May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

எச்.வசந்தகுமார் எம்.பி. மரணம்; காமராஜர், சிவாஜியை ஓயாது புகழ்ந்தவர்

1 min read

H.Vasanthakumar passes away

28-8-2020
கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவர் தன் வாழ்நாளில் பெருந்தலைவர் காமராஜர் பெயரையும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெயரையும் எப்போதும் புகழ்ந்து உச்சரித்து வந்தார்.

எச்.வசந்த குமார்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தவர் எச்.வசந்தகுமார். தொழில் அதிபரான இவர் கடந்த 10-ந் தேதி கொரோனா பாதிக்கப்பட்டார். இவரது மனைவி தமிழ்செல்வியும் கொரோனா பாதிப்புக்கு ஆளானார். அவர்கள் இருவரும் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்தனர். தமிழ்செல்வி குணம் அடைந்த நிலையில் எச்.வசந்தகுமார் மட்டும் குணம் ஆகாமல் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று வரை அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன்பின் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக கூறப்பட்டது.

மரணம்

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவருக்கு வயது 70.

எச்.வசந்த குமார் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது அண்ணன் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் ஆவார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு (குமரி அனந்தனின் மகள்) எச். வசந்த குமாருக்கு சித்தப்பா ஆவார்.

எச்.வசந்தகுமரின் இறுதி சடங்கு நாளை( சனிக்கிழமை) அவரது சொந்த ஊரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்.வசந்தகுமார் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங். எம்.பி.யாகவும் இருந்து வந்தார்.

வாழ்க்கை குறிப்பு

எச். வசந்தகுமார் 1950-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி கன்னியா குமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் ஹரிகிருஷ்ண நாடார். தாயார் பெயர் தங்கம்மை.
எச்.வசந்தகுமார் பட்டப்படிப்பு படித்ததும் தொடக்கத்தில் சென்னை வந்து வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். அதன்பின் மிகச் சிறிய முதல் பணத்தைக் கொண்டு ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.
இந்தநிறுவனம் தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளன.

வசந்த் தொலைக்காட்சி

கடந்த 2008-ம் ஆண்டு வசந்த் தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

2006 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்று தமிழக சட்டசபைக்கு தேர்வானார். அதன்பின் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது எம்.எல்.ஏ. அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

” வெற்றிகொடிகட்டு” எனும் இவரது பிரபல சுயசரிதை புத்தகத்தை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி இணைந்து வெளியிட்டனர்.

சமூக சேவகர்

சென்னை 28, நாடோடிகள் மற்றும் கனிமொழி போன்ற திரைப்படங்களில் இவர் முகம் காட்டியுள்ளார். தீவிர சமூக சேவகரான இவர், ஏழை மாணவர்களுக்கு இலவச டியுசன் மையங்களை அமைந்து கொடுத்துள்ளார். மேலும் தெருவோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் பயன்பெரும் வகையில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.

காமராஜரின் தொண்டர்

எச்.வசந்தகுமார் பெருந்தலைவர் காமராஜரின் தீவிர தொண்டர். எந்த கூட்டத்தில் பேசினாலும் அவரது பெயரை உச்சரிக்காமல் இருந்தது இல்லை. அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரும்கூட.
அவரது வசந்த் தொலைக்காட்சியில் பெருந்தலைவர் புகழை அவ்வப்போது காட்ட தவறியது இல்லை. சிவாஜி கணேசனினையும் அவரோது புகழ்பாடாமல் இருக்க மாட்டார்கள்.
தினமும் காலையில் ஒளிபரப்பாகும் தேனருவி நிகழ்ச்சியிள் இறுதியில் காமராஜர் புகழ் பாடல் இடம்பெற தவறுவது இல்லை. இரவு அந்த பாடலை கேட்டுவிட்டு தூங்கும் கிராம வாசிகளை இப்போதும் காணலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.