பனிமலை உடைந்து வெள்ளப்பெருக்கு 100 பேரை மாயம்
1 min readThe iceberg broke and flooded 100 people
7.2.2021
உத்திரகாண்ட் மாநிலத்தில் பனிமலை உடைந்து வெள்ப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் இறந்துள்ளனர். 100 பேர் மாயமானார்கள்.
வெள்ளப்பெருக்கு
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிமலை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. உடைந்த பனிக்குன்றின்பெயர் நந்திதேவி. இந்த தண்ணீர் அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
மீட்பு பணி
இந்திய விமான படையின் இரண்டு மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் ஒன்று என மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேவைக்கேற்றாற்போல் கூடுதல் ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மீட்பு பணிகளுக்கான ஆலோசனை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டம் ஒன்றும் நடந்து வருகிறது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமத்தில் ராணுவ வீரர்கள், 2 மருத்துவ குழுக்கள் மற்றும் பொறியியல் அதிரடி படை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்களும் சென்றுள்ளன.
தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமம் அருகே சென்று நிலைமையை கண்காணித்து வருகிறார்.
9 பேர் உடல்கள் மீட்பு
இதேபோன்று இந்தோ-திபெத் எல்லை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை 9 உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன என இந்தோ-திபெத் எல்லை போலீசின் இயக்குனர் ஜெனரல் எஸ்.எஸ். தேஸ்வால் கூறியுள்ளார்.
அந்த பகுதியில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் மலாரி பகுதியருகே பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டு விட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முதல் மந்திரி ராவத்திடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவரிடம், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள்.