கொரோனா ஊரடங்கால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
1 min readCorona curfew Increase in sexual offenses against women and children
23-/9/-2020
கொரோனா ஊரடங்கு காலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறினார்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு ஆரம்பித்தில் கட்டுப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது.
அந்த காலத்தில் தொழிலாளர்கள் உள்பட பலர் வேலைக்குச் செல்லாமல் இருந்தனர். இளைஞர்கள்கூட வெளியே செல்ல முடியாமல் தங்கள் பகுதியிலேயே முடங்கி கிடந்தனர்.
இந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை புகார்கள் அதிகம் வந்துள்ளன. இதுபற்றிய தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை மந்திரி ஸ்மிருதி இரானி பாராளுமன்ற மாநிலங்கள் அவையில் தெரிவித்தார். அவர் இதுபற்றி பேசியதாவது:-
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பாதிப்புகளை குறைக்க ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தொற்று பரவுதலை தடுக்க பல சுகாதார செயல்முறைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
ஆரோக்கியம், மருத்துவ நலம், குழந்தைகளின் ஊட்டசத்து, தாய், சேய் இறப்பு விகிதம், குழந்தை பாலியல் விகிதம் உள்ளிட்ட பல்வேறு தன்மைகளுடைய புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டு, ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை இதுவரை அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.
பாலியல் குற்றங்கள்
கடந்த மார்ச் முதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிமாக நடந்துள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, மார்ச் மாதம் 1 -ந் தேதி முதல் கடந்த 18-ந் தேதி வரை, தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில், குழந்தைகளுக்கு எதிராக நடந்த வன்கொடுமை தொடர்பாக 13,244 புகார்களும், குழந்தைகள் உதவி இந்திய அறக்கட்டளைபடி, 3,941 வன்கொடுமை புகார்களும் பதிவாகின.
இந்த குற்றங்கள் மீதான விசாரணைகளை விரைந்து முடிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் இந்த ஊரடங்கு காலங்களில், பெண்களுக்கு எதிரான ஆயிரக்கணக்கான குடும்ப வன்முறை புகார்களும் பதிவு செய்யப்பட்டன.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, காப்பீடு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறினார்.