இந்து கோவில்களின்சொத்துக்களை ஆவணப் படுத்த கோரிக்கை
1 min read
Request to document the properties of Hindu temples
6-9-2020
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களின் சொத்துக்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் என, இந்து அமைப்புகள் அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
38 ஆயிரம் கோவில்கள்
தமிழகத்தின் இந்து அறநிலையத்துறையின் கீழ் தமிழகத்தில் சுமார் 38,000 கோவில்கள் உள்ளன. இவையனைத்தும் அன்றாட வருவாயை ஈட்டுவதோடு, ஏராளமான சொத்துக்களை உள்ளடக்கியது.ஒவ்வொரு மாவட்டத்திலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் ஏராளமாய் உள்ளன.
அவை குத்தகைதாரர்கள் வசம் உள்ளன.குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அவற்றிலிருந்து வருவாய் கோவிலுக்கு ஈட்டப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அவ்வருவாய், குறைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது.
ஆக்கிரமிப்பு
கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களில் பலர், வாடகைக்கு வர்த்தகம் செய்கின்றனர். சிலர் குடியிருக்கின்றனர். அதிலிருந்து நியாயமான வருவாய் கோவிலுக்கு வருவதில்லை. இன்னும் பல கோவில்களில், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கோவிலுக்கு சொந்தமாக ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. பல்வேறு காலகட்டங்களில் அரசியல் பிரமுகர்கள் சிலர், கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
இதை அப்புறப்படுத்த, அறநிலையத்துறை பெரிய முயற்சிகளை மேற்கொள்ளாதது, வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணப்படுத்த வேண்டும்
அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான நிலங்களையும், கட்டடங்களையும் ஆவணப்படுத்தி பட்டியலிட வேண்டும். சுவாமி பெயரில் பட்டா இருந்தால் அதை மாற்றவோ, ஏமாற்றவோ முடியாது. அரசு கட்டடங்கள், அரசு தானியக்கிடங்குகள் பெரும்பாலானவை, கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. கோவில் நிலங்களை மீட்டு, குத்தகை பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்கு கொடுத்து, முறையாக வரும் வருவாயை கோவில் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்களை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும்.
இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.