May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கட்சி கேட்டுக்கொண்டால் ராஜினாமா செய்ய தயார் -கேரள அமைச்சர் ஜலீல் பேட்டி

1 min read

23.9.2020

Ready to resign if party asks – Interview with Kerala Minister Jalil

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் குரான்கள் வந்தபோது அதனுடன் தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் தொடர்புடைய கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல் பதவி விலக கோரி, கடந்த 2 வாரமாக எதிர்க்கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் ஜலீலிடம் அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏவும் விசாரணை நடத்தி உள்ளன.

இந்த சம்பவங்களுக்கு பிறகு அமைச்சர் ஜலீல் கடந்த சில தினங்களாக பத்திரிகைகளுக்கு எந்த பேட்டியும் கொடுக்காமல் ஒதுங்கி இருந்து வந்தார். இந்த நிலையில் அமைச்சர் ஜலீல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: குரான்கள் வந்த பார்சலில் தங்கம் உள்பட வேறு எந்த பொருட்களும் கடத்தப்படவில்லை. முஸ்லீம் லீக் கட்சிதான் தேவையில்லாமல் இந்த பொய் புகாரை கூறி வருகிறது.

குரான்கள் கொண்டு வரப்பட்டது தொடர்பாக, பிரதமர், என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை உள்பட பல அமைப்புகளுக்கும் சிலர் புகார் செய்து உள்ளனர். இதுதொடர்பாக சாட்சியாக விசாரிப்பதற்காகவே என்னை அழைத்தனர். நான் வெளியுறவுத்துறை சட்டவிதிமுறைகளை மீறவில்லை. ரம்ஜானையொட்டி இலவச பொருட்கள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், அவற்றை கேரளாவில் விநியோகிக்க முடியுமா? என்று ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் இருந்து என்னிடம் கேட்டனர். அவர்கள் கேட்டுக்கொண்டதான் நான் செய்தேன். இதில் எந்த சட்ட மீறலும் இல்லை.

நான் சட்ட விதிமுறைகளை மீறியதாக கூறுகின்றனர். ஆனால் பிரதமர் மோடியே பலமுறை விதிமுறைகளை மீறி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமரின் பிறந்த நாளுக்காக எந்த முன்னறிவிப்பும் இன்றி அந்த நாட்டுக்கு மோடி சென்றார். 6 முறை இவ்வாறு அவர் சென்றுள்ளார். நாட்டின் சட்டப்படி ஒரு பிரதமர் வெளிநாடு செல்லும்போது நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் அதை மீறி அவர் வெளிநாட்டுக்கு சென்றார்.

ஷார்ஜா மன்னர் கேரளா வந்தபோது, ‘அமைச்சர் அழைப்பாளர்’ என்ற முறைப்படி அவருடன் இருந்தேன். அப்போது ஐக்கிய அரபு அமீரக துணைத்தூதர் ஜமால் உசேன் அல்சாபியுடன் பழக்கம் ஏற்பட்டது. அன்றுமுதல் நான் அவருடன் தொடர்பில் இருந்து வருகிறேன். விழா மற்றும் பண்டிகை காலங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது உண்டு. தற்போது பிரச்னை ஏற்பட்டதில் இருந்து அவரை நான் தொடர்பு கொள்வதில்லை.

தங்க கடத்தலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக யாரிடம் இருந்தும் நான் பரிசோ, பணமோ வாங்கவில்லை. என்ஐஏ விசாரணையில் திருப்தி உள்ளது. நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கட்சி கேட்டுக்கொண்டால் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.