கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் இறந்தாரா?
1 min read
Did the participant in the corona vaccine test die?
22/10/2020
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் மரணம் அடைந்தது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதை சிலர் மறுத்தும் வருகிறார்கள்.
கொரோனா தடுப்பூசி
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. சில நாடுகள் தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து அதை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகள் அந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோனையில் இறங்கி உள்ளன. தடுப்பூசி பரிசோதனையில் தன்னார்வலர்கள் பலர் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கொரோனாவுக்கு ஒரு தடுப்பூசியை தயாரித்து உள்ளது. பிரிட்டன் அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
பரிசோதனையில் இறந்தாரா?
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை பிரிட்டன், இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென இறந்துவிட்டார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த தன்னார்வலரின் வயது 28 என கூறப்படுகிறது.
அவர் இறந்தாலும், தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மறுப்பு
இந்த நிலையில், தன்னார்வலர் மரணம் தொடர்பாக பிரேசில் நாளிதழில் மாறுபட்ட தகவலும் வெளியாகி உள்ளது. இறந்துபோன தன்னார்வலர், தடுப்பூசி பெறாத கட்டுப்பாட்டு குழுவில் இருந்ததாகவும், அவர் கொரோனா பாதிப்பினால் இறந்ததாகவும் தங்களுக்கு கிடைத்த தகவல்களை மேற்கோள்காட்டி அந்த நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த தன்னார்வலர் 28 வயது நிரம்பிய டாக்டர் என்றும், ரியோ டி ஜெனிரோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தவர் என்றும் ஜி1 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.