April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

கரூர் அருகே கிராமத்து இளைஞர்களுடன் பிரியாணி சமைத்த ராகுல் காந்தி

1 min read

Rahul Gandhi cooks biryani with village youth near Karur

31.1.2021

கரூர் அருகே கிராமத்து இளைஞர்களுடன் பிரியாணி சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தார் ராகுல்காந்தி.

ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களை அணுகி சந்தித்து பேசினார்.
மேலும் கடைகளில் டீ குடித்தார். இதுபோல ஒரு காட்டுப்பகுதிக்கு சென்ற அவர், கிராமத்து இளைஞர்களுடன் சேர்ந்து காளான் பிரியாணி தயார் செய்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிராமத்தில் வீட்டு முறைப்படி செய்யப்படும் சமையலை வீடியோ எடுத்து யூ-டியூப்பில் பதிவிடும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குழுவினர், காளான் பிரியாணி உணவினை கரூர் அருகே அரவக்குறிச்சி ரோட்டில் ஒரு முருங்கை தோப்பில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ராகுல்காந்தி சென்று அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார். அவர் அந்த இடத்திற்கு செல்லும் போது மிகவும் ஆவலுடன் சென்றார். அந்த குழுவினரும் மகிழ்ச்சி பொங்க அவரை வரவேற்றனர்.

சமையல் செய்தார்

சமையல் பணியில் தானும் ஏதேனும் உதவி செய்கிறேன் என ஆர்வமாக ராகுல்காந்தி கேட்டார். மேலும் பிரியாணிக்கு வெங்காய சம்பல் தயாரிக்கும் பணிக்கு உதவினார். இதில் ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை தமிழில் எடுத்துக்கூறி பாத்திரத்தில் அவர் போட்டார்.

மேலும் தயிரை ஊற்றும் போதும் தயிர் என தமிழில் கூறினார். கல் உப்பையும் தமிழில் கூறி பாத்திரத்தில் போட்டு அதனை கரண்டியால் கிளறினார். மேலும் அதில் ஒரு கரண்டியில் சம்பலை எடுத்து ருசி பார்த்தார். அதற்கு அவர் நன்றாக உள்ளது என ஆங்கிலத்தில் கூறினார். அதற்கு அங்கிருந்த சமையலர்கள், நீங்கள் தயார் செய்தது தானே… என்று கூறினர். அப்போது ராகுல்காந்தி புன்னகைத்தார்.

அதன்பின் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த காளான் பிரியாணியையும், அதனை கிளறிவிடுவதையும் பார்த்த அவர், சுடச்சுட வெளிவந்த புகையும், வாசனையும் மிக அருமையாக இருப்பதாக கூறினார். மேலும் ஒரு தேசிய தலைவர் போல இல்லாமல் சர்வ சாதாரணமாக தரையில் விரிக்கப்பட்டிருந்த ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்திருந்து, சமையல் பணியை மேற்கொண்டு வரும் குழுவினரிடம் அவர்களை பற்றி விவரம் கேட்டறிந்தார்.

இதில் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று இதே கிராமத்து சமையலை செய்ய வேண்டும் எனக்கூறினார். அதற்கு ராகுல்காந்தி, அமெரிக்காவில் தனது நண்பர் இருப்பதாகவும், அங்கு சென்று உங்களது சமையலை செய்ய ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இதற்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். மேலும் நம் நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்கு சென்று இதே சமையலை செய்ய அறிவுறுத்தினார்.

ருசித்து சாப்பிட்டார்

தலைவாழை இலையில் காளான் பிரியாணி உணவினை அவர் ருசித்து சாப்பிட்டார். மேலும் தமிழகத்தின் இந்த உணவு எப்படி இருக்கு என இளைஞர்கள் குழுவினர் கேட்க, அவர் ‘நல்லா இருக்கு’ ‘ரொம்ப நல்லா இருக்கு’ என தமிழில் கூறினார்.

மேலும் அடுத்த முறை வரும்போது ஈசல் பிரியாணி செய்து தருமாறு கேட்டார். சுமார் 14 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது அவர் எப்போது இந்த இடத்துக்கு சென்றார்? எப்படி சென்றார்? என பலரது மனதில் கேள்வியை எழுப்பியது.

ரகசிய ஏற்பாடு

இந்த பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்துள்ளது. ஆனால் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்பட யாருக்கும் இந்த தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக ராகுல்காந்தி வைத்திருந்திருக்கிறார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த இடத்தில் அவர் இருந்துள்ளார். முக்கியமான தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையில் அவர் தனியாக சென்று உணவருந்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த காட்சிகளை கொண்ட வீடியோவை யூடியூப்பில் நேற்றுவரை 41 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.