சிவசேனாவுக்கு எதிராக பேசிவரும் நடிகை கங்கனா ராவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
1 min read
Y Plus protection for actress Kangana Ranaut who Speech against the Shiv Sena
7-9-2020
மராட்டிய மாநில ஆளும் சிவசேனாவுக்கு
எதிராக பேசி வரும் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மத்திய அரசு ஓய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது.
சுஷாந்த் தற்கொலை
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், சமீபத்தில் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் (இவர் தமிழில் “தாம் தூம்” என்ற படத்தில் நடித்துள்ளார். 33 வயதான இவர், சுஷாந்த் சிங் சாவு பற்றி சொன்ன கருத்து மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது கங்கனா ரனாவத் ” நடிகர் சுஷாந்த் சிங் சாவுக்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள சினிமா மாபியாக்களும், போதைப் பொருள் கடத்தல்காரர்களும் தான் காரணம். இவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
சிவசேனா கண்டனம்
நடிகை கங்கனா ரனாவத் இந்த பேச்சுக்கு மராட்டிய மாநில ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஒருபடி மேலே சென்று, ” கங்கனா, இனி மும்பைக்கு வர வேண்டாம்’ என்று எச்சரிக்கும் விதத்தில் கூறினார்.
இதற்கு கங்கனா ரனாவத்தும் கடுமையாக விமர்சித்தார். “மும்பை நகரம், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது. இங்குள்ள ஆட்சியாளர்கள், தலிபான் பயங்கரவாதிகள் போல் உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர்” என்றார்.
மும்பைக்கு வரவேண்டாம்
இந்த நிலையில், மராட்டிய மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-
மும்பை போலீசார், மக்களை பாதுகாப்பதற்காக பல தியாகங்களை செய்துள்ளனர். ஆனால், நடிகை கங்கனா பொறுப்பின்றி பேசுகிறார். இனிமேல், மும்பையில் வசிப்பதற்கு, அவருக்கு தகுதியில்லை. அவர் மும்பைக்கு வர வேண்டாம்.
இவ்வாறு அனில் தேஷ்முக் கூறினார்.
மந்திரி கூறிய இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மந்திரி அனில் தேஷ்முக் கூறியதற்கு பதில் அளிக்கும் விதத்தில் கங்கனா கூறியுள்ளதாவது:-
கண்டிப்பாக வருவேன்
தலிபான் பயங்கரவாதிகள் எந்த மாதிரியான உத்தரவுகளை பிறப்பிப்பரோ, அதேபோன்ற உத்தரவுகளை மராட்டிய மாநில ஆட்சியாளர்கள் பிறப்பிக்கின்றனர். எனக்கு நேரடியாக மிரட்டல்கள் வருகின்றன. இதற்காக பயப்படப்போவது இல்லை. தற்போது நான் இமாச்சல பிரதேசத்தில் வசிக்கிறேன். வருகிற 9-ந் தேதி மும்பைக்கு கண்டிப்பாக வருவேன். முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள். இவ்வாறு கங்கனா கூறினார்.
மத்திய அரசு பாதுகாப்பு
இதனிடையே, தொடர்ந்து கங்கனாவுக்கு சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்து வருவதால், அவருக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் கங்கனாவுக்கு ஒரு தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் 11 ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு நன்றி தெரிவித்து கங்கனா ரனாவத் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ‛‛ இதன் மூலம், தேசபக்தியுள்ளவர்களின் குரல் நசுக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது. இதற்காக அமித்ஷாவுக்கு கடமைப்பட்டுள்ளேன். சில நாட்கள் கழித்து கூட மும்பை செல்லுங்கள் என எனக்கு அவர் அறிவுரை வழங்கியிருக்கலாம். ஆனால், இந்தியாவின் மகளை அவர் மதித்துள்ளார். சுயமரியாதை மறறும் பெருமையை பாதுகாத்துள்ளார். ஜெய்ஹிந்த்” . இவ்வாறு அதில் கங்கனா கூறியுள்ளார்.