சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு- சிபிஐக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
1 min read30/9/2020
Satankulam traders murder case: hicourt branch orders CBIசாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இந்த வழக்கின் விசாரணையும், இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
சிபிஐ வக்கீல் விஜயன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் இரு கொலை வழக்குகள் பதியப்பட்டன. இரு வழக்கிற்கும் சேர்த்து ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிக்கை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதான 10 பேரில் இறந்தவர் போக மீதமுள்ள 9 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடக்கிறது’’ என்றார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘கொரோனா ஊரடங்கு காலத்தில் கைது நடவடிக்கையின்போது, பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக கடந்த ஜூன் 25ல் டிஜிபி தரப்பில் விரிவான சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் தொடர்பாக பல தரப்பிலும் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘சாத்தான்குளம் போலீசாரால் மற்றொரு சம்பவத்தில் ராஜாசிங் என்பவர் துன்புறுத்தி, தாக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை சிபிஐ தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். டிஜிபியின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது, முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, உள்துறை செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.’’ என உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 5க்கு தள்ளி வைத்தனர்.