எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்? டாக்டர்கள் விளக்கம்
1 min readWhy SP Balasubramaniam could not be saved? Doctors explanation
26/9/2020
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை காப்பாற்ற முடியாததற்கு காரணம் என்ன என்று எம்.ஜி.எம். மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று ( வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.அவரது உடல் அடைக்கம் போலீஸ் மரியாதையும் திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் நேற்று( சனிக்கிழமை) பகல் நடந்தது.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆஸ்பத்திரியில் இருந்த 52 நாட்களில் அவர் 45 நாட்கள் சுயநினைவுடனும், நல்ல நிலையிலும் இருந்து உள்ளார். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட பிறகுதான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு எந்த சிகிச்சையும் அவருக்கு கை கொடுக்காமல் மரணத்தை தழுவிவிட்டார்.
டாக்டர்கள் விளக்கம்
இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன், தீவிர சிகிச்சைத் துறை மருத்துவத் தலைவர் டாக்டர் சபாநாயகம் ஆகியோர் கூறியதாவது:-
எஸ்.பி.பி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் அதன் பிறகு கடந்த மாதம் வரை அவருக்கு உடலில் வேறு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. குறிப்பாக அவருக்கு சர்க்கரை நோயோ அல்லது வாழ்க்கை முறை சார்ந்த வேறு பிரச்சினைகளோ கிடையாது. மிக ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே அவர் கடைப்பிடித்து வந்தார்.
கொரோனா
இந்த நிலையில்தான் கடந்த மாதம் (ஆகஸ்டு) மாதம் 3-ந்தேதி அவருக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அடுத்த நாளில் (ஆகஸ்டு 4) அதன் முடிவுகள் வெளியாகின.
அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது அவரது வயது காரணமாக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை எடுக்குமாறு அறிவுறுத்தினோம்.
அதன்படி ஆகஸ்டு 5-ந்தேதி அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த 3 நாட்கள் வரை அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் அதன் பின்னர் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்தது. இதனால் ஆகஸ்டு 9-ந்தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி ஆக்சிஜன் அளிக்கப்பட்டது.
வென்டிலேட்டர்
இதற்கிடையே எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நுரையீரலில் தொற்று தீவிரமாகப் பரவியதால் அவர் மூச்சு விட மிகவும் திணறினார். இதனால் ஆகஸ்டு 13-ந்தேதி அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. மறுநாள் எக்மோ சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது.
நாங்கள் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் காணொலி முறையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து 12 முறை கலந்து ஆலோசித்தோம். அவருக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டதன் பயனாக அவருக்கு நினைவு திரும்பியது.
பிறர் பேசுவதை உணர்ந்து சைகைகள் மூலம் பதில் அளிக்கத் தொடங்கினார். அவரின் மகன், மகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் பார்த்தபோது ‘லவ் யூ ஆல்’ என கைப்பட எழுதிக் கொடுத்தார்.
திரவ உணவு
அது மட்டுமல்லாது எஸ்.பி.பி.யின் திருமண நாளான செப்டம்பர் 5-ந்தேதி அவரது மனைவி மருத்துவமனைக்கு வந்து அவரைப் பார்த்தார். அப்போது மனைவி கேக் வெட்டியதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பார்த்து ரசித்தார்.
மருத்துவமனையில் இருந்தபோது பெரும்பாலான நாட்கள் அவர் நினைவுடன் இருந்தார். நாள்தோறும் அவருக்கு குழாய் வழியே திரவ உணவுகள் வழங்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வாய் வழியே திட உணவுகளை உட்கொள்ள அவர் தொடங்கினார்.
இப்படி உடல் நிலை தேறி வரும் நிலையில் கடந்த வியாழக்கிழமை முதலே அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. உடல் முழுவதும் தொற்று பரவி (செப்சிஸ்) உறுப்புகள் பாதிக்கத் தொடங்கின.
மூளையில் ரத்த கசிவு
உடனடியாக சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில் அவரின் மூளையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர்.
சுமார் 48 மணி நேரம் அவருக்கு உயர் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்கள் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர போராடினர். இருப்பினும் அது பலன் அளிக்காமல் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டதால் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை காப்பாற்ற முடியவில்லை.
இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.