ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் இன்றும் ஆலோசனை
1 min readO. Panneer selvam consults with wealth supporters today
30/9/2020
துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று இரண்டாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஓ.பன்னீர் செல்வம்
அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வருகிறது. இதில் அ.தி.மு.க.வில், முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்சினை எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்றும் ஒ.பன்னீர் செல்வத்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் அவரவர் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
கடந்த 28-ந் தேதி ( திங்கட்கிழமை) சென்னையில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட்சியினர் முன்னிலையில், இருவரும் பகிரங்கமாக மோதிக் கொண்டனர்.
இருவரையும் சமாதானப்படுத்த கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டனர். இதனை அடுத்து அக்டோபர் 7-ந் தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் எடப்பாடி பழினிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சமரசம் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது.
நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ள வில்லை. அதே நேரம் அவர் தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான, முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிராபகர் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
2-வது நாளாக ஆலோசனை
ஓ.பன்னீர்செல்வம், 2வது நாளாக இன்றும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதனும் கலந்து கொண்டுள்ளார்.