7.5 சதவீத ஒதுக்கீ பிரச்சினை; கவர்னருக்கு எதிராக தி.மு.க. போராட்ட அறிவிப்பு
1 min read7.5 percent allocation issue; DMK against Governor Notice of protest
23–/10/2020
மருத்துவக்கல்லூரியில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கு கவர்னர் ஒப்பதல் அளிக்க தாமதம் செய்வதால் அவருக்கு எதிராக தி.மு.க. போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
7.5 சதவீத இடஒதுக்கீடு
அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தாமதம்
இதற்கிடையில், உள் ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக கவர்னர் புரோகித்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மேலும் 3 முதல் 4 வார காலம் அவகாசம் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மருத்துக் கல்லூரியில் சேருவதற்கான கலந்தாய்வு நடத்த மேலும் கால தாமதம் ஆகும். இது மாணவர்களின் நலனுக்கு எதிரானது.
தி.மு.க. போராட்டம்
இந்த நிலையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்காத தமிழக கவர்னர் புரோகித்தை கண்டித்தும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும் நாளை சனிக்கிழமை (24.10.2020) திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகை முன் இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
அழைத்தேன்
மருத்துவக் கல்வியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை; அழுத்தம் தராமல் துரோகம் இழைக்கிறது அதிமுக அரசு! இணைந்து போராட அழைத்தேன்;
தமிழக முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை! களம் காண்கிறது திமுக! அக்டோபர் 24-இல் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்!
மாணவர் நலன் காப்போம்!
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.