May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கங்கையில் நீராடிய புண்ணியம் வேண்டுமா?

1 min read

Want the blessings of bathing in the Ganges?

13/11/2020


ஒவ்வொரு இந்துக்களும் வாழ்க்கையில் ஒருநாளாவது காசிக்கு சென்று கங்கையில் நீராட வேண்டும் என்று விரும்புவார்கள். காசியில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் அனைவராலும் காசிக்கு சென்று கங்கையில் நீராடுவது என்பது இயலாத காரியம். ஆனால் செலவில்லாமல் கங்கையில் குளித்த புண்ணியத்தை தீபாவளி நாள் தருகிறது. தீபாவளி தினத்தில் எண்ணை குளியல் செய்தால் கங்கையில் நீராடிய பலனை பெறலாம் என்கிறது நமது புராணம்.
காசியில் காசி விசுவநாதரும்-விசாலாட்சியும் அருள் பாலிக்கின்றனர். காசி விசுவநாதரை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியில் பார்வதி, விசாலாட்சியாக மட்டுமின்றி அன்னபூரணியாகவும் காட்சியளிக்கிறார். காசியில் சிவ பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் பலஉண்டு. யாசகம் பெறும் பிச்சாடனராக, சுடுகாட்டு சாம்பலை உடம்பெல்லாம் பூசிக் கொள்ளும் பித்தனாக நாடகம் ஆடிய ஸ்தலம் காசி.
சிவபெருமானுக்கு ஐந்து தலை உண்டு. அதே போல் படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் ஐந்து தலை இருந்தது. ஒரு நாள் பிரம்மாவின் 5 தலையை பார்த்த பார்வதி அவர் தன் கணவர்தான் என்று நினைத்து பூஜை செய்துவிடுகிறாள். பின்னர் தன் தவறை உணர்ந்து வேதனைபட்டாள். இதனை அறிந்த சிவபெருமான் இந்த குழப்பத்திற்கு காரணம் 5 தலைதானே என்று கருதி பிரம்மாவின் தலைகளில் ஒன்றை எடுத்து விடுகிறார். ஆனால் அந்த தலை கீழே விழவில்லை. மாறாக அது திருவோடாக மாறி, சிவபெருமானின் கைகளில் ஒட்டிக்கொண்டது. எவ்வளவோ எடுக்க முயன்றும் முடியவில்லை.
தவறை உணர்ந்த சிவபெருமான், பிரம்மாவை வேண்ட, அவர் இந்த திருவோடு என்று நிரம்புகிறதோ அன்றுதான் இத்திருவோடு கையை விட்டு அகலும் என்று கூறுகிறார்.
ஒட்டிய திருவோட்டுடன் சிவன் ஒவ்வொரு வீடாக சென்று பிச்சை கேட்டார். எத்தனையோ பேர் அத்திரு- வோட்டில் அன்னமும், அரிசியும் போட்டாலும் அது நிறையவில்லை. போட்டவையெல்லாம் மாயமானது. அதனால்தான் சிவபெருமானுக்கு பிச்சாடனார் என்று பெயர் வந்தது.
கணவருக்கு வந்த சாபத்தை போக்க அன்னை பார்வதி களம் இறங்கினாள். அன்னபூரணியாக அவதாரம் கொண்டு சிவபெருமான் ஏந்திவந்த திருவோட்டில் அன்னமிட்டாள். போட்ட அன்னம் நிரம்பியது.
அடுத்த நொடியில் திருவோடு சிவபெருமானின் கையை விட்டு மாயமானது.
அன்னை பார்வதிதேவி அன்னபூரணியாக வந்து தர்மம் இட்ட இடம் காசி. எனவே அங்கு அன்னபூரணிக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு அன்னபூரணி ஒரு கையில் அன்ன- பாத்திரத்தையும் இன்னொரு கையில் கரண்டியுடனும் காட்சி தருகிறாள்.
காசிக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து அன்னபூரணியை தரிசனம் செய்யாமல் திரும்புவதில்லை. திரும்பவும் கூடாது.
அன்னபூரணி வழிபாடு
காசியில் ஓடும் கங்கை நதி மிகவும் புனிதமானது. பாவத்தை போக்கும் வல்லமை கொண்டது. இதனால் எண்ணற்றோர் இங்கு வந்து நீராடி செல்கின்றனர். இந்த ஆறு இமயமலையில் இருந்து வருவதால் எப்போதும் குளிர்ந்து காணப்படுகிறது. மேலும் மலையில் உள்ள மூலிகையில் பட்டுவருவதால் மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கிறது.
காசி கங்கையில் தினமும் மாலை 6 மணிக்கு பெண்கள் தீபம் ஏற்றி தண்ணீரில் மிதக்க விடுவார்கள். இதனால் மாலைப்பொழுதில் கங்கை தீப ஒளியில் மின்னும்.
காசிக்கு செல்வோர் 3 நாட்கள் தங்கி கங்கையில் நீராடுவது சிறப்பு. அப்போது அங்கு தங்களால் இயன்ற தானதர்மம் செய்ய வேண்டும்.
தீபாவளி திருநாளில் அன்னபூரணிக்கு விசேஷ வழிபாடு நடத்தப்படும். அன்று அன்னபூரணி லட்டுகளினால் செய்யப்- பட்ட தேரில் பவனிவருவாள். தீபாவளி அன்று கங்கையில் நீராடி அன்னபூரணி- யை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இதன் மூலம் பாவத்தைப் போக்கி செல்வத்தை பெறலாம்.
அப்படிபட்ட புண்ணியத்தை பெற அனைவராலும் காசிக்கு செல்ல முடியாது. அவர்கள் வீட்டில் இருந்தபடி பலனை பெற ஆண்டவனால் படைத்த நாள்தான் தீபாவளி. அன்றைய தினம் நாம் நல்லெண்ணெய் தேய்த்து அதிகாலையில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். மேலும் அன்றைய தினம் வீட்டில் அன்னபூரணியை வணங்கினால் செல்வம் பெருகும். அன்னபூரணியை வணங்குபவர்கள் தங்களால் இயன்றதை அன்றைய தினம் தானம் கொடுக்க வேண்டும். குறிப்பாக அன்னதானம் செய்வது நல்லது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.