May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

மதுரையில் பாஜக – விடுதலை சிறுத்தைகள் மோதல்

1 min read

BJP-Liberation Tigers clash in Madurai

27/10/2020

மதுரையில் பாரதீய ஜனதா – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.

திருமாவளவன் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இணைய நிகழ்ச்சியில் பேசும்போது, மனுநூலில் பெண்களை இழிவு செய்ததாகப் பேசியிருந்தார். அதன்பின் அவர் நேற்று( திங்கட்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவுக்குச் சென்றார். அங்கு, அவருக்கு எதிராக பாரதீய ஜனதாவினர் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர்.

இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும், மனுநூலை தடை செய்ய வலியுறுத்தியும், திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியினரை கண்டித்தும் போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டனர்.

மோதல்

இதற்காக மதுரை நகர், புறநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாண்டியம்மாள் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர்.

அப்போது, பாரதீய ஜனதாவின் ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் ஆனந்த ஜெயம், துணைத் தலைவர் தங்கம் மற்றும் அக்கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் வளாகப் பகுதிக்கு வந்தனர்.

அவர்கள் தேர்தல் பூத் ஏஜென்டுகள் நியமனம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தகவல் வெளியானது.

அப்போது பாரதீய ஜனதா கட்சியினர் சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கலெக்டர் அலுவலக மெயின் கேட் அருகில் திரண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், பாரதீய ஜனதா கட்சியினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பாரதீய ஜனதா கட்சியினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விரட்டி அடிக்க முயன்றனர். அவர்களை தடுக்க முயன்ற பாரதீய ஜனதா நிர்வாகி தங்கம் உள்பட சிலரின் சட்டை கிழிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து மோதலை தடுக்க முயன்றனர். போலீசாரின் அறிவுரையை கேட்காததால் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு நகர் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் சின்கா, துணை சூப்பிரண்டு சிவபிரசாத், ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர்.

இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சிவினர் காரை செருப்பால் தாக்க முயன்றும், பிரதமரின் உருவ பொம்மையை எரித்தும் கோஷமிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பாண்டியம்மாள் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த மோதலில் பாரதீய ஜனதாவினரை சட்டையைக் கிழித்து தாக்கியதில் தங்கம், ஆனந்த ஜெயத்திற்கு சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.