May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு

1 min read

Jayalalithaa Memorial House inaugurated at Boise Garden, Chennai

28.1.2021

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றி அது இன்று திறக்கப்பட்டது. அதேபோல் சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.

ஜெயலிதா நினைவு இல்லம்

மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டு நேற்று (புதன்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய ‘வேதா நிலையம்’ வீட்டை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார். அதன்படி அந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு, நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக என்னென்ன ஏற்பாடுகளை செய்யலாம் என்பது குறித்து 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் இதுதொடர்பான பரிந்துரையை அந்த குழுவினர் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிந்துரையின்படி ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீட்டுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, பொருட்கள் வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்துவந்தன. அந்த பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டன.

பொருட்கள்

‘வேதா நிலையம்’ 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ளது. அந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளி பொருட்களும், வெள்ளி பாத்திரங்களும் உள்ளன.

சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கறுப்பு&-வெள்ளை அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையை பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வியாழக்கிழமை) காலை திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

மெரினாவில் சிலை

சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் லேடி வெலிங்டன் கல்லூரியிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டது. அங்கு ஜெயலலிதாவின் 9 அடி உயரம் கொண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்தச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிலை திறப்பின்போது அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் வடிவமைத்த டிரோன் மூலம் ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.