குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
1 min readDevotees are not allowed in the Kulasekarapattinam Dussehra festival
26/9/2020
குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் கொடியேற்றம் உள்பட 3 முக்கிய நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் யாரும் காப்புக் கட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
தசரா விழா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்ட பக்தர்கள் வேடம் கட்சிச்சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
மைசூர் தசரா விழாவுக்கு அடுத்து புகழ்பெற்ற விழாவாக இதுபோற்றப்படுகிறது.
இந்த ஆண்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
குலசேகரப்பட்டினம் தசரா விழா விழா வருகிற 17-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் 17-ந் தேதி அன்று திருவிழா கொடியேற்றத்தின்போது பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.
மேலும் விழாவின் முக்கிய நாளான 1, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மற்ற நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்ய இயலும் என்பதற்கு ஏற்ப திருச்செந்தூர் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து பக்தர்கள் வருவதைப்போன்று, இங்கும் அனுமதிக்கலாம்.
யூ டியூப்
சுவாமி புறப்பாடு வெளியில் செல்லாமல் உள்பிரகாரங்களில் மட்டும் நடைபெறும். அதுபோல் உற்சவ மூர்த்தி வீதி உலா கோவில் உள்பிரகாரத்தில் மட்டும் நடைபெறும். திருவிழா நிகழ்வுகளை யூ டியூப் மற்றும் உள்ளூர் சேனல்கள் மூலம் பக்தர்கள் காணும் வகையில் ஒளிபரப்பலாம்.
இந்த ஆண்டு கோவில் மூலம் பக்தர்களுக்கு காப்புக்கள் எதுவும் கட்டப்படமாட்டாது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளூர் கோவில்களில் விரதத்தை முடித்துக்கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்டளைதாரர்கள் வாங்கிக்கொடுக்கும் அபிஷேக பொருட்கள் பெற்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் அபிஷேகத்தை அமர்ந்து பார்க்க அனுமதி இல்லை. தீயணைப்பு துறையினர் மூலம் தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், போலீஸ் துறையின் மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். கோவில் நிர்வாகத்தின் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.
தளர்வுகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 30-ந் தேதிக்கு பின் தமிழக அரசு அறிவிக்கும் தளர்வுகளை பொறுத்து பொதுமக்களுக்கு இதுகுறித்து மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.