May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

பெரிய புயலாக “நிவர்” வந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை

1 min read

The big storm “Nivar” came but did not cause much damage

26/11/2020

தமிழகத்தைத் தாக்கிய நிவர் புயல் பெரியதாக வந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தப் புயலுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.

“நிவர்” புயல்

இந்த ஆண்டு வங்கக்கடலில் பெரிய புயலாக “நிவர்” உருவெடுத்தது. முதலில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த பகுதியாக உருவானது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பின்னர் அது வலுப்பெற்று புயலாக உருவானது. அதற்கு “நிவர்” என பெயரிடப்பட்டது. இந்த புயல் வலுப்பெற்று நேற்று (புதன்கிழமை) பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

கரையைக் கடந்தது

எதிர்பார்த்தப்படி நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. அதிதீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.
அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. அதே நேரத்தில் சென்னையில் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியபடி, மழையும் பெய்து கொண்டிருந்தது. மேலும் சென்னை மெரினா கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது.

இதேபோல், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன், பலத்த காற்றும் வீசியது. ஆனால் அதன்பிறகு புயலின் நகர்வில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதன்பின்னர் இரவு 10.45 மணிக்கு அதிதீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது. அதிதீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. இந்த புயலால் தொடர் கனமழை ஏற்பட்டு சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளை சுற்றி வெள்ளநீர் தேங்கியுள்ளது.

இதேபோன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. புதுச்சேரி மற்றும் மரக்காணம் பகுதிகளுக்கு இடையே புயல் கடந்தபொழுதும், தமிழகத்திலும் நிவர் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது. ஆனாலும் எதிர்பார்த்த பாதிப்பு அதிகம் இல்லை.

3 பேர் பலி

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

101 குடிசைகள் சேதமடைந்து உள்ளன. 380 மரங்கள் சாய்ந்துள்ளன. அத்தியாவசிய பணிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் பார்வையிட்டார்

புயல்காரணமாக கடலூரில் முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அப்போது முதியவர் ஒருவர் திடீரென தொட்டு வணங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து புயல் பாதுகாப்பு மையத்தில் மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் முதல் -அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.