மாமல்லபுரத்தில் திருடிய சாமி சிலையுடன் 2 பேர் கைது
1 min read
2 arrested for stealing Sami idol in Mamallapuram
29/11/2020
மாமல்லபுரத்தில் திருடப்பட்ட பூதேவி சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிலை
சென்னையை அடுத்த மாமல்லபுரம் பக்கிங்ஹாம் கால்வாய் பாலம் அருகே உலோக சாமி சிலையுடன் 2 பேர் சந்தேகத்துக்கிடமாக சுற்றிக்கொண்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான தனிப்படை போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் நெரும்பூர் இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்த வேல்குமார்(வயது 33), வீராபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த செல்வம்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த பையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை அடி உயரம் கொண்ட பூதேவி உலோக சாமி சிலை இருந்தது.
ஆனால் அவர்களிடம் சிலை தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விற்க முயற்சி
இந்த சிலையின் சிரசு சக்கரம், தங்கம் எவ்வளவு இருக்கிறது என்பதற்காக அறுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அவர்கள் பல கோடி ரூபாய்க்கு விற்க முயற்சிக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. எந்த கோவிலில் இந்த சாமி சிலை திருடப்பட்டது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
சாமி சிலையை மீட்டு, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங், ஐ.ஜி. அன்பு, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.