ஜார்க்கண்ட்டில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.33.60 கோடி கொள்ளை
1 min read
Bank employees tied up; Rs 33.60 crore looted in Jharkhand.
26.9.2026
வங்கியில் சுமார் ரூ.33.62 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரின் மஸ்ஜித் ரோடு பகுதியில் கனரா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் காலை வங்கி திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்தது. பின்னர்,அங்கிருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு காவலரை மிரட்டி பிணைக் கைதிகளாக பிடித்தனர். பாதுகாப்பு காவலர் தடுக்க முயற்சித்த போது அவரை அந்த கும்பல் தாக்கியுள்ளது.
இதையடுத்து ஊழியர்களின் கைகள் மற்றும் கால்களை டேப்பால் கட்டி, வாயை மூடியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வங்கி மேலாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி, பாதுகாப்பு அறையின் சாவியை பெற்றுள்ளனர். பின்னர் அங்கு வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த தங்க நகைகள் பெட்டகத்தை திறந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
வங்கியின் பாதுகாப்பு அறையில் சுமார் 650 பாக்கெட்டுகளில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் சுமார் 23.80 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.33.20 கோடி ஆகும். இது தவிர, வங்கியில் இருந்த சுமார் ரூ.42 லட்சம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரத்திற்குள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு வங்கிக்கு அவர்கள் வந்த பைக்குகளில் வெவ்வேறு வழிகளில் தப்பி சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோல்முரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு. கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் வங்கியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையர்களை விரைந்து பிடிக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்கள் அடையாளம் மற்றும் அவர்கள் தப்பி சென்ற பாதைகளை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.