காங்கிரஸ் மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கடையம் மாரிகுமார் நியமனம்
1 min readKadayam Marikumar appointed National Coordinator of Congress Student Organization
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கடையம் மாரிகுமார் நியமனம்
24-/9/2020
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கடைத்தைச் சேர்ந்த மாரிகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மாரிகுமார்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கடையத்தைச் சேர்ந்த மாரிகுமாரை ராகுல்காந்தியின் பரிந்துரையின் பேரின் மாணவர் அமைப்பின் தேசிய தலைவர் நீரஜ்குந்தன் நியமித்துள்ளார்.
இந்த பொறுப்பு அகில இந்திய அளவில் 4 பேருக்குத்தான் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கடையத்தைச் சேர்ந்த மாரிகுமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரிகுமார் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தில் வந்தவர். சிறுவயது முதலே பெருந்தலைவர் காமராஜரை மானசீக தலைவராக ஏற்றுக் கொண்டவர்.
மாரிகுமார் கடையத்தில் ஏரல் ஆசாரி என்று அழைக்கப்பட்ட இசக்கி ஆசாரியின் பேரன் ஆவார். இவரது தந்தை முருகன். மாரிகுமாரின் பெரியப்பா கணேசன் நகர காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
பேட்டி
மாரிகுமார், தன்னை அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் செல்லக்குமார், மாணவர் அமைப்பின் தலைவர் நீரஜ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்தார்.
அவர் செய்தி சாரலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
இந்தியா என்பது பன்முகத்தன்மை நிறைந்த ஒற்றுமையான நாடு. அதாவது இறையாண்மை, சகோரத்துவம், சமத்துவம், பல்வேறு மொழி-இனம் ஆகியவை பின்னிப்பிணைந்த நாடு. இந்த சித்தாந்தத்துடன் தொடங்கப்பட்டதுதான் காங்கிரஸ். இன்று வரை இதன் கொள்கையில் மாறுபட்டது இல்லை.
காந்தி, நேரு குடும்பம் இந்த சித்தாந்ததுடன் ஒன்றிணைந்தது.
முழு மூச்சுடன் பாடுபடுவேன்
எனக்கு கொடுக்கப்படும் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பரப்புவதில் முழு மூச்சுடன்செயல்படுவேன். சமுதாயத்தின் ஆணிவேராக இருக்கும் மாணவர்களிடம் கட்சியின் கொள்கையையும், அதுதான் இந்த நாட்டுக்குத் தேவை என்பதையும் உணர்த்த பாடுபடுவேன்.
மாணவர்களின் உரிமைக்காக, மாணவர்கள் நலன் சார்ந்த விசயங்களில் அக்கறை காட்டுவேன்.
கொரோனா
கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் தாக்கி விடக்கூடாது என்று பிப்ரவரி மாதமே தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை குரல் கொடுத்தார்கள். அவரது கருத்தை கேட்டிருந்தால் 90 ஆயிரம்பேர் இன்று கொரோனாவுக்கு இறந்திருக்க மாட்டார்கள். கொரோனாவால் இன்று கோடி கணக்கான மனிதர்களின் வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்கியும் இந்தியாவின் பொருளாதாரத்தையும் படு குழிக்கு தள்ளியுள்ளனர்.
மக்களின் அடிப்படை தேவைகளான மருந்து வாங்குவதிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்குவது வரை எல்லாமே லாப நோக்கோடு செயல்படுகிறார்கள். இந்தியாவில் பெருகும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளனது.
சமீபத்தில் CMIE (Centre for Monitoring Indian Economy Pvt. Ltd) அறிக்கையின்படி சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இந்த அறிக்கையைப் பார்க்கும்போது பல கோடிக்கணக்கான மக்கள் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை இழந்து தனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய வேறு மாற்று வேலையை செய்து வருகின்றனர் என்பது புலப்படுகிறது.
தளர்வுகள் முழுமையாக அளிக்கப் பட்ட பின் கூட ஜூலை மாதத்திலிருந்து ஆகஸ்டு மாதத்திற்குள் சுமார் 2 கோடி மக்கள் தனது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
நீட் தேர்வு
தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதற்கு முழு காரணமும் பாஜக அரசாங்கமும் அதிமுக அரசாங்கமும் தான். நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது தான். அதன்பின் திருத்த மசோதாவும் காங்கிரஸ் கட்சிதான் கொண்டுவந்தது. அந்த சட்டத் திருத்தம் என்னவென்றால் மாநில அரசுகள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டு நீட் வழிவகையை பின்பற்றி கலந்தாய்வில் பங்கேற்று இடஒதுக்கீடு பெறலாம் . இந்தத் திருத்த மசோதா வரையறையை ரத்து செய்தது பாஜக அரசாங்கம். இந்த மசோதா ரத்து செய்ய மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் அன்றைய மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தவர்கள்தான் இந்த அதிமுக எம்பிக்கள்.
இவ்வாறு மாரிகுமார் கூறினார்.