May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா குறைந்து வந்தாலும் பொதுமக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம்

1 min read

The public should not be complacent even if the corona is declining

26/10/2020

கொரோனா தொற்று குறைந்து வருவதாக நினைத்து மெத்தனமாக இருக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

பண்டிகைக் காலம்

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கேரளா, கர்நாடகாவில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. அதற்கு ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா என்று என்று கூறப்படுகிறது.
அதேபோல் தற்போது தமிழகத்தில் பண்டிகைக் காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதுபற்றி சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

முகக் கவசம்
கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது என்பதற்காக பொதுமக்கள் அலட்சிய போக்கில் இருக்க வேண்டாம். இனிதான் கவனத்துடன் இருக்க வேண்டும். பண்டிகைக்கான பொருட்கள் வாங்க செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். சிறிய அலட்சியம் நோய் பாதிப்பை உண்டாக்கி விடும். அதனால் எச்சரிக்கையுடன் மக்கள் வெளியில் சென்று வரவேண்டும்.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கடைகளில் ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்த வேண்டும். கடைகளுக்குள் வரும் வாடிக்கையாளர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பிறகுதான் உள்ளே அனுமதிக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் வந்தால் அணியுமாறு அறிவுறுத்த வேண்டும்.

மெத்தனம் வேண்டாம்

இது தொடர்பாக கடை வீதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கப்படுகின்றன. கொரோனா தொற்று குறைந்து வருவதாக நினைத்து மெத்தனமாக இருக்க வேண்டாம். தொற்று ஏற்பட்டால் அது வெளிப்பட 10 நாட்கள் ஆகும். அதனால் “வெளியே சென்ற நமக்கு ஒன்றும் ஆகவில்லை” என்று எண்ண வேண்டாம். 10 நாட்களுக்கு பிறகு தான் அதன் தாக்கம் தெரியவரும்.

எனவே பொதுமக்கள் கவனக் குறைவாகவும் அலட்சிய போக்கிலும் இருக்க வேண்டாம்.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் பரிசோதனை, கொரோனா பரிசோதனை போன்றவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

நோய் தொற்று குறைந்து விட்டதாக கருதி எந்த நடவடிக்கையையும் சுகாதாரத்துறை குறைக்க வில்லை.

பண்டிகை காலங்களில் மட்டுமின்றி மழைக்காலமும் தொடங்கி இருப்பதால் மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் கொரோனா போரில் இருந்து நாம் வெல்ல முடியும்.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.