவியால் தர்மசங்கடத்திற்கு ஆளான சீடர் கதை ஆகியவற்றை கண்டோம். அடுத்து அக்னிக்கு விதிக்கப்பட்ட விபரீத சாபம் என்ற கதையை காணலாம்.
அக்னி, தனது ஜுவாலையால் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிடுகிறது
அல்லவா? இத்தகைய குணத்தை, அக்னி பெற்றது எப்படி என்பது தொடர்பான கதை இது.
பிரம்மாவின் மகனான பிருகு என்ற மகரிஷி, ஆசிரமம் ஒன்றை அமைத்துக் கொண்டு தனது மனைவி புலோமை என்பவளுடன் வாழ்ந்து வந்தார். அழகியான புலோமை, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.
ஒரு நாள் அதிகாலையில், ஸ்நானம் செய்வதற்காக ஆற்றுக்கு முனிவர் பிருகு
சென்றுவிட்டார். அந்த நேரத்தில் அவரது ஆசிரமத்துக்கு புலோமா என்ற பெயருடைய ராட்சதன் வந்தான்.
இவன் ஏற்கனவே புலோமையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டவன். ஆனால் புலோமையின் தந்தை, தனது மகளை பிருகுவுக்கு விவாகம் செய்து
கொடுத்துவிட்டார். ஆனாலும் அந்த ராட்சதனால் புலோமையை மறக்க முடியவில்லை. என்றாவது ஒரு நாள், எப்படியும் புலோமையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ராட்சதன், அதற்கு உரிய நேரத்திற்காகக் காத்து இருந்தான்.
அன்றைய தினம், ஆசிரமத்தில் முனிவர் இல்லாததைத் தெரிந்து கொண்ட ராட்சதன், இதுதான் சமயம் என்று திட்டமிட்டு, பிருகுவின் ஆசிரமத்துக்கு வந்தான்.
அந்த ஆசிரமத்தில் யாகம் செய்வதற்கான அக்னி இருப்பதைப் பார்த்த ராட்சதன்,அந்த அக்னியுடன் வாக்குவாதம் செய்தான்.
‘’தேவர்களுக்கு முகமாக இருக்கும் அக்னியே! எல்லாப் பிராணிகளுக்குள்ளேயும் எப்போதும் புண்ணிய பாபங்களுக்குச் சாட்சியைப்போல சஞ்சரிகின்றாய். எனவே சத்தியமான வார்த்தையை சொல். நான் தானே இந்த அழகி புலோமையை முதலில் மனைவியாக விரும்பியவன்? எனவே அவள் எனக்கே சொந்தமாக வேண்டும் அல்லவா? அவள் உண்மையில் எனது மனைவி என்பதை நீ சொல்ல வேண்டும். தனிமையில் இருக்கும் புலோமையை நீ பார்த்துக் கொண்டு இருக்கும்போதே இந்த ஆசிரமத்தில் இருந்து அவளைக் கொண்டு செல்வேன். புலோமை எனக்கே உரியவள் என்ற சத்தியமான வார்த்தையைச் சொல்’’ என்று ராட்சதன் கூறினான்.
இதனைக் கேட்ட அக்னி துக்கத்துடன், ‘’நான் உண்மையைக் கூறினால் பிரம்மஞானியான பிருகுவின் சாபம் என்னை வந்து சேரும். பொய் சொன்னால் நிச்சயம் நரகத்தில் போய் விழுவேன்’’ என்று கூறியது.
பின்னர், பொய்க்கும் பிருகுவின் சாபத்திற்கும் பயந்து மெல்ல, ‘’அசுரனே! இந்த அழகி புலோமை முதலில் உன்னால் வரிக்கப்பட்டவள்தான். ஆனால் நீ சாஸ்திரப்பிரகாரம் அவளை விவாகம் செய்து கொள்ளவில்லை. அதனால் நல்ல வரனுக்கு ஆசைப்பட்ட புலோமையின் தந்தை, அவளை பிருகுவுக்குக் கொடுத்துவிட்டார். என்னை சாட்சியாக வைத்துக் கொண்டு புலோமையை பிருகு மணந்து கொண்டார்’’ என்று கூறியது.
ஆனாலும் ராட்சதன் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
மின்னல் வேகத்தில் பன்றி வடிவம் எடுத்த அவன், ஆசிரமத்தில் இருந்த
புலோமையை தூக்கிக் கொண்டு விரைந்தான்.
அவ்வாறு சென்றபோது, நிறைமாதக் கர்ப்பினியாக இருந்த புலோமையின்
வயிற்றில் இருந்த சிசு, நழுவிக் கீழே விழுந்தது.
தாயின் வயிற்றில் இருந்து நழுவி விழுந்ததால், ‘நழுவுதல்’ என்ற பொருள்படும் சயவனர் என்ற பெயரைப் பெற்ற அந்தச் சிசு, சூரியனைப் போன்ற காந்த சக்தியுடன் ஒளிர்ந்தது.
அந்த ஒளியால் பாதிக்கப்பட்ட ராட்சதன், நீராய்க் கீழே விழுந்தான்.
பின்னர் புலோமை, தனது சிசுவை எடுத்துக் கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக ஆசிரமத்தை நோக்கிச் சென்றாள்.
வழியில் அவளைப் பார்த்த பிருகுவின் தந்தையான பிரம்மா, அவளைத் தேற்றினார்.
ஆசிரமத்துக்குச் சென்ற புலோமையிடம் நடந்தது என்ன என்று முனிவர் பிருகு கேட்டார். ராட்சதன் வந்து தன்னைத் தூக்கிச் சென்றதையும், நழுவி விழுந்த சிசுவின் சக்தியால் ராட்சதன் நீராகிப் போனதையும் புலோமை தெரிவித்தாள்.
இதைக் கேட்ட முனிவர் பிருகு, ‘’நீ இங்கு இருப்பது ராட்சதனுக்குத் தெரியாதே? உன்னைக் காட்டிக் கொடுத்தவன் யார் என்பதைச் சொல். அவனை எனது சாபத்தால் அழித்துவிடுகிறேன்’’ என்று கோபாவேசத்துடன் கேட்டார்.
‘’அந்த ராட்சதனுக்கு அக்னிதான் என்னைப் பற்றித் தெரிவித்தான்’’ என்று புலோமை கூறினாள்.
உடனே முனிவர் பிருகு, அக்னியைப் பார்த்து, ‘’இன்று முதல் நீ எல்லாவற்றையும் உண்ணக்கடவாய்’’ என்று சாபமிட்டார்.
இதைக் கேட்டு வருத்தம் அடைந்த அக்னி, ‘’நான் தவ வலிமையால் என்னைப் பல உருவங்களாகப் பிரித்துக் கொண்டு அக்னிஹோத்ரங்கள், ஸத்திரயாகங்கள், விவாகங்கள், கிருக காரியங்கள், மற்றும் பல யாகங்களிலும் இருக்கிறேன். என்னிடத்தில் ஹோமம் செய்யப்பட்ட ஹவிசினால் தேவர்களும், முன்னோர்களான பிதிர்க்களும் திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு வாயாக இருக்கும் நான், எப்படி அனைத்தையும் சாப்பிடக் கூடியவன் ஆவது?’’ என்று கூறி, அனைத்துச் சடங்குகளிலும் பங்கு பெறாமல் எங்கோ போய் ஒளிந்து கொண்டான்.
அக்னி இல்லாததால் உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். அவர்கள், ரிஷிக்களையும் தேவர்களையும் சந்தித்து இதனைச் சரிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதன் பேரில் ரிஷிக்களும் தேவர்களும் பிரம்மாவைச் சந்தித்து, பிருகுவின் சாபத்தில் இருந்து அக்னியை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
உடனே பிரம்மா, எல்லாப் பொருள்களுக்கும் காரணமும், அழிவில்லாததுமான அக்னியை அழைத்து, நயமான வார்த்தைகளைக் கூறினார்.
‘’அக்னியே! எல்லா உலகங்களுக்கும் நீயே ஆதியும் அந்தமுமாக இருக்கிறாய். உலகத்தில் எப்போதும் நீ தான் பரிசுத்தம் செய்பவன். நீ உன் சரீரத்தின் எல்லாப் பாகங்களாலும் எல்லாவற்றையும் சாப்பிடுபவன் அல்ல. உனது பின்புறத்தில் உள்ள ஜுவாலைகள்தான் எல்லாவற்றையும் உண்ணும். (உயிரினங்களின் வயிற்றில் ஜீரணம் ஆவதை இது குறிப்பிடுகிறது) மற்றபடி உனது ஜுவாலைகளால் தகிக்கப்பட எல்லாம் சுத்தம் ஆகும். எனவே உன் வாயில் ஹோமம் செய்யப்பட்ட தேவர் பாகத்தையும், உன் பாகத்தையும் வழக்கம்போல வாங்கிக் கொள்’’ என்று பிரம்மா கூறினார்.
இதனைக் கேட்ட அக்னி சமாதானம் அடைந்தது.
அன்று முதல் அக்னி, பிரம்மாவின் கட்டளைப்படி நடந்து கொண்டதால் ரிஷிக்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவரும் அக்னியின் பயனைப் பெற்று மகிழ்வோடு வாழ்ந்தார்கள்.