சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் மக்களுக்காக போராட்டிய ஜெயப்பிரகாஷ் நாராயண்
1 min read
Jayaprakash Narayan who fought for the people before and after independence
11/10/2020
ஜெ.பி. என்று அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாரயண் ஒரு புரட்சி வாதி. இந்திராகாந்தி நெருக்கடி நிலையைகொண்டு வந்தபோது அதை எதிர்த்து போராடி ஜனதா என்ற கட்சி உருவாகவும் அந்தக் கட்சி ஆட்சி பீடத்தில் அமரவும் உறுதுணையாக இருந்தவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்திலும் சிறைவாசம் அனுபவித்தவர்.
வாழ்க்கை வரலாறு
ஜெயபிரகாஷ் நாராயண் 1902-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி பீகாரில் உள்ள சிதாப்தியரா என்ற கிராமத்தில் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர் காயஸ்த என்ற பிரிவைச் சேர்ந்தவர்.
இவரது தந்தை ஹர்ஸ்தயாள். தாயார் பெயர் புல்ராணி தேவி.
ஜெயபிரகாஷ் நாராயணனின் தந்தை போலீஸ் துறையில் பணியாற்றினார். இதனால் அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு மாறுதலாகி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால் ஜெயப்பிரகாஷ்நாராயண் பெரும்பாலும் தனது பாட்டியுடன் சிதாப்தியராவில் தங்கி இருந்தார். அங்குதான் அவர் ஆரம்பக்கல்வி பயின்றார். பாட்னாவில் உயர்நிலைக் கல்வியை முடித்தார்.
பிறகு கல்வி உதவித் தொகையுடன் பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போதே விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் காட்டினார். இதனால் அவரால் அந்தக் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியவில்லை. காரணம் அந்தக் கல்லூரி ஆங்கிலேயரின் நிதி உதவியால் நடத்தப்பட்டது ஆகும். ஜெயப்பிரகாஷ் இரண்டாமாண்டு படித்தபோது அங்கிருந்து வெளியேறினார்.
அப்போது அவருக்கு பாபு ராசேந்திர பிரசாத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் நடத்திவந்த பீகார் வித்யாபீடத்தில் ஜெயப்பிரகாஷ் இணைந்தார்.
ஜெயப்பிரகாஷுக்கு இயல்பிலேயே கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எனினும் அவரது குடும்பப் பாரம்பரியம் காரணமாக மகாபாரதம், பகவத்கீதை ஆகியவற்றை சிறு வயதிலேயே படித்து இருந்தார். அதோடு கார்ல் மார்க்சின் மார்க்ஸியம் என்ற தத்துவம் ஏற்படுத்திய தாக்கத்தினால் அதில் ஈடுபாடு ஏற்பட்டது. ஆனாலும் அவர் காங்கிரஸ் கட்சியின்பால் பற்று வைத்திருந்தார்.
அப்போது மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணனும் விடுதலைப்போரில் தீவிரமாக ஈடுபட்டார். 1919-ம் ஆண்டு அடக்குமுறைச் சட்டமான ரவுலட் சட்டத்தை எதிர்த்து நாட்டில் பெரும் நடந்தது. இதிலும் பங்கேற்றார்.
திருமணம்
1920-ம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் தனது 18 -வது வயதில், பிரிஜ் கிஷோர் பிரசாத் என்ற சட்ட வல்லுனரின் மகள் பிரபாவதியை மணந்தார். பிரிஜ் கிஷோர் காந்தியவாதி. அவருக்கு காந்தியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.
1922 -ம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயண் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். அவருடன் வெளிநாடு செல்ல அவரது மனைவி பிரபாவதி மறுத்து, சபர்மதியிலுள்ள காந்தி ஆசிரமத்துக்கு சென்றுவிட்டார். அங்கு கஸ்துரி பாய் காந்தியின் மகளாகவே அவருடன் வாழ்ந்தார்.
அமெரிக்கா சென்ற ஜெயப்பிரகாஷ் அங்கு பல பகுதிநேர வேலைகள் செய்து பணம் ஈட்டிக் கொண்டே மேற்படிப்பு படித்தார். உணவகத்திலும் கூட அவர் வேலை செய்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சில நாட்களிலேயே தனக்கு ஆர்வமுள்ள துறை சமூகவியல் பாடத்தை விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் படித்தார். அப்போதுதான் அவருக்கு கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்சு, லெனின், திராட்ஸ்கி, ரோசா லக்சம்பர்க் ஆகியோரது நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. காரல்மார்க்சின் ‘மூலதனம்’ நூலினைப் படித்த ஜெயப்பிரகாஷுக்கு ஏற்கனவே இருந்த இடதுசாரி நாட்டம் அதிகரித்தது.
அமெரிக்காவில் 7 ஆண்டுகள் படித்து முடித்தபின், ரஷ்யாவில் முனைவர் பட்டம் படிக்க அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவரது குடும்பச் சூழல் காரணமாக 1929-ல் இந்தியா திரும்பினார்.
இந்தியா திரும்பிண ஜெயப்பிரகாசுக்கு அவரது மனைவி பிரபாவதியின் மனமாற்றம் அதிர்ச்சி அளித்தது. அதாவது அவரது மனைவி காந்தி ஆசிரமத்திலேயே துறவு வாழ்க்கை வாழ விரும்புவதாக கூறினார். அதனை ஏற்றுக்கொண்டு ஜெயப்பிரகாசும் குடும்ப வாழ்விலிருந்து ஒதுங்கினார் . அவரது உள்ளம் முழுவதும் பொதுவுடைமைக் கொள்கைகள் தீவிரமாகி இருந்தது. அதேநேரம் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதை அவரால் ஏற்க முடியவில்லை.
இந்திய விடுதலைப் போரில் முன்னிற்கும் காங்கிரஸ் கட்சியுடன் மோதும் கம்யூனிஸ்டுகளின் கொள்கைப்பற்றை அவர் கண்டித்தார். அதே நேரம் அலகாபாத்தில் இயங்கும் தொழிலாளர் ஆய்வு மையத்துக்கு தலைமை தாங்குமாறு தன்னை ஜவகர்லால் நேரு அழைத்ததையும் அவரால் ஏற்க முடியவில்லை. வசதியான வாழ்விலோ, ஆடம்பரங்களிலோ அவருக்கு சிறிதும் நாட்டமில்லை. எளிய மக்களின் வாழ்க்கைக்கு உதவக் கூடியதாக தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதில் மட்டும் ஜெயப்பிரகாஷ் பிடிவாதமாக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே சமதர்ம சமுதாயம் குறித்தும் சிந்தித்து வந்தார். கம்யூனிஸ்டுகளும் விடுதலைப்போரில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது. ஆனால் அவரது எண்ணம் பலிக்கவில்லை.
இந்த இடைக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் செயல்வேகம் மிகுந்த தலைவராக ஜெயப்பிரகாஷ் உருவெடுத்தார். 1932 -ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். அப்போது காங்கிரஸ் அறிவித்த சட்ட மறுப்பு இயக்கம் காரணமாக காந்தி, ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது ஜெயப்பிரகாஷ் தலைமறைவாக இருந்தபடி விடுதலை இயக்கத்தை வழிநடத்தினார். செப்டம்பர் மாதம் அவர் சென்னையில் மறைவாக இருந்து செயல்பட்டபோது அவரை ஆங்கிலேய அரசு கைது செய்து நாசிக் சிறையில் அடைத்தது.
அந்த சிறையில் இருந்தபோதுதான் ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, மினு மசானி, அச்யுத் பட்வர்த்தன், யூசுப் தேசாய் போன்றவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சிறையில் இருந்து வெளிவந்து 1934ம் ஆண்டு காங்கிரஸ் சோஷலிச கட்சியை நிறுவினர். அதன் தலைவராக ஆச்சார்யா நரேந்திரதேவ் இருந்தார். செயலாளராக ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பொதுவுடைமைக் கொள்கையுடன் தனித்து இயங்கும் ஒரு குழுவாக அக்கட்சி செயல்பட்டது.
2-ம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது 1939-ல் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. போரில் ஈடுபடும் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்தியப் படைகள் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதில் மோதல் ஏற்பட்டது. இந்த இக்கட்டான சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பதே ஜெயப்பிரகாசின் எண்ணம். காங்கிரஸ் சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், ஆங்கிலேய அரசின் சுரண்டலுக்கு எதிராக வேலை நிறுத்தத்துக்கு அவர் அறைகூவல் விடுத்தார். போருக்கு ஆயத்தமாகும் ஆங்கிலேயப் படைக்கு இந்தியர்கள் உதவாது போனால் அவர்கள் வேறு வழியின்றி நம் நாட்டை விட்டு தாமாகவே வெளியேறும் நிலை ஏற்படும் என்றார் ஜெயப்பிரகாஷ் நாயராணன் . ஆனால் மகாத்மா காந்தியின் கருத்து வேறாக இருந்தது. இந்த விசயத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஜெயப்பிரகாசை காந்தி மதித்தார்.
அப்போது ஆங்கிலேய அரசால் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில்தான் காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நேதாஜி காங்கிரசிலிருந்து வெளியேறினார். 9 மாத சிறைவாசத்துக்குப் பின்னர், சிறையிலிருந்து வெளிவந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் இருவரிடையே இணக்கம் ஏற்படுத்த முயன்றார். ஆனால் பலன் கிட்டவில்லை.
அதன்பிறகு 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காந்தி தொடங்கினார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண் மீன்டும் கைது செய்யப்பட்டு மும்பை, ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு டெல்லி சிறைக்கு மாற்றப்பட்டார்.
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி பெரும்பங்கு வகித்தது.
சிறையில் இருந்து தப்பினார்
ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், அங்கிருந்து 5 தோழர்களுடன் சிறைச்சுவரில் ஓட்டையிட்டுத் தப்பினார். அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிறகு நேபாளம் சென்ற ஜெயப்பிரகாஷ், ‘ஆசாத் தாஸ்தா’ எனப்படும் விடுதலைப் படையைத் திரட்ட முயன்றார். அப்போது தொடர்வண்டியில் பஞ்சாப் செல்லும்போது 1943-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டார். டிசம்பர் மாதம் இவர் அதிமுக்கியமான அரசாங்கக் கைதி என்று அறிவிக்கப்பட்டார்.
லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாசை ஆங்கிலேய அரசு கடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தியது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வந்தது. இதனால்1945-ம் ஆண்டு ஜனவரி மாதம்ஜெயப்பிரகாஷ் ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டார்.
சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்தபோது ஆங்கிலேய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அப்போது காந்தி , “பேச்சு நடத்த வேண்டுமானால் சிறையிலுள்ள ராம் மனோகர் லோகியாவையும் ஜெயப்பிரகாஷையும் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். அதன் பிறகுஇருவரும் 1946-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பாகிஸ்தான் பிரிந்து சென்றது. இது பொதுவுடைமைக் கட்சியினரையே அதிரவைத்தன.
சுதந்திரத்திற்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் நாட்டமில்லாத சோஷலிஷ கட்சியினர் தனியே எதிர்க்கட்சியாக இயங்கினர். அவர்கள் ஒருங்கிணைத்து ‘பிரஜா சோஷலிஸ்ட்’ என்ற கட்சியைத் தொடங்கினர். காந்தியின் மறைவுக்குப் பின் ஜவகர்லால் நேரு முன்னெடுத்த தொழில்மயமாக்க அடிப்படையிலான பொதுவுடைமைக் கனவினை ஜெயப்பிரகாஷால் ஏற்க முடியவில்லை.
1954 -ம் ஆண்டு ஆச்சார்யா வினோபா பாவே துவங்கிய சர்வோதய இயக்கத்துக்கும் பூமிதான இயக்கத்துக்கும் ஆதரவளிப்பதாக ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆதரவளித்தார்.
இந்த நிலையில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியுடன் சித்தாந்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் 1957 -ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார். அதன்பிறகு நேரடி அரசியலில் ஆர்வம் குறைந்த அவர் சர்வோதயப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார்.
1964 -ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி தொடர்பாக இவர் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் தனது கருத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
ஆனால் நீண்ட காலத்திற்கு பிறகு பிகாரில் தீவிர அரசியலுக்கு ஜெயப்பிரகாஷர் மீண்டும் திரும்பினார். அந்த மாநிலத்தில் நிலவிய ஊழலுக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கவும் தார்க்குண்டே உடன் இணைந்து முழுப் புரட்சி இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து இந்திய அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றுள்ள அரசியல் தலைவர்களுள் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நரேந்திர மோடி உள்பட பலர் இக்காலத்ததில் வார்க்கப்பட்டவர்களாவர்.
1974-ம் ஆண்டு ஜனநாயகம் வேண்டும் குடிமக்கள் என்ற அரசுசாரா அமைப்பையும் 1976ஆம் ஆண்டு குடியுரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு என்ற அரசுசாரா அமைப்பையும் . தோற்றுவித்தார்.
நெருக்கடி நிலை
இந்த நிலையில்தான் 1975-ம் ஆண்டு ஜூன் மாதம 25-ந் தேதி நெருக்கடி நிலையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்தார். பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயணனும் கைதானார். சண்டிகார் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்ட அவர் சிறுநீரக பாதிப்புக்கு ஆளானார். இதனால் அதே ஆண்டு நவம்பரில் ஜெயப்பிரகாஷர் விடுதலை ஆனார்.
நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். பல்வேறு கொள்கை வேறுபாடுகள் கொண்ட பிரஜா சோஷலிஸ்ட், லோக்தளம், பழைய காங்கிரஸ், சுதந்திரா கட்சி, பாரதீய ஜனசங்கம் உள்பட இடதுசாரிகள் அல்லாத கட்சிகளை இந்திரா காந்தியின் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடுத்தினார். இந்தக் கட்சிகள் ஒன்றுபட்டு உருவானதுதான் ஜனதா கட்சி.
நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர். எஸ். எஸ். அமைப்பும் இவருக்கு ஆதரவாக தலைமறைவுப் போராட்டம் நடத்தியது.
1977-ம் ஆண்டு இந்திரா காந்தி தேர்தல் நடத்துவதாக அறிவித்தார். அந்தத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். ஜனதா கட்சியின் சார்பில் மொரார்ஜி தேசாய் 1977-ம் ஆண்டு மார்ச் 24-ல் பிரதமர் ஆனார். ஆனால் ஜனதா கட்சி உருவாக காரணமாக இருந்த ஜெயப்பிரகாஷ் நாராண் எந்த பதவியையும் பெறவில்லை.
ஜனதா கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் ஜெயப்பிரகாசுக்கு மனவேதனை அளித்தன. அவரது உடல்நலமும் குன்றிவந்தது.1979-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி பாட்னாவில் காலமானார்.
அவருக்கு 1998- ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பாட்னாவில் உள்ள விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.