May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

மதுபான அதிபர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் கேட்டார்- அமலாக்கத்துறை தகவல்

1 min read

Arvind Kejriwal demanded bribe from liquor barons- Enforcement Department information

26.4.2024
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.அம்மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கடந்த 20-ந் தேதி அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.அதன்படி, அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் 734 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை வகுப்பதில் நேரடியாக ஈடுபட்டார். மதுபான அதிபர்களுக்கு சலுகைகள் அளிப்பது தொடர்பான சதித்திட்டத்தில் தன்னுடைய மந்திரிகள் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களுடன் பங்கேற்றார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தொடர்பு குறித்த ஆதாரங்கள் தெரிய வந்தன. அவர் மதுபான கொள்கை ஊழலில் மூளையாகவும், முக்கிய சதிகாரராகவும் இருந்தார்.மதுபான கொள்கையில் மதுபான அதிபர்களுக்கு சலுகைகள் காட்டியதற்கு பிரதிபலனாக ‘சவுத் குரூப்’ என்ற மதுபான அதிபர்கள் குழுவிடம் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் கேட்டார்.

லஞ்சமாக கிடைத்த பணத்தின் ஒருபகுதியான ரூ.45 கோடியை கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கோவா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பயன்படுத்திக் கொண்டார். அந்த தேர்தல் பிரசார பணிகளுக்கு ஆம் ஆத்மி ஈடுபடுத்திய நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தங்களுக்கு ரொக்கமாக பணம் கொடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஆம் ஆத்மி ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது. ஊழலில் அக்கட்சி பெரிய அளவிலான பயனாளியாக இருந்தது. ஆம் ஆத்மியில் முடிவு எடுக்கும் உச்சபட்ச அதிகாரம், கெஜ்ரிவாலுக்கு இருப்பதால் அவரும் குற்றவாளி ஆவார்.சட்டவிரோத பண பரிமாற்றம் அவருக்கு தெரிந்தே நடந்துள்ளது. அதை தடுக்க அவர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அவர் தனது முதல்-மந்திரி பதவியை சட்டவிரோத பண பரிமாற்றம் நடப்பதற்கு பயன்படுத்திக் கொண்டார்.

மேலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டப்படி, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதற்கான ஆதாரங்கள், விசாரணை அதிகாரியிடம் இருந்தன. அவர்தான் கைது செய்யும் அதிகாரம் படைத்தவர். மேலும், கைது செய்வதற்கான சூழ்நிலைக்கு விசாரணை அதிகாரியை கெஜ்ரிவால் தள்ளினார். அதாவது, 9 தடவை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மார்ச் 21-ந் தேதி அவரது வீட்டில் சோதனை நடந்தபோது கூட கேள்விகளுக்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. தட்டிக்கழிப்பதிலேயே கவனமாக இருந்தார். முற்றிலும் ஒத்துழைப்பு இன்றி நடந்து கொண்டார். எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அவரை கைது செய்ததில் தீய நோக்கம் எதுவும் இல்லை. அவருக்கு எதிரான ஆதாரங்களை 3 கோர்ட்டுகள் ஆய்வு செய்துள்ளன. எனவே, நியாயமான கைது நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது.கைது விவகாரத்தில், அரசியல்வாதிக்கும், சாதாரண கிரிமினலுக்கும் வெவ்வேறு அணுகுமுறையை பின்பற்றுவது, அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ கொள்கைக்கு முரணானது. அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் 4-வது பிரிவின்கீழ் தண்டிக்கத்தக்க குற்றங்களை கெஜ்ரிவால் செய்துள்ளார். 70-வது பிரிவின்கீழ் அவர் தண்டிக்கத்தக்கவர். ஆகவே, கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவில் முகாந்திரம் இல்லை. அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அமலாக்கத்துறை கூறியுள்ளது. இம்மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.