பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 32 பேரும் விடுதலை
1 min readThirty-two people, including Advani, have been released in connection with the Babri Masjid demolition case
30/9/2020
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 32 பேரையும் விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன.மசூதியை இடித்ததாக, லட்சக்கணக்கான பெயர் தெரியாத, கரசேவகர்கள் மீது, லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அத்வானி உள்ளிட்டோரை வழக்குகளில் இருந்து விடுவித்து, நீதிமன்றம், 2001-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதை, அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டு உறுதி செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை விசாரிக்கும் படி, 2017ல் உத்தரவிட்டது. மேலும், ரேபரேலியில் உள்ள வழக்கை, லக்னோ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றியது.
இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும், சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்தக் காலக்கெடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு
இந்த வழக்கில், லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி எஸ்.கே. யாதவ் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு:-
பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு போதுமான ஆதாரமில்லை. இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரத்துடன் சி.பி.ஐ. நிரூபிக்கவில்லை.
விடுதலை
குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மசூதியை இடிக்கவில்லை. அவர்கள் தான் இடிக்கவிடாமல் தடுத்தனர்.
சி.பி.ஐ. வழங்கிய ஒலி மற்றும் ஒளி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை. சி.பி.ஐ. வழங்கிய பல்வேறு ஆதாரங்களில் ஒளிப்பதிவு தெளிவாக இல்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தான் இடிக்க தூண்டினார்கள் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை. சதிச்செயல் நடந்தததாக கூறுவதை ஆதாத்துடன் நிரூபிக்கவில்லை. சமூக விரோத கும்பல் தான் மசூதியை இடித்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்பில்லை.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
அத்வானி
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அத்வானி உட்பட, 32 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார். வினய் கத்தியார், தரம்தாஸ், வேதாந்தி, லாலு சிங், சம்பத் ராய், பவன் பாண்டே உள்ளிட்ட 26 பேர் நேரில் ஆஜராகினார்கள். அத்வானி, ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, சதிஷ் பிரதான், கோபால் தாஸ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரானார்கள்.