2021புத்தாண்டு பலன்கள்/ கன்னி
1 min read
2021 New year palngal /Kanni / Kaliyur Narayanan
கன்னி ராசி அன்பர்களே! உங்களின் மென்மையான போக்கு அனைவரையும் கவரும் தன்மை உடையதாக இருக்கும். உங்கள் நட்பு கிரகங்களான குரு, கேது சாதகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மலர்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும்.
குரு 5-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்திவைப்பார்.பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மேலும் அவரது 5,7-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.ஆனால் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார்.அவர் 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 6-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும்.ஆனால் குருவின் 9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.
தற்போது சனிபகவான் 5-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனிபகவான் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை தருவார் மனைவி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொள்ளலாம். என்பது பொதுவிதி. அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும். மேலும் சனிபகவான் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார்.
கேது 3-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்துகொண்டிருக்கிறார். அவர் இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமா -க்குவார்.
ராகு 9-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது 4,7,மற்றும்11-ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சாதகமாக உள்ளன. இதன் மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
மேற்கண்ட கிரக நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சிறப்பாகவும் அமையும். எதையும் வெற்றிகரமாக முடித்து காரிய அனுகூலத்தை காணலாம். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு புனித ஸ்தலங் -களுக்கு சென்று வருவீர்கள் ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். புதியவீடு வாங்கலாம். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபோகலாம். வண்டி வாகனங்கள் வாங்கலாம். வீட்டில் ஒற்றுமை ஏற்படும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். பணப்புழக்கம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.நகை-ஆபரணங்கள் வாங்கலாம். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அலைச்சல் இருக்கும். சிற்சில தடைகளை மீறித்தான் அதற்கான அனுகூலம் பிறக்கும். அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மன உளச்சல், உறவினர் வகையில் வீண்பகை உருவாகலாம். கணவன்-மனைவி இடையே சிற்சில மனக்கசப்புகள் வரலாம்
உத்தியோகம்: போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அரசு ஊழியர்கள்முன்னேற்றம் காணலாம். கோரிக்கை -கள் நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஆசிரியர்களு -க்கு குரு உயர்வை தருவார். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் வெறுப்பு வரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை.
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நமக்கு ஏது எதிரிஎன்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்.மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறுகள் வரலாம்.எனவே அவர்கள்பக்கம் ஒரு கண் இருப்பது நல்லது. . கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.நல்ல வருமானத்தை பெறுவர். தரகு,கமிஷன் தொழில் விருத்தி அடையும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர் புதிய ஒப்பந்தங் -கள் கிடைக்கும். புகழ்,பாராட்டு வரும். அரசியல் வாதிகள்,பொதுநல தொண்டர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். மனதில் வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. கவுரவத்தை இழக்கா-வண்ணம் இருப்பர். அந்த காலத்தில் தீவிர முயற்சிகள் பேரில் முன்னேற்றம் காணலாம்.
மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். வெற்றி கிட்டும். மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். குருவால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள் சிறப்பு காண்பர். நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானத்தைக் காணலாம்.ஆடு,கோழி,பசு,கால் நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளை- களால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். பெண் காவலர்கள் உன்னத பலனை எதிர்பார்க்கலாம். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். மேலும் சனிபகவானின் 7-ம் இடத்து பார்வையால் பொன்,பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிற்சில விஷயங்களில் விட்டுகொடுத்து போகவும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.
பரிகாரம்: சனி பகவானுக்கு எள்சோறு படைத்து வணங்குங்கள். விநாயகரை வணங்கி வாருங்கள். சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். 4-4-2021 முதல் 14-9-2021 வரை வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம்.