May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

இதோ ஒரு மனிதன்.. சாஸ்திரி / முத்துமணி

1 min read

Here is a man .. Shastri / Muthumani

2/10/2020

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேருவின் மறைவு உலகெங்கும் அதிர்வை ஏற்படுத்தியது… மேற்கத்திய நாடுகள் இனிமேல் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.. இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதற்கு ஆளில்லை.
இறையாண்மையைக் கட்டிக் காக்க முடியாமல் இந்தியா சிறு சிறு துண்டுகளாக உடைந்து சின்னா பின்னமாகி விடும்… இப்படியெல்லாம் அன்றைய பத்திரிகைகள் எழுதத் தொடங்கிவிட்டன.
அப்போதுதான் இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி ஏற்றார் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்.

சின்னக் கடுகுக்குள் இத்தனைக் காரமா? மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. உருள்பெருந்தேர்க்கு அச்சாணி சிறியது. என்பதையெல்லாம் மெய்ப்பிக்கும் விதமாக, சிறிய உருவத்தைக் கொண்ட எளிய தோற்றத்தைக் கொண்ட, லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்று, எந்தப் பதில் பேச்சையும் பேசாமல் யாருடைய விமர்சனங்களையும் கருத்தில் கொள்ளாமல் கருமமே கண்ணாகி, செயலையே உயிர்மூச்சாய்க் கொண்டு இந்தியாவின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார்.
ஒருவர் போனால் இன்னொருவர் இருக்கிறோம். நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல எங்களை ஆள எங்களுக்குத் தெரியும். என்பதை மேல் நாடுகளுக்கு எடுத்துக் காட்டினார்.
மகாத்மா காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2-ந் தேதி லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் என்பதால் அவரை நாம் மறந்துவிடக்கூடாது.
இன்று உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் , ஜார்கண்ட் என்றெல்லாம் பிரியாமல் ஒன்று பட்டிருந்த ஐக்கிய மாகாணத்திலிருந்து வந்தவர்.. அந்த மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு புதுமைகளைச் செய்தவர்.

முதல் முதலில் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கியவர் இவர்தான். பேருந்துகளில் பெண்களை நடத்துனர் பணிக்கு அமர்த்தி முதல் புரட்சி செய்தவர் இவரே. இன்று ஊர்க்காவல்படை என்று அழைக்கப்படும் அமைப்பை உருவாக்கியவர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடைபெற்ற போரில் இந்த அமைப்பையும் ஈடுபடுத்தியவர். ஜெய் ஜவான் ஜெய் கிஷான் என்று முழங்கியதோடு செயல்படுத்தியும் காட்டினார்.
1920 ஆம் ஆண்டு காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றபோது கல்லூரி மாணவராக இருந்த சாஸ்திரி தன் படிப்பை நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தார். இப்படி அவருடைய வரலாற்றைக் கூறிக்கொண்டே போகலாம்… இக்கட்டுரையின் நோக்கம் அதுவன்று.. லால் பகதூர் சாஸ்திரி எப்படி ஒரு மனிதனாகத் திகழ்ந்தார்?. உறுப்பொத்தல் மக்களொப்பன்றால் என்றார் வள்ளுவர்.
மனிதனுக்குரிய பண்புகள் மாறாமல் இருக்க வேண்டும். லால்பகதூர் சாஸ்திரி ஒரு மனிதர்.. அவரது வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்வுகள் அதை மெய்ப்பிக்கும்.
அன்றைய காலத்தில் புகைவண்டியின் முதல் வகுப்பு சொர்க்கபுரி போலவும் மூன்றாம் வகுப்பு எந்தவிதமான வசதியும் இன்று சொல்லப்போனால் நரகம் போலவும் இருக்குமாம். சாஸ்திரி இந்தியமத்திய அரசில் ரயில்வே அமைச்சராக பொறுப்பு ஏற்றதும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யும் ஏழைகளும் மனிதர்கள்தானே, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெட்டிகளுக்குள் மின்விசிறிகள் பொருத்தச் செய்தார்.

அவருடைய மகளுக்குத் திருமணம். மாப்பிள்ளை மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் புகைவண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்து வந்து கொண்டு இருக்கிறார்கள். பெரிய கூட்டம். முதல் வகுப்பில் இடமும் கிடைக்காது. கிடைத்தாலும் டிக்கெட் வாங்கிப் பயணம் செய்ய பொருளாதார நிலை இடம் தராது. புகைவண்டியில் அவர்கள் யார் என்பதை அறிந்த அதிகாரி ஒருவர் தம் மேலதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி, அவர்கள் பயணம் செய்த இரண்டாம் வகுப்புப் பயணிகள் பெட்டியில் முதல் வகுப்பில் இருப்பது போன்ற சில வசதிகளை ஏற்படுத்தினர். அத்துறை அமைச்சரின் உறவினர் அல்லவா? இச்செய்தி அறிந்ததும் சாஸ்திரி என்ன செய்தார் தெரியுமா? ஓடி வந்து அந்த அதிகாரிகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டாரா? அல்லது பதவி உயர்வு தந்தாரா?. இல்லை.
மாறாக அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் (dismiss) செய்து உத்தரவிட்டார்.. எத்தகு நேர்மை?
நேரு பிரதமர். சாஸ்திரி ரயில்வே அமைச்சர். 1956 ஆம் ஆண்டு ஆந்திராவில் எதிர்பாராதவிதமாக புகைவண்டி விபத்து ஒன்று நடைபெற்றது. அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தான் பதவி விலகக் கடிதம் கொடுத்துவிட்டார் சாஸ்திரி.

ராஜினாமா

ஆனால் பிரதமர் நேரு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் சிறிது கால இடைவெளியில் தமிழ்நாட்டில் அரியலூரில், ரயில் தடம்புரண்டு அந்த விபத்தில் நூற்றுக் கணக்கானோர் இறந்தனர். இப்போதும் நேர்ந்துவிட்ட கவனக்குறைவுக்கு, ரயில்வே துறை அமைச்சராகிய நான்தான் பொறுப்பு. என்று கூறித் தன் பதவியை ராஜினாமா செய்தார் சாஸ்திரி. இந்த முறை நேருவால் அதை மறுக்க முடியவில்லை. உயர் பதவியில் இருப்பவர்கள், அமைச்சர்கள் அதிகாரத்தைக் காட்டச் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல. அந்தத் துறையில் ஏற்படும் எல்லா நன்மை தீமைகளுக்கும் அவர்கள்தான் பொறுப்பு. இதுபோன்ற நேரங்களில் பதவிகளைக்கூட விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். என்ற நியாயத்தை சாஸ்திரி உணர்த்தினார்.
அதை ஏற்றுக் கொண்டால்தான் உலகம் இந்த உண்மையை அறியும். இது ஒரு நல்ல பாடமாக அமையும். என்று கருதி நேரு ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் அலுவலகத்திலிருந்து அரசு வாகனத்தில் ஏறி செல்லாமல் தவிர்த்து தான் மந்திரி அல்ல. இந்த வண்டியில் ஏறுவதற்கு இப்போது நான் தகுதியற்றவன். எனவே வாடகை வாகனத்தில் செல்கிறேன் என்று சொன்னதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

சம்பளத்தை குறைத்தார்

லால்பகதூர் சாஸ்திரியின் அண்டை வீட்டுப் பெண்மணி இவரது வீட்டிற்கு ஒரு நாள் வந்தாள். அவரது மனைவியிடம் ஒரு சிறு தொகையை 20 ரூபாய் இருக்கும். கடனாகக் கேட்டாள். சாஸ்திரியின் மனைவி வீட்டிற்குள் சென்று பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து உதவி செய்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சாஸ்திரி எனக்கு மாதச் சம்பளம் 35 ரூபாய் மட்டும்தான். கட்சியிலிருந்து வாங்குகிறேன். பிள்ளைகளை வளர்க்க குடும்பச் செலவிற்கு அதை உன்னிடம் தருகிறேன். இப்போது கடன் கொடுக்கும் அளவிற்கு உனக்கு வசதி எப்படி வந்தது? என்று கேட்டார். நீங்கள் ஒவ்வொரு மாதமும் தரும் 35 ரூபாயில் குடும்பத்திற்கு 30 ரூபாய் தான் செலவு செய்வேன். அவ்வளவு சிக்கனமாக இருந்து, மீதிப் பணத்தைச் சேர்த்து வைத்திருக்கிறேன். அவர்கள் கேட்டதும் அதிலிருந்துதான் பணம் கொடுத்தேன் என்று கூறினார்கள். சாஸ்திரி மௌனம் காத்தார். ஒன்றுமே சொல்லவில்லை. சம்பளம் வாங்கும் தேதி வந்தது காங்கிரஸ் கட்சி அலுவலகம் சென்றார். வழக்கம்போல 35 ரூபாய் கொடுத்தார்கள். “என் குடும்பத்திற்கு மாதம் 30 ரூபாய் தான் செலவாகிறது. எனவே கட்சிப் பணத்தை வீணாக்க வேண்டாம். எனக்கு இனிமேல் 30 ரூபாய் சம்பளம் போதும்.” என்று கூறி ஐந்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இளைஞர் ஒருவர் அரசுவேலை ஒன்றிற்கு விண்ணப்பம் செய்தார். விண்ணப்பத்தை வாங்கி சரிபார்த்த அதிகாரி. தந்தையார் தொழில். (Father’s occupation) என்னும் இடத்தைக் கூர்ந்து கவனித்தார். அதில் அரசு ஊழியர் என்று இருந்தது. அந்த அதிகாரி இளைஞரிடம் “உன் தந்தையார் அரசு ஊழியர் என்று போட்டு இருக்கிறாய். அப்படியானால் அரசு அலுவலகத்தில் உன் தந்தை பியூன் வேலை செய்கிறாரா?” என்று கேட்டார் அந்தப் பையன் இல்லை என்றான்.
“உன் தந்தையார் தாசில்தாரா?” மீண்டும் இல்லை என்ற பதில்.. “அப்படியானால் உன் தகப்பனார் கலெக்டராக இருக்கிறாரா?”
என்று கேட்க இல்லை என்ற பதில் வந்தது.
“அரசு ஊழியர் என்றால் பதவியைக் குறிப்பிட வேண்டியது தானே.” என்று கொஞ்சம் ஆத்திரத்துடன் அந்த அதிகாரி.
“அரசாங்க சம்பளம் வாங்கும் அனைவரும் அரசு ஊழியர்தான். ஏன்? பிரதம மந்திரி கூட அரசு ஊழியர்தான். உன் அப்பா என்ன பிரதம மந்திரியா?” என்று சற்றுக் கேலியாகக் கேட்டார்?
அந்த இளைஞன் நிதானமாக பொறுமையாக ஆமாம் என்றான். அதிர்ந்துபோன அதிகாரி எழுந்து நின்று பேச முயன்றபோது,
“தந்தையார் தொழில் என்ற இடத்தில் இந்தியப்பிரதமர். என்றுதான் முதலில் எழுதினேன். அதைப் பார்த்துவிட்டு, என் தந்தையார் தான் நான் தான் இந்தியாவின் முதல் அரசு ஊழியன். ஊதியம் வாங்கும் வேலைக்காரன்.எனவே அரசு ஊழியன் என்று மட்டும் எழுது. உனக்குத் தகுதி இருந்தால் வேலை கிடைக்கட்டும்.” என்று கூறியதாகச் சொன்னார்…
சொன்னவர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன்.

மேற்கண்ட செயல்களுக்கு விளக்கம் தேவையில்லை. இவர்களெல்லாம் எவரோடும் இன்று பொருத்திப் பார்க்க இயலாதவர்கள். மனிதனாக வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். இன்றைய இளைஞர்கள் எதிர்கால த்தலைவர்கள்.. லால்பகதூர் சாஸ்திரி போன்றோர் வரலாற்றை நன்கு படித்து விட்டு அரசியலுக்கு வர வேண்டும்.
அக்டோபர் இரண்டாம் நாள் அண்ணல் காந்தியும் அருமை சாஸ்திரியும் பிறந்தநாள் மட்டுமன்று. உத்தமர் அப்பளுக்கற்ற கர்மவீரர் காமராசர் நினைவு நாளும் கூட… மூவரையும் கொண்டாடுவோம் மூவரையும் பின்பற்றுவோம்.

-சிவகாசி முத்துமணி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.