May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியிலும் சேர அனுமதி

1 min read

Rajini People’s Assembly allowed to join any political party

18.1.2021

ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் என்று அனுமதி அளித்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்ததை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் கட்சியின் கட்டமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து, அவரது உடல்நலன்தான் தங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், இதுதொடர்பாக அவர் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினர்.

போராட்டம்

ஆனால், ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும் பெரும் ஆவலோடும், எதிர்பார்ப்புடனும் காத்திருந்த ரசிகர்களிடம் அவரதுஅறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி அறவழிப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதில் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று மன்றத் தலைமையும், நிர்வாகிகளும் கூறிய பிறகும், காவல் துறையின் அனுமதி பெற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரஜினி ரசிகர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அறவழிப் போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள், மக்கள் மன்றத்தினர் இதில் கலந்துகொண்டு, ரஜினி அரசியல் கட்சிதொடங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதைத் தொடர்ந்து, ரஜினி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

அரசியல் கட்சியில் சேரலாம்

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி வி.எம்.சுதாகர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம். மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம். வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் ரஜினி ரசிகர்தான் என்பதை மறுந்துவிடக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பு நேற்று திமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.