நாங்குநேரி இரட்டை கொலையில் திருச்சி கோர்ட்டில் 3பேர் சரண்
1 min read30.9.2020
3 people surrender in Trichy court in Nanguneri double murderநெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி, மாடன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி சண்முகத்தாய்(50). இவர்களது மகன் நம்பிராஜன்(21). இவரும், தங்கப்பாண்டி மகள் வான்மதியும்(18) கடந்தாண்டு அக்டோபரில் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பெண் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நெல்லை டவுனில் தனி வீடு எடுத்து தம்பதியர் வசித்து வந்தனர்.
கடந்தாண்டு நவ.25ம் தேதி இரவு வான்மதியின் உறவினர்கள், நம்பிராஜனை மது குடிக்க அழைத்து சென்று கொலை செய்தனர். இது தொடர்பாக வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, மற்றும் உறவினர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நம்பிராஜனை கொலை செய்த செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் (52), உதவியாக இருந்த உறவினர் சொரிமுத்து மகன் சுரேஷ் (20) ஆகியோர் கடந்த மார்ச் 14ம்தேதி கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய், தந்தை அருணாசலம், இசக்கிபாண்டி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அனைவரும் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர்.
கடந்த 26ம் தேதி மதியம் மறுகால்குறிச்சிக்கு பைக்கில் வந்த 12 பேர் கும்பல், பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள இசக்கிபாண்டி வீட்டின் மீது வெடிகுண்டு வீசி, அவரது தாய் சாந்தி (40)யை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல், நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய் வீட்டுக்கு சென்று அவரையும் கொலை செய்தது.
இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக நாங்குநேரி போலீசாரால் தேடப்பட்ட தூத்துக்குடி சிதம்பரம் நகர் அண்ணாநகர் 12வது தெருவை சேர்ந்த கண்ணன் (35), தூத்துக்குடி அண்ணாநகர் சொரிமுத்து(67), திருநெல்வேலி வேப்பிலாங்குளம் விநாயகபுரம் சுடலைக்கண் மகன் முருகன் ஆகிய 3 பேரும் இன்று 30ம் தேதி திருச்சி ஜேஎம் 1 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 6ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.