பெண்களிடம் ஆபாச பேட்டி எடுத்து யூ டியூப்பில் ஒளிபரப்பிய 3 பேர் கைது
1 min read3 arrested for taking pornographic interview with women and broadcasting it on YouTubevolume_upcontent_copysharestar_border
15.1.2021
பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து அதை யூ டியூப்பில் ஒளிபரப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
யூ டியூப்
இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரையும் இப்போது இணைய தளம் கவர்ந்து வருகிறது. அதுவும் யூ டியூப்பை பலர் பார்க்கிறார்கள். இதனால் புற்றீசல் போல யூ டியூப் சேனல்கள் பல தோன்றிவிட்டன. இதன் மூலம் பலர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். யூ டியூப் சேனலை அதிகமானோர் பார்த்தால் வருமானம் கூடும் என்பதால் அதை கவர்ச்சிகரமாக சிலர் ஒளிபரப்புகிறார்கள். சிலர் நல்ல நிகழ்ச்சிகளின் இடையே, பாலியல் உணர்வை தூண்டும் நிகழ்ச்சிகளை இடையிடையே புகுத்தி விடுவார்கள்.
அதேபோல் சென்னை டாக்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்தவர்கள் ஆபாசத்தை புகுத்தி உள்ளனர். அதாவது இந்த சேனலில் ஆபாசத்தை நகைச்சுவை கலந்து வழங்கி வந்தனர்.
சமீபத்தில் சென்னை பெசன்ட்நகர், நீலாங்கரை கடற்கரை பகுதிக்கு உடற்பயிற்சி மற்றும் காற்று வாங்க வரும் பெண்களிடம் முதலில் பேச்சு கொடுத்து, பின்னர் படிப்படியாக ஆபாசமான கேள்விகளை கேட்டு பேட்டி எடுத்து, சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் ஒளிபரப்பி விட்டனர்.
அந்தரங்க விசயங்கள்
அந்தப் பெண்கள் தாங்கள் கொடுக்கும் பேட்டி யூடியூப் சேனலில் வெளிவரும் என்பது கூட தெரியாமல் சில பெண்கள், தங்கள் அந்தரங்க விசயங்களை கூட பகிர்ந்துள்ளனர். இளம்பெண்கள் தங்களது காதல் அனுபவங்களை வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளனர்.
தங்களுக்கு வேண்டிய பெண்களை பொதுமக்களை போல கடற்கரை பகுதிக்கு வரவழைத்து, முதலில் ஆபாசமான கேள்விகள் கேட்டு பேட்டி எடுப்பார்கள். இதைப்பார்த்து மற்ற இளம்பெண்கள், இளைஞர்களை தூண்டிவிட்டு பேட்டி எடுத்துள்ளனர். தங்களது பேட்டி ஆபாசமான முறையில் யூடியூப் சேனலில் வெளியானதை பார்த்து பேட்டி கொடுத்த பல பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல் அப்பாவி பெண்களை ஏமாற்றி ஆபாசமாக பேட்டி எடுத்து, சட்டவிரோதமாக வெளியிடுவதாக சென்னை சாஸ்திரிநகர் போலீசில் நிறைய புகார்கள் குவிந்தன.
இதுபோல் இளம்பெண்களை ஏமாற்றி எடுத்த பேட்டி அடங்கிய 200 வீடியோக்கள் சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளதாகவும், சுமார் 7 கோடி பேர் அவற்றை பார்த்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-கைது
இது தொடர்பாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலின் தொகுப்பாளர் ஆசின்பத்சா (வயது 23) , கேமராமேன் அஜய்பாபு (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் (31) என்பவரும் கைதானார்.
இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த யூடியூப் சேனல் 2019-ம் ஆண்டு முதல் செயல்படுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சென்னை பெசன்ட்நகர், நீலாங்கரை கடற்கரை பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால், அது பற்றி 8754401111 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சினிமா காட்சிகளை தணிக்கை செய்வது போல, யூடியூப் சேனல்களில் வெளியாகும் காட்சிகளையும் தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.