June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

அன்று கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்கினோம்; இன்று தடுப்பூசி கிடைத்தும் தயங்குகிறோம்

1 min read

We were terrified to see Corona that day; We are reluctant to get the vaccine today

17/1/2021

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இந்தியாவின் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்துள்ள ‘கோவிஷீல்டு’,  ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக நாடு முழுவதும் 3,006 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பூசி போடுவதில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தடுப்பூசி குறித்த அச்சத்தை மக்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளையும், தவறான பிரசாரங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  அடர் பூனாவாலா, தனது நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை தனது உடலில் செலுத்திக்கொண்டார். இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  தடுப்பூசியின் பாதுகாப்பையும், நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த, தான் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகம்-ஆந்திராவில் முதல்நாள் பக்கவிளைவுகள் இல்லை

இந்நிலையில், முதல் நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஆந்திரப்பிரதேசத்தில் சுமார் 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. எந்தப் பகுதியிலும் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல் நாள் தடுப்பூசி முகாம் பற்றி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“முதல்நாள் (ஜன. 16)  மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 2 ஆயிரத்து 783 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.  முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட முன் களப்பணியாளர்களுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை.

  இது நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டிய மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி.  சென்னையைப் பொருத்தவரை 12 மையங்கள் மூலமும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 166 மையங்கள் மூலமுமாக இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முன்களப்பணியாளர்களையடுத்து பொதுமக்கள் முறை வரும்போது,  அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசி போடும் பணி இன்று முதல் முழுவீச்சில் நடைபெறும். இதுவரை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 6 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை.”

இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

‘இரண்டாம் அலையைத்தடுக்க தடுப்பூசி அவசியம்’

தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். பிறகு அவர் கூறுகையில்,,”சுகாதாரத்துறைச் செயலாளர், மருத்துவப்பணிகள் சேவைக்கழகத்தலைவர்-மேலாண் இயக்குநர் என்ற அடிப்படையில் நானும் முன்களப்பணியாளர் தான். அதனால் தடுப்பூசி எடுத்துக்கொணடேன். தறபோது போடப்படும் இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. கொரோனா வைரசின் 2-வது அலையைத் தடுக்க தடுப்பூசி அவசியம்”  என்றார்.    

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “தடுப்பூசி போட்டுக் கொள்வோரிடம் ஒப்புதல் படிவம் பெறப்படும். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு பக்கவிளைவு ஏதேனும் ஏற்பட்டால், அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் உயர் தரமான சிகிச்சை வழங்கப்படும் என அந்தப் படிவத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும். தடுப்பு மருந்து காரணமாக மோசமான பக்க விளைவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், டெல்லியில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 52 பேருக்கு உடல் இறுக்கம், மயக்கம், தோல் அரிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. எனினும், சிறிது நேர மருத்துவ கண்காணிப்புக்குப் பின் பெரும்பாலோனார் வீடு திரும்பி விட்டனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாவலர் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட 20 நிமிடங்களில் ஒவ்வாமை ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள், தொடர்ந்து அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொல்கத்தாவிலும் 35 வயது மதிக்கத்தக்க செவிலியர் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் மயக்கம் அடைந்தார்.

தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன

இதுபோன்ற தகவல்களால் இன்று 2-ம் நாள் தடுப்பூசி முகாம் தொடங்கியபோது, மருத்துவப்பணியாளர்களே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டினர். பதிவு செய்தவர்கள் அனைவரும் வராமல் ஓரிருவராகவே வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரசு மருத்துமவனையில், தடுப்பூசி போடுவதற்காக 86 முன்களப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நண்பகல் 12 மணி வரை ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள வரவில்லை. அங்கு பணியாற்றிய எலெக்ட்ரீசியன் விருப்பம் தெரிவித்தததால், அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள யாருமே வராததால் ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சில தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது. 

புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப்பிரதேசத்திலும் இதேபோன்று குறைந்த நபர்களே வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

இதையடுத்து, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடிக்கு ஒரு அவசர கடிதம் எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

“வெளிநாடுகளில் அரசு நிர்வாகத்தினர், அரசியல் கட்சியினர் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

அதேபோல் இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு முதல்கட்டத்தில் தடுப்பூசி போட அனுமதித்தால் மக்கள் நம்பிக்கையுடன் வருவார்கள் மக்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்படும்.” 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாததற்கு தமிழிசை சொல்லும் காரணம்

இதற்கிடையே, தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்து தற்போது தெலுங்கானா ஆளுநராகப் பதவி வகித்து வரும் தமிழிசை சவுந்தர்ராஜன் ஒரு மருத்துவர் என்ற நிலையில் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. 

இதுபற்றி அவர் கூறும்போது, “நான் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு முன்களப்பணியாளருக்கு கிடைக்கவேண்டிய தடுப்பூசி கிடைக்காமல் போய்விடும். அதனால் தான் இப்போதைக்கு நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை” என்றார்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கே.செந்தில், முதல் நாளிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர்  கூறியதாவது:-

“மருத்துவப் பணியில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு பெரிய உடனடி பக்க விளைவுகள் இல்லாத நிலையில் அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. அது உண்மையாக இருந்தாலும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் அதனைப் பற்றி கருத்துக் கூற இயலும்.

அவசர அனுமதியுடன் வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள முறையுடன் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் பிற நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுப்பவர்கள் தொடர்புடைய சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு தடுப்பூசிகளை பெறலாம். பயனாளிகள் இதை கருத்தில் கொண்டு, சுயமாக முடிவெடுக்கவேண்டும்.

கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் அரசுத் துறை மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள்,  ஊழியர்களே ஈடுபட்டனர். எனவே, தடுப்பூசிகளை அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் வழங்க வேண்டும்.

அதன்பின், தனியார் மற்றும் வெளிச்சந்தைகளில் வழங்கப்பட வேண்டும். மத்திய-மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் இந்த தடுப்பூசி மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் விதமாக, மருத்துவ சங்க நிர்வாகிகள் தாமாக தடுப்பூசிகளை போட்டுக் கொள்வார்கள்.”

இவ்வாறு செந்தில் கூறினார்.

10 மாதத்திற்கு முன் நடந்தது என்ன? திரும்பிப் பாருங்கள் 

தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிபுணர்கள் இதுசம்பந்தமாக கூறும் தகவல்கள் பின்வருமாறு:-

பொதுவாக, தடுப்பூசிகளில் ஒருசிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அதற்கு டாக்டர்கள் என்ன மருந்து சாப்பிடவேண்டும் என்பதை கண்காணித்து சொல்லி விடுவார்கள். தடுப்பூசி பரிசோதனை முடிவுகளில் 85 சதவீதம் பயன் அளிக்கிறது என்று சொன்னார்கள் என்றால், 100-ல் 85 பேருக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. 15 சதவீதம் பேருக்கு சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம் என்று அர்த்தம். இதை வைத்து ஒட்டுமொத்தமாக தடுப்பூசியைவேண்டாம் என ஒதுக்கி விட முடியாது.  இன்று கொரோனா பாதிப்புகள் குறைந்து இருக்கலாம். ஆனால் 10 மாதங்களுக்கு முன் கொரோனாவால் சகல விதங்களிலும் நாம் பட்ட அவதியை நினைத்துப் பார்க்கவேண்டும். அதுபோன்ற நிலை திரும்பாமல் தடுக்க தடுப்பூசி மட்டுமே முக்கியமான கேடயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”

 இவ்வாறு கூறிய நிபுணர்களிடம், நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 முதியவர்கள் உயிர் இழந்தசெய்தியை சுட்டிக்காட்டியபோது அவர்கள் அளித்த விளக்கம் வருமாறு:-

“இறந்தவர்கள் 75, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் இறப்புக்கு தடுப்பூசி மட்டும் காரணமா அல்லது அவர்களுக்கு வேறு ஏதும் பெரிய அளவிலான நோய் இருந்ததா அல்லது தடுப்பூசியை சரியான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பதில் தவறு நடந்ததா என்றுதெரியவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட பைசர் நிறுவனத்திடம் அந்நாட்டு அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும். உலகம் முழுக்க இதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை மிகச்சிறுஅளவில் தான் உள்ளது. அந்த பாதிப்புக்கும் தடுப்பூசி தான் காரணம் என்று முழுஅளவில் இன்னும் நிரூபணமாகவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.”

இவ்வாறு நிபுணர்கள் விளக்கம் தந்தனர்.

தலைவர்கள் நம்பிக்கை தருவார்களா?

அறிவியல் ரீதியாக எவ்வளவோ தரவுகள் அளிக்கப்பட்டாலும், பொதுமக்கள் அனைவரிடமும் முழுநம்பிக்கை ஏற்படுவதற்கு தொடர்ந்து நம்பிக்கையூட்டும் தகவல்கள் வந்தாக வேண்டும்.

இந்தியாவைப் பொருத்தமட்டில், ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல் அமைச்சர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஆகியோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அமெரிக்கா, ரஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தலைவர்கள் இதற்கு முன் உதாரணமாக நடந்துகொண்டதை நம் தலைவர்களும் பின்பற்றலாம் என்று, பொதுமக்களில் பலரும் பரவலாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

–மணிராஜ்,

திருநெல்வேலி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.