போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் தற்கொலை: உறவினர்கள் முற்றுகை
1 min readAuto driver taken to police station for suicide: relatives besieged
2-9-2020
போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் தாக்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டோ டிரைவர்
சென்னை அருகே துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ரஞ்சிதா, கவிதா, சினேகா என்ற மகள்களும் உள்ளனர்.
ராஜேந்திரனின் உறவினர் முல்லா என்ற சிவகுமார் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவர், நேற்று முன்தினம் ராஜேந்திரன் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்றனர். அதற்குள் சிவகுமார் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால், ராஜேந்திரனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதன்பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.
வீட்டிற்கு சென்ற ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், ராஜேந்திரனை சரமாரியாக அடித்ததால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனால் உறிவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ராஜேந்திரனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதற்கிடையே தற்கொலை செய்தராஜேந்திரன் உடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப்பின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.