மாநிலங்களவை துணை தலைவர் திடீர் உண்ணாவிரதம்
1 min readRajya Sabha Vice President fasts
22-/9/2020
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தன்னை அவமதித்ததாக கூறி மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் இன்று தடீரென்று உண்ணாவிரதம் இருந்தார்.
எம்.பி.க்கள் சஸ்பெண்டு
பாராளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவை விதிமுறைகளை மீறியதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பிக்களை சஸ்பெண்டு செய்து மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.
தர்ணா
சஸ்பெண்டு உத்தரவை கண்டித்து பாராளுமன்ற வளாக்தில் நேற்று(திங்கள்கிழமை) மாலை முதல் சஸ்பெண்டு செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காந்தி சிலை முன்பு இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களுக்கு, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை தேநீர்(டீ) கொண்டுவந்தார். ஆனால் எம்.பி.க்கள். அந்த தேநீரை குடிக்க மறுத்துவிட்டனர். விளம்பரத்திற்காக ஊடகங்களை அழைத்துக்கொண்டு ஹரிவன்ஷ் வந்து இப்படி செய்கிறார் என்று குற்றம் சாட்டினர்.
உண்ணாவிரதம்
இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் தன்னை அவமதித்து விட்டதாக கூறி மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி அவர் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
பிரதமர் பாராட்டு
இதற்கிடையே மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தன்னை அவமதித்த எம்.பி.க்களுக்கு, நேரில் சென்று தேநீர் வழங்க ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களோடு நானும் இணைகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.