சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியீடு
1 min read
Surya's Sura Praise Movie will Releas In ODT
22-8-2020
நடிகர் சூர்யாக நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.
சூரரைப் போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியிடுவது தள்ளி போய்க்கொண்டே இருநதது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று (சனிக்கிழமை) அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வருருகிற அக்டோபர் மாதம் 30-ந் தேதி ‘சூரரைப் போற்று’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதிர்ச்சி
இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குமுன்பு சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படமும் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்போது பெரும் சர்ச்சை உருவானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ‘சூரரைப் போற்று’ படம் ஓடிடி வெளியீடு அறிவிப்பு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தேதனை
‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடுவது வேதனையாக இருக்கிறது. திரையரங்குகள் திறக்கப்படும்போது சில படங்கள் இருந்தால்தான் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள். அனைத்துப் படங்களையும் ஓடிடி தளத்தில் வெளியிட்டுவிட்டால் எப்படி திரையரங்குகளைத் திறக்க முடியும்?
2 படங்களில் நடிக்கிறேன் என்று சூர்யா சொல்கிறார். படப்பிடிப்புக்கே அனுமதி கிடைக்காமல் எப்படி நடிக்க முடியும். படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்படும்போது, திரையரங்கையும் திறக்கச் சொல்லிவிடுவார்கள். சும்மா சப்பைக்கட்டுக் கட்டுவதற்காகச் சொல்லக்கூடாது. திரைத்துறையில் ஒரு கஷ்டம் வரும்போது, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஒருவேளை ‘சூரரைப் போற்று’ படத்துக்கு 90 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்திருந்தால் சூர்யா என்ன செய்திருப்பார். 10 சதவீத படப்பிடிப்பு முடித்தால்தானே ஓடிடியில் கொடுக்க முடியும். அப்போது காத்திருக்கத் தானே வேண்டும். படத்தை முழுமையாக முடித்துவிட்டார்கள் என்பதால்தான், தயாரிப்பாளர்களுக்குக் கஷ்டம் என்றெல்லாம் பேசுகிறார்.
சூர்யா ஒரு தயாரிப்பாளராக யாருக்காவது ‘சூரரைப் போற்று’ படத்தில் 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருக்கிறாரா? சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. மற்ற நடிகர்களுக்குச் சம்பளம் மற்றும் தயாரிப்புச் செலவு அவ்வளவுதானே. சூர்யாவுக்கு லாபத்தில் நஷ்டமடைகிறதே என்று சங்கடப்படுகிறார். நாங்கள் நஷ்டத்தில் இன்னும் நஷ்டமாகிக் கொண்டிருக்கிறோம். அப்படியென்றால் எங்களை நீங்கள் கைதூக்கி விடவேண்டுமா இல்லையா?
பேச்சு வார்த்தை
‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடியில் வெளியானவுடன் என்னை அழைத்துப் பேசினார்கள். நீங்கள் வெளியிட்டு இருக்கக் கூடாது என்று சொன்னவுடன், அடுத்த முறை தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொன்னார்கள். சரி என்று நாங்களும் பொறுமையாக இருந்தோம்.
இப்போது எந்தவொரு முடிவையும் எடுக்காமல் படத்தை வெளியிடும்போது, நாங்களும் ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டி வரும். அவர்களுக்கு எப்படி அவர்களுடைய படத்தை எங்கு வேண்டுமானாலும் வெளியிட உரிமையிருக்கிறதோ, அதே போல் எங்களுடைய திரையரங்கில் என்ன படம் போட வேண்டும் என்ற உரிமை எங்களுக்கும் இருக்கிறது.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.